கழிவு நீரை குடிக்கும் யானைகள்; பசுமை தீர்ப்பாய உத்தரவால் ஆய்வு

தினமலர்  தினமலர்
கழிவு நீரை குடிக்கும் யானைகள்; பசுமை தீர்ப்பாய உத்தரவால் ஆய்வு

குன்னுார் : குன்னுாரில் கழிவுகள் கலக்கும் ஆற்று நீரை யானைகள் குடிப்பது தொடர்பாக, பசுமை தீர்ப்பாய உத்தரவின்படி, ஆய்வு மேற்கொள்ளப்பட்டடது.


நீலகிரி மாவட்ட மலைப்பகுதிகளில் உற்பத்தியாகும் நீர், குன்னுார் பஸ் ஸ்டாண்ட் ஓடை, சிற்றாறு என்ற லாஸ் நீர்வீழ்ச்சியில் சங்கமித்து, மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் கலக்கிறது. இந்த நீரில், இறைச்சி கழிவு உட்பட அனைத்து கழிவுகளும் கலக்கிறது.இந்த நீரை யானை உள்ளிட்ட வன உயிரினங்கள் குடிப்பதால், பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது. இது தொடர்பாக, தேசிய பசுமை தீர்ப்பாயம் மற்றும் சென்னை ஐகோர்ட் அறிக்கை சமர்ப்பிக்க, உத்தரவிட்டுள்ளன.


மாவட்ட கூடுதல் கலெக்டர் ரஞ்சித் சிங், மாசுக்கட்டுப்பாடு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளர் லிவிங்ஸ்டன், மாவட்ட உதவி வனப்பாதுகாவலர் சரவணன் உட்பட அதிகாரிகள், நேற்று ஆய்வு செய்தனர். இதில், குன்னுார் ஜிம்கானா, நகராட்சி நீரோடையில் கழிவுகள் கலக்கும் இடங்கள், லாஸ் நீர்வீழ்ச்சி உட்பட ஐந்து இடங்களில், ஆய்வுக்காக தண்ணீர் மாதிரி எடுக்கப்பட்டது.


அதிகாரிகள் கூறுகையில்,'இந்த பகுதிகளில் மக்களிடம் நடத்தப்பட்ட விசாரணை விபரம் மற்றும் இந்த நீரின் தன்மை குறித்து, கோவை மற்றும் சேலத்தில் உள்ள ஆய்வகங்களில், தனித்தனியாக பரிசோதனை செய்து, அதன்படி அறிக்கை சமர்ப்பிக்கப்படும்' என்றனர்.

மூலக்கதை