ரசிகர்கள் முகத்தில் புன்னகை: ஐ.பி.எல்., மீது சேவக் நம்பிக்கை | செப்டம்பர் 16, 2020

தினமலர்  தினமலர்
ரசிகர்கள் முகத்தில் புன்னகை: ஐ.பி.எல்., மீது சேவக் நம்பிக்கை | செப்டம்பர் 16, 2020

மும்பை: ‘‘கொரோனா காரணமாக பல மாதங்கள் சோர்வடைந்துள்ள ரசிகர்கள் முகத்தில் ஐ.பி.எல்., தொடர் புன்னகையை கொண்டு வரும்,’’ என சேவக் தெரிவித்தார். 

ஐ.பி.எல்., தொடரின் 13வது சீசன் ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.ஐ.,) செப். 19ல் துவங்குகிறது. 53 நாட்கள் நடக்கும் இத்தொடரில் 56 லீக் போட்டிகள், 4 ‘பிளே ஆப்’ என மொத்தம் 60 போட்டிகள் நடக்கவுள்ளன. துபாயில் நடக்கும் முதல் போட்டியில் தோனியின் சென்னை அணி, ரோகித் சர்மாவின் மும்பையை சந்திக்கவுள்ளது. நீண்ட நாட்களுக்கு பின், மைதானத்தில் தோனியை காணும் வாய்ப்பு ரசிகர்களுக்கு கிடைத்துள்ளது.

 

இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் துவக்க வீரர் சேவக் கூறியது: கிரிக்கெட் விளையாட்டு இந்திய மக்களின் வாழ்க்கையில் ஒரு அங்கமாகும். தற்போது ஐ.பி.எல்., தொடர் நீண்ட இடைவெளிக்குப் பின் நடக்கவுள்ளது. இது ரசிகர்கள் முகத்தில் எப்படியும் மகிழ்ச்சியை கொண்டு வரும், இது உறுதி. அதேநேரம் சொந்தமண்ணில் நமது ரசிகர்கள் முன்னிலையில் போட்டி நடக்காமல் இருப்பது சற்று ஏமாற்றமே.

அதேநேரம் வரும் ஐ.பி.எல்., தொடர் வீரர்களுக்கு மட்டுமின்றி ரசிகர்களுக்கும் கூடுதல் சிறப்பானது. ஏனெனில் 2019 உலக கோப்பை அரையிறுதிக்குப் பின், மைதானத்தில் மீண்டும் தோனியை காண உள்ளனர். 

இவ்வாறு அவர் கூறினார்.

 

சென்னை வீரர் ருதுராஜ். கொரோனா தொற்று காரணமாக 14 நாட்கள் தனிமையில் உள்ளார். இருப்பினும் இவருக்கு, அறிகுறியற்ற கொரோனா இருப்பதாக சந்தேகிக்கப்படுவதால், மும்பை அணிக்கு எதிரான முதல் போட்டியில் பங்கேற்கும் சென்னை அணியில் இருந்து விலகினார்.

தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் கூறுகையில்,‘‘ருதுராஜ் எங்களுடன் இணைய இந்திய கிரிக்கெட் போர்டிடம் அனுமதிக்காக காத்திருக்கிறோம். தவிர உடற்தகுதி சோதனைக்கும் இவர் செல்ல வேண்டும்,’’ என்றார்.

 

மும்பை அணி வீரர் ஹர்திக் பாண்ட்யா கூறுகையில்,‘‘காயம் அடைய வேண்டுமென யாரும் விரும்பமாட்டர். மற்றபடி எனக்கு ஏற்பட்ட காயங்கள் எல்லாம் சகஜமாக ஏற்பட்டது தான். மீண்டும் சிறப்பாக செயல்பட இந்த காயங்கள் தான் ஊக்கமாக அமைந்தன,’’ என்றார்.

 

‘கிரேட் பாய்ஸ்’

சென்னை அணி வீரர்கள் ஜடேஜா, லுங்கிடி உள்ளிட்ட வீரர்கள் வட்டமாக அமர்ந்து, தனித்தனியாக அலைபேசி பார்த்துக் கொண்டிருந்தனர். இதுகுறித்து சென்னை வீரர் வாட்சன் கூறுகையில்,‘கிரேட் சாட் பாய்ஸ்,’’ என நகைச்சுவையாக தெரிவித்தார்.

மூலக்கதை