இந்தியாவில் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தின் கொரோனா தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்க சீரம் நிறுவனத்திற்கு மீண்டும் அனுமதி

தினகரன்  தினகரன்
இந்தியாவில் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தின் கொரோனா தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்க சீரம் நிறுவனத்திற்கு மீண்டும் அனுமதி

மும்பை : கொரோனா தொற்று நோய்க்கு தடுப்பூசி மருந்து கண்டுபிடிக்கும் 2 மற்றும் 3ம் கட்ட பரிசோதனைகளை மீண்டும் தொடங்க புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.இந்த அனுமதியை இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஒழுங்குமுறை ஆணையம் அளித்துள்ளது. கோவிட் 19 எனப்படும் கொரோனா வைரசுக்கு தடுப்பூசி மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஆஸ்டிராஜெனீகா என்ற வெளிநாட்டு நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இதே தடுப்பூசி மருந்தை தன்னார்வலர்களுக்கு கொடுத்து புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனமும் பரிசோதனை செய்து வந்தது. இந்த நிலையில்,ஆஸ்டிராஜெனீகா நிறுவனம் மேற்கொண்ட பரிசோதனையின் போது, தன்னார்வலர் ஒருவருக்கு எதிர்பாராத விதமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து, உடனடியாக பரிசோதனை நிறுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து சீரம் நிறுவனமும் பரிசோதனையை நிறுத்திக் கொண்டது. இந்த சூழலில் ஆக்ஸ்போர்டு பலக்லைக்கழகத்தின் ஆஸ்டிராஜெனீகா நிறுவனத்தின் பரிசோதனை மீண்டும் தொடங்கப்பட்டதால் சீரம் நிறுவனத்திலும் 2 மற்றும் 3ம் ஆய்வை தொடங்க இந்திய மருந்து ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இதனிடையே நோவாவாக்ஸ் என்ற அமெரிக்க நிறுவனம், தாம் கண்டுபிடித்துள்ள கொரோனா தடுப்பூசியை 200 கோடி டோஸ்களை தயாரிக்குமாறு சீரம் நிறுவனத்தை அணுகி உள்ளது.

மூலக்கதை