நினைவில்லமானது ஜெ., பங்களா: பராமரிக்க அறக்கட்டளை

தினமலர்  தினமலர்
நினைவில்லமானது ஜெ., பங்களா: பராமரிக்க அறக்கட்டளை

சென்னை:மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின், போயஸ் தோட்டம் பங்களா நினை வில்லமாகி உள்ளது. அதை பராமரிக்க, தமிழக அரசு, ஜெ., பெயரில் அறக்கட்டளையை நிறுவி, சட்டம் இயற்றிஉள்ளது.

இதற்கான சட்ட மசோதாவை, தமிழக சட்டசபையில், செய்தித் துறை அமைச்சர் ராஜு தாக்கல் செய்தார். குரல் வாக்கெடுப்பின் வழியே, சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.சட்ட மசோதாவில் கூறப்பட்டுள்ளதாவது:

சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள,மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ., வசித்த இல்லமான, வேதா நிலையத்தை நினைவிடமாக மாற்ற, 2017 ஆகஸ்ட், 17ல் முதல்வர் அறிவிப்பு வெளியிட்டார்.வேதா நிலையம் உள்ள நிலம் மற்றும் கட்டடம், மாநில அரசால் கையகப்படுத்தப்பட்டு உள்ளது. அந்த நிலத்தில் உள்ள அறைகலன்கள், புத்தகங்கள், அணிகலன்கள், உள்ளிட்ட அசையும் பொருட்கள், மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக பயனற்று கிடக்கின்றன.

அவை, சேதமாவதில் இருந்து காக்கப்பட்டு பராமரிக்கப்பட வேண்டும்.எனவே, வேதா நிலையம் நினைவிடமாக மாற்றப்பட உள்ளது. இந்த சட்டம், தமிழ்நாடு புரட்சித்தலைவி டாக்டர் ஜெ.ஜெயலலிதா நினைவு அறக்கட்டளை சட்டம் என, அழைக்கப்படும். அறக்கட்டளை தலைவராக முதல்வர் செயல்படுவார். துணை முதல்வர், செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர், தலைமை செயலர், நிதித்துறை, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை செயலர்கள், பொதுப்பணி துறை தலைமை இன்ஜினியர், அருங்காட்சியகத்தின் இயக்குனர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பர்.

ஜெ., தலைமை வகித்த அ.தி.மு.க.,வை சேர்ந்த, அரசு நியமிக்கும் ஆறு பேரும் உறுப்பினர்களாக இருப்பர். செய்தி, மக்கள் தொடர்பு துறை இயக்குனர் உறுப்பினர் செயலராக இருப்பார். அவர்களின் பதவி காலம் மூன்றாண்டுகள். உறுப்பினர்களுக்கு ஊதியம் எதுவும் கிடையாது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

சொத்துக்கள் என்ன?



ஜெ., நினைவு அறக்கட்டளையின் கீழ், இடம் பெறும் சொத்துகள் விபரம்:

* ஜெ.,க்கு சொந்தமான, மயிலாப்பூர் வட்டம், மாநகராட்சி கதவு எண், 36/81ல் உள்ள, 0.22.6 ஹெக்டேர் நிலம், அதில் தரைத்தளம் மற்றும் இரண்டு அடுக்குகள் உள்ள கட்டடம், இரண்டு மாமரங்கள், தலா, ஐந்து தென்னை மற்றும் வாழை மரங்கள், ஒரு பலா மரம்
* 4 கிலோ,372 கிராம் உள்ள, 14 வகை தங்க ஆபரணங்கள்; 601 கிலோ மற்றும் 424 கிராம்கள் உள்ள, ௮௬௭ வெள்ளி பொருட்கள்; 162 வெள்ளி பாத்திரங்கள்; 11 'டிவி'க்கள், 10 பிரிட்ஜ்கள், 38 வென்டிலேட்டர்கள், 556 சமையலறை அலமாரிகள், 6,514 சமையல் பாத்திரங்கள்

* 1,055 ஷோகேஸ் பெட்டிகள், டவல், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், திரைச்சீலைகள், காலணிகள் உள்ளிட்ட, 10 ஆயிரத்து, 438 பொருட்கள்
* 29 தொலைபேசிகள், 221 சமையலறை எலக்ட்ரிக்கல் பொருட்கள், 8,376 புத்தகங்கள், 394 நினைவு பொருட்கள், லைசென்ஸ், நீதிமன்ற ஆவணங்கள் மற்றும் வருமான வரித்துறை ஆவணங்கள் என, 653 ஆவணங்கள்

* 253 எழுது பொருட்கள், 1,712 அலங்கார பொருட்கள், 65 சூட்கேஸ்கள், 108 அழகு சாதன பொருட்கள், ஆறு கடிகாரங்கள், தலா ஒரு ஜெராக்ஸ் மிஷின், லேசர் பிரிண்டர் மற்றும் இதர வகை, 959 பொருட்கள் என, மொத்தம், 32 ஆயிரத்து, 721 பொருட்கள் உள்ளன.

மூலக்கதை