தங்க கடத்தல் வழக்கில் திடீர் திருப்பம்; அமைச்சர் ஜலீலிடம் என்ஐஏ விசாரணை: பதவி விலகக் கோரி போராட்டம் தீவிரமடைவதால் பரபரப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
தங்க கடத்தல் வழக்கில் திடீர் திருப்பம்; அமைச்சர் ஜலீலிடம் என்ஐஏ விசாரணை: பதவி விலகக் கோரி போராட்டம் தீவிரமடைவதால் பரபரப்பு

திருவனந்தபுரம்: தங்கம் கடத்தப்பட்ட விவகாரத்தில் கேரள உயர்கல்வித்துறை அமைச்சர் ஜலீலிடம் இன்று என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அமைச்சரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவது கேரள அரசில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அவர் பதவி விலகக் கோரி கடந்த இரு நாட்களாக காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. திருவனந்தபுரம் அமீரக தூதரகம் மூலம் தங்கம் கடத்தப்பட்டது தொடர்பாக சுங்க இலாகா, என்ஐஏ, மத்திய அமலாக்கத்துறை ஆகிய அமைப்புகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றன.

தூதரகம் வழியாக துபாயில் இருந்து குரான் கொண்டு வரப்பட்டது. அந்த பார்சலில் தங்கம், வெளிநாட்டு கரன்சி வந்திருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கேரள உயர்கல்வித்துறை அமைச்சர் ஜலீலிடம் 2 முறை மத்திய அமலாக்கத்துறை விசாரணை நடத்தி உள்ளது.

விசாரணையில் அவர் அளித்த விவரங்களை சுங்கஇலாகாவும், என்ஐஏவும் பரிசோதித்து வருகிறது. இதில் பல முரண்பாடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து எந்த நேரத்திலும் அமைச்சர் ஜலீலிடம் என்ஐஏ விசாரணை நடத்தும் என கூறப்பட்டது. இந்நிலையில் இன்று விசாரணைக்கு ஆஜராக ேநாட்டீஸ் கொடுக்கப்பட்டது.

இதையடுத்து திருவனந்தபுரத்தில் இருந்த அமைச்சர் ஜலீல் உடனடியாக கொச்சிக்கு விரைந்தார். காலை 9. 30 மணிக்கு ஆஜராக கூறப்பட்டிருந்தது.

ஆனால் அவர் காலை 6. 30 மணிக்கே என்ஐஏ அலுவலகம் சென்றுவிட்டார். 9. 30 மணியளவில் அவரிடம் விசாரணை தொடங்கியது.

விசாரணையின்போது, சொப்னா கும்பலுடன் உள்ள தொடர்பு குறித்த விவரங்கள், மத்திய அரசிடம் அனுமதி பெறாமல் அமீரக தூதரகத்தை தொடர்பு கொண்டது ஏன் என்பது போன்ற விவரங்களை கேட்டனர்.

ஏற்கனவே அமலாக்கத்துறை விசாரணை நடத்தியதால் கடந்த 4 நாட்களுக்கு மேலாக அமைச்சர் ஜலீல் பதவி விலக கோரி காங்கிரஸ், பாஜா உள்பட எதிர்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கேரளா முழுவதும் இந்த போராட்டம் மேலும் தீவிரமடைந்துள்ளது.

என்ஐஏ விசாரணை நடத்துவதால் அமைச்சர் பதவி விலக வேண்டும் என கேரள எதிர்கட்சி தலைவர் ரமேஷ்சென்னிதலா, பாஜ மாநில தலைவர் சுரேந்திரன், முஸ்லிம் லீக் பொது செயலாளர் குஞ்ஞாலிகுட்டி ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர். இது கேரள அரசில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து ரமேஷ்சென்னிதலா கூறுகையில், தற்போது கேரளாவில் மிக மோசமான சூழ்நிலை நிலவி வருகிறது. ஒரு அமைச்சரை என்ஐஏ விசாரிப்பது எங்குமே நடைபெறாத சம்பவமாகும்.

இது கேரளாவுக்கே வெட்கக்கேடாகும்.

அமைச்சர் ஜலீலை முதலமைச்சர் பினராயி விஜயன் தான் பாதுகாக்கிறார்.

அவர் உடனடியாக பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறினார்.

அமைச்சரிடம் விசாரணை நடப்பதால் கொச்சி என்ஐஏ அலுவலகத்தை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

.

மூலக்கதை