மாநிலம் முழுவதும் ஆன்லைனில் இறுதி செமஸ்டர் தேர்வு அறிவிப்பு; பல்கலைக்கழகங்கள் அட்டவணை வெளியிட்டது

தமிழ் முரசு  தமிழ் முரசு
மாநிலம் முழுவதும் ஆன்லைனில் இறுதி செமஸ்டர் தேர்வு அறிவிப்பு; பல்கலைக்கழகங்கள் அட்டவணை வெளியிட்டது

சென்னை: அண்ணா பல்கலைக் கழகம் உள்ளிட்ட பல்வேறு  பல்கலைக்கழகங்கள் மற்றும் அவற்றுடன் இணைந்த கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வுகளுக்கான அட்டவணையை உயர்கல்வித்துறையின் உத்தரவின்பேரில் அந்தந்த பல்கலைக் கழகங்கள் வெளியிட்டுள்ளன. தமிழகத்தில் கடந்த மார்ச் இறுதி வாரத்தில் பரவிய கொரோனா தொற்று காரணமாக அனைத்து பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன.

மே மாதத்துக்கு பிறகு ஜூன் மாதம் தொடங்க வேண்டிய இந்த கல்வி ஆண்டு தொடங்க முடியாத அளவுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இது செப்டம்பர் இறுதி வரை ஊரடங்கு தொடரும் என்று அரசு அறிவித்துள்ளது.



இதற்கிடையே, பள்ளி மாணவர்களுக்கான தேர்வுகளை ரத்து செய்து அரசு உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து கல்லூரி மாணவர்களுக்கும் தேர்வு நடத்த முடியாத நிலை ஏற்பட்டதால், இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வு தவிர மற்ற ஆண்டுகளுக்கான தேர்வுகளையும் அரசு ரத்து செய்து உத்தரவிட்டது.

தேர்வு எழுதாமல் கட்டணம் கட்டிய அனைவருமே தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவித்தது. இந்நிலையில், அண்ணா பல்கலைக் கழகம் மூலம் பிஇ, பிடெக் உள்ளிட்ட படிப்புகளை படிக்கும் மாணவர்களுக்கு தேர்வு ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில், அரியர் மாணவர்களுக்கும் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்ததை ஏற்க முடியாது என்றும், அவர்களுக்கு முறையாக தேர்வு நடத்தியே முடிவுகள் அறிவிக்க வேண்டும் என்றும் அகில இந்திய தொழில் நுட்பக் கல்விக் கழகம் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.



இருப்பினும் அரியர் மாணவர்களுக்கான தேர்ச்சி செல்லுமா செல்லாதா என்ற குழப்ப நிலை நீடித்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் அனைத்து பல்கலைக் கழகங்கள் மற்றும் அவற்றுடன் இணைப்பு பெற்றுள்ள கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைனில் நடத்த வேண்டும் என்று உயர்கல்வித்துறை முடிவு செய்து அதன்படி, அந்தந்த பல்கலைக் கழகங்கள் இறுதி செமஸ்டர் தேர்வுக்கான அட்டவணைகளை வெளியிட்டு வருகின்றன.



* சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் செப்டம்பர் 21ம் தேதி முதல் 25ம் தேதி நடக்கிறது.
* மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் 17ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடக்கிறது.
* அண்ணா பல்கலைக்கழகத்துக்கு வரும் 24ம் தேதி முதல் 29ம் தேதி வரை தேர்வுகள் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றில் 38 தலைப்புகளில் உள்ள பட்டப் படிப்புகளுக்கு தேர்வு நடக்கும். அவற்றில் பிஇ பட்டங்கள் 28, பிடெக் பட்டப்படிப்பு 11, பிஆர்க் 1க்கு தேர்வுகள் நடக்கும்.


* பாரதியார் பல்கலைக்கழகம் செப்டம்பர் 21ம் தேதி முதல் அக்டோபர் 7ம் தேதி வரையும்,
* பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்கு செப்டம்பர் 21ம் தேதி முதல் 25ம் தேதி வரை ஆன்லைனில் தேர்வுகள் நடைபெறும்.
*  அழகப்பா பல்கலைக்கழக தேர்வுகள் 15ம் தேதி முதல் தேர்வுகள் நடக்கிறது.


* மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் வரும் 21ம் தேதி முதல் 30ம் தேதி வரையும்,
* பெரியார் பல்கலைக்கழகம் 21ம் தேதி முதல் 29ம் தேதி வரையும்,
* தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகம் 19ம் தேதி முதல் 30ம் தேதி வரையும்,
* திருவள்ளுவர் பல்கலைக்கழகம் 16ம் தேதி முதல் 23ம் தேதி வரையும்,
* தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக்கழகம் 17ம் தேதி முதல் 29ம் தேதி வரையும்,
* அண்ணாமலை பல்கலைக்கழகம் 21ம் தேதி முதல் 30ம் தேதி வரையும்,
* டெக்னிகல் எஜுகேசன் 23ம் தேதி முதல் 29ம் தேதி வரை  ஆகிய தேதிகளில் ஆன்லைன் வழியே தேர்வுகள் நடக்கிறது.

.

மூலக்கதை