மத்திய கிழக்கு நாடுகளின் வரலாற்று சிறப்புமிக்க இஸ்ரேல்-யுஏஇ-பஹ்ரைன் அமைதி ஒப்பந்தம்; அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்னிலையில் கையெழுத்து

தமிழ் முரசு  தமிழ் முரசு
மத்திய கிழக்கு நாடுகளின் வரலாற்று சிறப்புமிக்க இஸ்ரேல்யுஏஇபஹ்ரைன் அமைதி ஒப்பந்தம்; அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்னிலையில் கையெழுத்து

வாஷிங்டன்: ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ), பஹ்ரைன் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு இடையிலான  பிரச்னையை தீர்ப்பதில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆர்வம்காட்டி வந்தார். இப்பிரச்னையில் அதிபர் டிரம்ப் மத்தியஸ்தம் செய்த உடன்பாட்டை மேற்கண்ட நாடுகள் ஏற்றுக் கொண்டன.

அதையடுத்து மூன்று நாடுகளின் தலைவர்கள் மத்தியிலான சமாதான ஒப்பந்த நிகழ்ச்சி அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப் முன்னிலையில் நேற்று நடந்தது. புதியதாக போடப்பட்ட சமாதான ஒப்பந்தத்தில் பஹ்ரைன் வெளியுறவு அமைச்சர் அப்துல்லாதீப் அல் சயானி, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா பின் சயீத் ஆகியோர் கையெழுத்திட்டனர்.தொடர்ந்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பஹ்ரைன் வெளியுறவு அமைச்சர்களுக்கு வரலாற்று சிறப்புமிக்க ஆபிரகாம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதற்காக விருந்தளித்தார். இந்த ஒப்பந்தம் 26 ஆண்டுகளில் முதல் அரபு - இஸ்ரேலிய சமாதான ஒப்பந்தமாகும்.

இதுகுறித்து டிரம்ப் கூறுகையில், ‘வரலாற்றின் போக்கை மாற்றுவதற்காக நாங்கள் ஒன்றிணைந்து வந்துள்ளோம். பல தசாப்தங்களாக பிளவு மற்றும் மோதல்களில் சிக்கியிருந்த மத்திய கிழக்கு நாடுகள் புதிய விடியலை காணும்.

இந்த மூன்று நாடுகளின் தலைவர்களின் மிகுந்த தைரியமான முடிவிற்கு நன்றி. நாங்கள் அனைத்து மதங்களையும், அதன் பின்னணிகளையும் கொண்ட மக்களுடன் அமைதி மற்றும் செழிப்பான வளர்ச்சியை விரும்புகிறோம்’ என்றார்.இந்த ஒப்பந்தங்களின்படி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகள் இஸ்ரேலில் தூதரகங்களை நிறுவுகின்றன. தூதர்களை பரிமாறிக்கொள்ளும், சுற்றுலா, வர்த்தகம், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இஸ்ரேலுடன் ஒத்துழைத்து இணைந்து செயல்படும்.

இந்த ஒப்பந்தங்கள் மூலம், ஒட்டுமொத்த பிராந்தியத்தில் அமைதிக்கான அடித்தளம் அமையும் என சர்வதேச பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

.

மூலக்கதை