பிரதமர் மோடிக்கு 70வது பிறந்தநாள்: மத்திய அமைச்சர்கள், தலைவர்கள் வாழ்த்து

தமிழ் முரசு  தமிழ் முரசு
பிரதமர் மோடிக்கு 70வது பிறந்தநாள்: மத்திய அமைச்சர்கள், தலைவர்கள் வாழ்த்து

புதுடெல்லி: பிரதமர் மோடியின் 70-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. நாடு முழுவதும் பாஜவினர் கேக் வெட்டியும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

மோடியின் பிறந்தநாளையொட்டி அவருக்கு அரசியல் தலைவர்கள், கட்சி நிர்வாகிகள், பிரபலங்கள், வெளிநாடுகளின் தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பாஜ தலைவர் ஜே. பி. நட்டா, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், ஜெய்சங்கர், கிரண் ரிஜிஜு, ஜிதேந்திர சிங் உள்ளிட்ட பலர் டுவிட்டரில் வாழ்த்துக்களை பதிவு செய்துள்ளனர்.

காங்கிரஸ் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி, பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர்  தனது டுவிட்டர் பதிவில், ‘பிரதமர் மோடிக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்’ என்று தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டும் பிரதமருக்கு   ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்திருந்தார்.

ரஷ்ய அதிபர் புதின், நேபாள பிரதமர் ஷர்மா ஒலி உள்ளிட்ட உலக தலைவர்கள் மோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

நேபாள பிரதமர் ஷர்மா ஒலி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘பிறந்த நாளான இந்த புனித நாளில் பிரதமர் நரேந்திர மோடிக்கு அன்பான வாழ்த்துக்கள். தாங்கள் நல்ல ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடனும் வாழ வாழ்த்துகிறேன்.

நமது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்த நாம் தொடர்ந்து நெருக்கமாக பணியாற்றுவோம்’ என்று கூறியுள்ளார். மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு பாஜ சார்பில் நாடு முழுவதிலும் சேவை வாரம் கொண்டாடப்படுகிறது.

கடந்த 14ல் தொடங்கிய இந்த சேவை வாரம் 20 ம் தேதி வரை நடைபெறுகிறது. கட்சி தொண்டர்கள் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.



சேவை வார விழாவை முன்னிட்டு ரத்ததான முகாம்கள், மருத்துவ முகாம்கள், நலத்திட்ட உதவிகள் வழங்குதல், கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் போன்ற பணிகளில் பாஜ தொண்டர்கள் ஈடுபட்டுள்ளனர. மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

டெல்லி இந்தியா கேட் பகுதியில் 70 கிலோ மதிப்பிலான லட்டில் மோடியின் பிறந்தநாளை பாஜவினர் கொண்டாடினர். நிகழ்ச்சியில் தேசிய துணைத் தலைவரும், டெல்லி பொறுப்பாளருமான ஷியாம் ஜாஜு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் பாஜ சார்பில் 70 இடங்களில் நிகழ்ச்சிகள் நடக்க இருக்கிறது.

.

மூலக்கதை