கிசான் திட்டத்தில் முறைகேடு :சி.பி.ஐ., விசாரணைக்கு தி.மு.க., கோரிக்கை

தினமலர்  தினமலர்
கிசான் திட்டத்தில் முறைகேடு :சி.பி.ஐ., விசாரணைக்கு தி.மு.க., கோரிக்கை

சென்னை :''பிரதமர் கிசான் திட்டத்தில் நடந்த, முறைகேடுகள் குறித்து, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்,'' என, தி.மு.க.,- - எம்.எல்.ஏ., பொன்முடி வலியுறுத்தினார்.சட்டசபையில் நடந்த விவாதம்:

* தி.மு.க.,- - பொன்முடி: பிரதமர் கிசான் திட்டத்தில், 5 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு, ஆண்டுக்கு, 6,000 ரூபாய் வழங்கப்படுகிறது.

மத்திய அரசு திட்டமாக இருந்தாலும், மாநில அரசுக்கு தான், திட்டத்தை செயல்படுத்துவதில், பெரும் பங்கு உள்ளது. பயனாளிகள் தகுதியானவர்களா என்பதை, மாநில அரசு தான் உறுதி செய்ய வேண்டும். தற்போது, 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தகுதியற்ற நபர்கள், பயனாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதில், 110 கோடி ரூபாய்க்கு முறைகேடு நடந்துள்ளது. இதில், ஆளும் கட்சிக்கும் பங்கிருக்கும் என, சந்தேகிக்கப்படுகிறது. இதுபோன்ற தவறு, வேறு எந்த மாநிலத்திலும் நடக்கவில்லை. தற்போது, ஒப்பந்த பணியாளர்கள் மட்டும், கைது செய்யப்பட்டுள்ளனர். எனவே, இந்த முறைகேடு விசாரணையை, சி.பி.ஐ., வசம் ஒப்படைக்க வேண்டும்.
* சட்டசபை காங்., தலைவர் ராமசாமி: இதில், மிகப்பெரிய தவறு நடந்துள்ளது. விவசாயிகளுக்கு தீங்கு இழைக்கப்பட்டுள்ளது. உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.
* அமைச்சர் துரைக்கண்ணு: இத்திட்டத்தில், மார்ச் வரை, 38.12 லட்சம் விவசாய குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டது. ஏப்ரல் முதல், அதிகமான நபர்கள் பதிவு செய்துள்ளனர். இதனால், பயனாளிகள் எண்ணிக்கை, 47.16 லட்சமாக உயர்ந்தது.இது தொடர்பான புகார் அடிப்படையில், வேளாண்மைத் துறை ஆய்வு செய்தது. அப்போது, தகுதியற்ற நபர்கள் சேர்க்கப்பட்டது கண்டறியப்பட்டது; 13 மாவட்டங்களில், வழக்குபதிவு செய்யப்பட்டு, 41 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தவறு நடக்க காரணமாக இருந்த, மூன்று வட்டார வேளாண் உதவி இயக்குனர்கள், ஐந்து உதவி வேளாண்மை அலுவலர்கள், தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

பல்வேறு மாவட்டங்களில், 87 ஒப்பந்த ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். துறை அலுவலர்கள், 34 பேர் மீது, துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதுவரை நடந்த ஆய்வில், 5.37 லட்சம் பேர் தகுதியற்றவர்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களுக்கு வழங்கப்பட்ட தொகையில், 52.68 கோடி ரூபாய் மீட்கப்பட்டுள்ளது.தகுதியற்றவர்கள் பெயரை நீக்கவும், தகுதியுள்ள விவசாயிகளுக்கு, திட்டத்தின் பயன் சென்றடையவும், அரசு உரிய நடவடிக்கை எடுத்துள்ளது. இதுபோன்ற தவறு, சில மாநிலங்களில் நடந்துள்ளது. தமிழக அரசு தான் துரித நடவடிக்கை எடுத்துள்ளது.இவ்வாறு, விவாதம் நடந்தது.

மூலக்கதை