வேலூர் மாவட்டத்தில் பாரத பிரதமர் கிசான் திட்ட முறைகேடு; கணினி ஆபரேட்டர் 8 பேர் பணி நீக்கம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
வேலூர் மாவட்டத்தில் பாரத பிரதமர் கிசான் திட்ட முறைகேடு; கணினி ஆபரேட்டர் 8 பேர் பணி நீக்கம்

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் பாரத பிரதமர் கிசான் திட்டத்தில் 3,700 பேரைமுறைகேடாக சேர்த்து 1. 20 கோடி மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து பணத்தை வசூலிக்கவும், மேலும் முறைகேடு நடந்துள்ளதா என்பதை கண்டறிய ஒவ்வொரு வட்டார ஒன்றியத்திற்கும் ஒரு துணை ஆட்சியர் தலைமையில் வருவாய், வேளாண்மை, தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தலைமையில் 7 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வட்டார வாரியாக சென்று வங்கி எண்களை வைத்து அந்தந்த பகுதிகளில் ஆய்வு செய்து வருகின்றனர். இதுவரை 61 லட்சம் திரும்ப வசூலிக்கப்பட்டுள்ளது.

பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

இதற்கிடையில், வேலூர் மாவட்டத்தில் இம்முறைகேடு விவகாரத்தில் தொடர்புடைய வேளாண் உதவி அலுவலர்கள், ஒப்பந்த கணினி ஆபரேட்டர்கள் 17 பேர் மீது விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில் 8 ஒப்பந்த கணினி ஆபரேட்டர்களை பணி நீக்கம் செய்து வேளாண் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் 8 வேளாண் அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதற்காக வேளாண் செயலாளருக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் நடைபெற்றுள்ள மோசடி குறித்து சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதால், முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனர்.

தர்மபுரி நபர் திருப்பத்தூரில் முறைகேடு

திருப்பத்தூர் மாவட்டத்தில் வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்கள் சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரதத்தில் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த நபருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.

அந்த நபர் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வேளாண் அதிகாரி மற்றும் ஒப்பந்த கணினி ஆபரேட்டர்களின் உதவியோடு முறைகேடு செய்துள்ளாரா? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

.

மூலக்கதை