'மாஸ்டர்' வந்தாலும் அதே நிலைமையா?

தினமலர்  தினமலர்
மாஸ்டர் வந்தாலும் அதே நிலைமையா?

கொரோனா தொற்று பயம் காரணமாக தியேட்டர்களை மூடி ஆறு மாதங்கள் ஆகப் போகிறது. இந்த ஆறு மாதங்களில் பல படங்கள் இந்தியா முழுவதும் வெளியாகாமல் இருக்கிறது.

ஒரு பக்கம் தியேட்டர்களைத் திறக்க வேண்டுமென தியேட்டர்கள் சங்கத்தினர் அரசுக்குக் கோரிக்கை வைத்து வருகின்றனர். தியேட்டர்களைத் திறந்தால் மக்கள் வருவார்களா வர மாட்டார்களா என்பது பற்றி அவர்களுக்குக் கவலை இருப்பது போலத் தெரியவில்லை.

அவர்களுக்காகவே சமீபத்திய ஹாலிவுட் வெளியீடான 'டெனட்' படத்தை ஒரு உதாரணமாகச் சொல்கிறார்கள். இப்படம் 207 மில்லியன் யுஎஸ் டாலர் மட்டுமே வசூலித்துள்ளதாகத் தகவல். எதிர்பார்த்த வசூலைவிட மிக மிகக் குறைவு.

அதிக தியேட்டர்களை உள்ள அமெரிக்காவில் இரண்டு வாரங்களில் 30 மில்லியன் யுஎஸ் டாலரைத்தான் வசூலித்துள்ளதாம். அங்குள்ள மக்களே தியேட்டர்களுக்கு வராத காரணத்தால்தான் வசூல் இப்படி குறைந்துவிட்டதாம்.

கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய ஒரு படத்திற்கே இப்படி ஒரு நிலைமை என்றால் தமிழில் விஜய் நடித்த 'மாஸ்டர்' படமாக இருந்தாலும் அந்த நிலைமையை மாற்ற முடியாது என்கிறார்கள் சில திரையுலக அனுபவஸ்தர்கள்.

விஜய் படம் என்றால் தமிழ்நாட்டில் மட்டுமல்ல அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, ஐரோப்பிய நாடுகள், இலங்கை இப்படி பல நாடுகளிலும் வெளியாகி வசூலை அள்ளும். அங்கெல்லாம் ஒரு ஹாலிவுட் படத்திற்கே மக்கள் வராத போது 'மாஸ்டர்' படம் வந்தாலும் அதே நிலைமைதானே என்கிறார்கள்.

'மாஸ்டர்' படம் உண்மையிலேயே அதிக வசூலை அள்ளி சாதனை படைக்க வேண்டும் என்றால் கொரானோ தொற்று பயம் மக்கள் மத்தியிலிருந்து விலகும் வரை அந்தப் படத்தை வெளியிடக் கூடாது என்று சொல்கிறார்கள்.

மூலக்கதை