கொரோனா தடுப்புக்கு ரூ.9,027 கோடி ஒதுக்கீடு: ஓ.பி.எஸ்.,

தினமலர்  தினமலர்
கொரோனா தடுப்புக்கு ரூ.9,027 கோடி ஒதுக்கீடு: ஓ.பி.எஸ்.,

சென்னை : சட்டசபையில், 12 ஆயிரத்து, 845 கோடி ரூபாய் நிதி ஒதுக்க வகை செய்யும், துணை பட்ஜெட்டை, துணை முதல்வர் பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
துணை பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளதாவது:

* கொரோனா கட்டுப்பாடு, தடுப்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக, 9,027.08 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது
* கொரோனா நோய் தொற்று காலத்தில், உணவு பொருட்களை இலவசமாக வழங்க, கூடுதலாக, 3,359.12 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது
* தொற்று நிவாரண உதவியாக, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும், பல்வேறு நல வாரிய உறுப்பினர்களுக்கும், ரொக்கப் பண உதவியை, மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து வழங்க, 3,169 கோடி ரூபாய் அனுமதிக்கப்பட்டுள்ளது. இது தவிர, கொரோனா கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளுக்காக, 1,050 கோடி ரூபாய், இயற்கை சீற்றங்கள் குறித்த துயர் தணிப்பின் கீழ் தரப்பட்டுள்ளது
* கொரோனா தொற்று மருந்துகள், நோய் கண்டறியும் சாதனங்கள் கொள்முதலுக்காக, உள் நோயாளிகள் உணவு செலவினங்களுக்காக, ஆக்சிஜன் வசதி, படுக்கை வசதிகள் ஏற்படுத்த, சுகாதாரத் துறைக்கு, 1,109.42 கோடி ரூபாய், கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.
* மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்கு, 14வது மத்திய நிதி ஆணையத்தின், இரண்டாம் தவணை, பொது அடிப்படை மானியம் வழங்க, 988 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
* தனியார் கரும்பு உற்பத்தி ஆலைகள், விவசாயிகளுக்கு நிலுவை தொகைகளை வழங்க வசதியாக, மின் உற்பத்திக்கான நிலுவைத் தொகையை, மின் வாரியத்திற்கு வழங்க, முன்பணமாக, 170.28 கோடி ரூபாய் அனுமதிக்கப்பட்டு உள்ளது.
* தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ், பல்வேறு திட்டப் பணிகளை செயல்படுத்த, வேளாண் துறைக்கு, 107.40 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. விவசாயிகள், சூரிய மின்சக்தி உற்பத்தி செய்யும் திட்டத்தை செயல்படுத்த, மாநில அரசின் மானியமாக, 317 கோடி ரூபாய்க்கு, அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
* தேனி மாவட்டம், வீரபாண்டி கிராமம்; திருப்பூர் மாவட்டம், பண்ணை கிணறு கிராமத்தில், கால்நடை மருத்துவக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் அமைக்க, 83 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. திருப்பத்துார், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தென்காசி மாவட்டங்களில், கலெக்டர் அலுவலகம் மற்றும் குடியிருப்புகள் கட்ட, 645.26 கோடி ரூபாய் அனுமதிக்கப்பட்டுள்ளது.
* அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைக்க, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த, 581 கோடி ரூபாய் அனுமதிக்கப்பட்டுஉள்ளது.
* புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தின் கீழ், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறைக்கு, கூடுதல் மூலதன மானியமாக, 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.

மூலக்கதை