புதிய கல்விக் கொள்கை 2 ஆயிரம் ஆண்டுகள் பின்நோக்கியது - மல்லிகார்ஜூன கார்கே

தினமலர்  தினமலர்
புதிய கல்விக் கொள்கை 2 ஆயிரம் ஆண்டுகள் பின்நோக்கியது  மல்லிகார்ஜூன கார்கே

புது டில்லி: குழந்தைகளை எதிர்காலத்திற்கு தயார்படுத்துவதற்கும், திட்டமிடுவதற்கும் மாற்றாக புதிய கல்விக் கொள்கை 2 ஆயிரம் ஆண்டுகள் பின்நோக்கி உள்ளது என காங்., எம்.பி., மல்லிகார்ஜூன கார்கே பார்லியில் பேசினார்.



1986-ல் கடைசியாக கல்வி கொள்கை வகுக்கப்பட்டது. அதன் பிறகு சுமார் 36 ஆண்டுகள் கழித்து தற்போது புதிய கல்வி கொள்கை அறிவிக்கப்பட்டுள்ளது. இது பள்ளிக் கல்வி மற்றும் உயர் கல்வியில் சீர்திருத்தங்களை ஏற்படுத்தும் என அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில், சமீபத்தில் ராஜ்யசபாவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் எம்.பி., மல்லிகார்ஜூன கார்கே, புதிய கல்விக் கொள்கையை கடுமையாக எதிர்த்து பேசினார்.

இன்றைய நேரமில்லா நேரத்தின் போது இப்பிரச்னையை முன் வைத்து அவர் பேசியதாவது: கல்வி என்பது அரசியலமைப்பு கொள்கையின் அடிப்படையில் இருக்க வேண்டும். பழங்கால கலாசார மதிப்புகள் கொண்டதாக இருக்க கூடாது. மாநில மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் ஒரு குறிப்பிட்ட மத நம்பிகை களுக்கானதாக இருக்கக் கூடாது. அரசியலமைப்பின் பிரிவு 28(1) அதையே கூறுகிறது.


அங்கன்வாடி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க சரியான கொள்கை வரையறுக்கப்படவில்லை. இதனால் நகர்புற மற்றும் கிராமப்புற ஏழைக் குழந்தைகள் ஒன்றாம் வகுப்பு சேரும் போது பாதிக்கப்படுவார்கள். 10 ஆம் வகுப்புக்குப் பிறகு கிட்டத்தட்ட 50 சதவீத மாணவர்கள் பள்ளிகளை விட்டு வெளியேறுகிறார்கள். அதனை குறைக்க எந்த திட்டமும் இல்லை. வெளியேறும் மாணவர்களில் 32.4 % பேர் தலித்துகள், 25.7% பேர் சிறுபான்மையினர் மற்றும் 16.4% பேர் பழங்குடியினர். ஆசிரியர்களுக்கு ஏற்கனவே தேர்தல்கள், மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தடுப்பூசி போடுவது போன்ற சுமைகள் உள்ளன.

இந்திய கலாச்சாரத்தை மாணவர்கள் தங்கள் மொழி மற்றும் இலக்கிய வகுப்புகள் மூலம் கற்க வேண்டும். சமஸ்கிருதம் இந்தி போன்ற ஒற்றை கலாசாரத்தை அரசு ஊக்குவித்தால் பின் தங்கிய பகுதி மாணவர்கள் நவீன கல்வியில் இருந்து விலகிச் செல்வார்கள். இவ்வாறு பேசினார்.

மூலக்கதை