தி.மு.க., கூட்டணியை வீழ்த்த தமிழக பா.ஜ., வியூகம்

தினமலர்  தினமலர்
தி.மு.க., கூட்டணியை வீழ்த்த தமிழக பா.ஜ., வியூகம்

வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க., - காங்., கூட்டணியை வீழ்த்துவதற்கு, தமிழக பா.ஜ., தேர்தல் மேலிட பொறுப்பாளராக, மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி நியமிக்கப்பட உள்ளார்.
தமிழக பா.ஜ., மேலிட பொறுப்பாளராக உள்ள முரளிதர் ராவ் மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக, மஹாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த, தேசிய செயலர், சுனில் தியோதர் நியமிக்கப்பட உள்ளார்.


இது குறித்து, தமிழக பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:தமிழக பா.ஜ., மேலிடபொறுப்பாளர் பதவியில், முரளிதர் ராவ், ஆறு ஆண்டுகளாக உள்ளார். 2014 லோக்சபா, 2016 சட்டசபை, 2019 லோக்சபா என, மூன்று தேர்தல்களில், தமிழகத்தில் பா.ஜ.,வுக்கு வெற்றி கிடைக்கவில்லை.

எனவே, 2021 சட்டசபை தேர்தலுக்கு முன், முரளிதர் ராவ் மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக, மஹாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த, சுனில் தியோதரை நியமிக்கப்படலாம். அவர் தற்போது, திரிபுரா, ஆந்திரா மாநில பொறுப்பாளராக உள்ளார். திரிபுராவில், பா.ஜ., ஆட்சி வருவதற்கு, அவர் முக்கிய பங்கு வகித்தார்.உ.பி., மாநிலத்தில், தேர்தல் பணியாற்றிய சுனில் தியோதர், பல்வேறு போராட்டங்களை, மக்களுடன் மக்களாக தெருவில் இறங்கி நடத்தியவர். அதனால், அவரை தமிழக பொறுப்பாளராக நியமித்தால், தி.மு.க., - காங்., கூட்டணியை, வீழ்த்துவதற்கு களம் அமைப்பார் என, பா.ஜ., மேலிடம் கருதுகிறது.



அதேபோல, ஆந்திர மாநிலத்தை சேர்ந்த, தேசிய பொதுச்செயலர் ராம் மாதவ், தேசிய செயலர் சத்தியகுமார், தேசிய செய்தி தொடர்பாளர் நரசிம்ம ராவ் ஆகியோரும், தமிழக பொறுப்பாளர் பட்டியலில் இடம் பெறுள்ளனர். .கடந்த, 2019 லோக்சபா தேர்தல் பொறுப்பாளராக, மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் நியமிக்கப்பட்டு, அவரது தலைமையில் தேர்தல் பணி நடந்தது. ஆனால், பா.ஜ., வெற்றி பெறவில்லை. எனவே, வரும் சட்டசபை தேர்தல் பொறுப்பாளர் பதவிக்கு, மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி நியமிக்கப்பட உள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுலை தோற்கடித்தவர் என்பதால், அவர் பொறுப்பாளராக நியமிக்கப்படுவதால், தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணியை வீழ்த்துவதற்கு, அவரது தேர்தல் வியூகம் முக்கிய பங்கு வகிக்கும் என, மேலிடம் கருதுகிறது.இவ்வாறு, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை போட்டி?


சென்னை, கொளத்தூர் தொகுதியில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் போட்டியிட்டால், அவரை எதிர்த்து, பா.ஜ., வேட்பாளராக, முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி அண்ணாமலையை நிறுத்த, பா.ஜ., மேலிடம் ஆலோசித்துள்ளது.ஸ்டாலினுக்கு எதிராக, இளைஞர் சக்தியை திரட்டும் வகையில், 'நீட்' தேர்வு, புதிய கல்வி கொள்கை, ஹிந்தி விவகாரத்தில், தி.மு.க.,வின் இரட்டை வேடத்தை, அண்ணாமலை அம்பலப்படுத்துவார். மேலும், தி.மு.க.,வில், வாரிசுஅரசியலை, ஸ்டாலின் ஊக்குவிப்பதை எதிர்த்தும், அண்ணாமலை பிரசாரம் செய்யும்பட்சத்தில், அது, தமிழகம் முழுவதும் எதிரொலிக்கும் என, பா.ஜ., தரப்பில்நம்பப்படுகிறது.- நமது நிருபர் -




மூலக்கதை