அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்னிலையில் முக்கிய ஒப்பந்தம்..: இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் கையெழுத்து!!!

தினகரன்  தினகரன்
அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்னிலையில் முக்கிய ஒப்பந்தம்..: இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் கையெழுத்து!!!

வாஷின்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்னிலையில் இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பஹ்ரைன் நாடுகளுக்கிடையே முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது. வாஷின்டனில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாநாட்டில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹு, ஐக்கிய அரபு வெளியுறவுத்துறை அமைச்சர் ஷேக் அப்துல்லா பின் சயாத் மற்றும் பஹ்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லாடிப் அல் சாயனி ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். மூன்று நாடுகளிடையேயான ஒப்பந்தம் சர்வதேச அரசியலில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. மேலும் இஸ்ரேல் உடன் ஒப்பந்தம் செய்யும் 3 மற்றும் 4வது இஸ்லாமிய நாடாக ஐக்கிய அமீரகம் மற்றும் பஹ்ரைன் உருவெடுத்துள்ளது. இதற்கு முன் எகிப்து மற்றும் ஜோர்டன் ஆகிய நாடுகள் 1979 மற்றும் 1994ல் இஸ்ரேல் உடன் ஒப்பந்தம் செய்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது நடைபெற்ற ஒப்பந்தத்தில் பெரிய அளவில் பாலஸ்தீனம் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. பாலத்தீனத்தில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை தடுக்கும் அம்சங்கள் ஒப்பந்தத்தில் இடம் பெற வில்லை. ஆனால்  இஸ்ரேலின் பாலஸ்தீன ஆக்கிரமிப்பை இனி அமெரிக்கா அனுமதிக்காது என்பது மட்டுமே இந்த ஒப்பந்தத்தில் சற்று ஆறுதலான விஷயமாக உள்ளது. அதே வேளையில் இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் ஆகிய 3 நாடுகளும் இராணுவ மற்றும் பொருளாதாரரீதியான உறவுகளை மேற்கொள்ள ஒப்பந்தத்தில் அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இதனிடையே இஸ்ரேலுடன் அரபு நாடுகள் ஒப்பந்தம் செய்துகொண்டதற்கு பாலஸ்தீனம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அந்நாட்டில் ஐக்கிய அரபு அமீரகம் பஹ்ரைன் நாடுகளை கண்டித்து போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. அதேபோல் ஈரானும் ஒப்பந்தத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இஸ்லாமிய மக்களுக்கு இவர்கள் துரோகம் செய்துவிட்டதாக ஈரான் குற்றம் சாட்டி உள்ளது.

மூலக்கதை