அவசரப்படுகிறார்களா அனிகாவும் எஸ்தர் அனிலும்

தினமலர்  தினமலர்
அவசரப்படுகிறார்களா அனிகாவும் எஸ்தர் அனிலும்

சமீப வருடங்களில் ரசிகர்களின் மனதை கவர்ந்த சற்றே சீனியர் குழந்தை நட்சத்திரங்கள் என்றால் பாபநாசம் படத்தில் கமலின் மகளாக நடித்த எஸ்தர் அனிலும், விஸ்வாசம் படத்தில் அஜித்தின் மகளாக நடித்த அனிகா சுரேந்திரனும் தான்.. ஆனால் தற்போது பருவ குமரிகளாக டீனேஜின் மத்தியில் அடியெடுத்து வைத்துள்ள இந்த இருவரும், கடந்த சில நாட்களாகவே “நாங்கள் கதாநாயகியாக நடிப்பதற்கு தயார்” என அறிவிக்கும் வகையில், விதம்விதமான தங்களது கிளாமர் புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு வருகிறார்கள்.

சமீபத்திய படங்களில் தான், இவர்களை குழந்தை நட்சத்திரமாக பார்த்து பழகிய ரசிகர்களால், உடனே இவர்களை கதாநாயகியாக ஏறுக்கொள்ள முடியுமா, இவர்களால் ஆரம்ப கட்டத்திலேயே வெற்றியை ருசிக்க முடியுமா என்றால் சந்தேகம் என்றுதான் சொல்ல வேண்டும். அதனால் தான் இவர்கள் சற்று கவர்ச்சியாக போட்டோ போட்டால் ரசிகர்கள் உடனே எதிர்வினை ஆக்குகிறார்கள்.

இவர்களுக்கு முந்தைய உதாரணங்களாக பத்து வருடங்களுக்கு முன், பூர்ணிதா (கல்யாணி), சரண்யா மோகன் ஆகியோரை இங்கே குறிப்பிடலாம். குழந்தை நட்சத்திரங்களாக வலம் வந்த இந்த இரண்டு பேரும் கதாநாயகி ஆசையில் மிகக்குறைந்த வயதிலேயே, அதாவது, பக்குவத்துக்கு வராத 15 வயதிலேயே கதாநாயகியாக அரிதாரம் பூசியவர்கள் தான். படங்களும் அவர்களுக்கு சரியாக அமையவில்லை.. ரசிகர்களும் அவர்களை கதாநாயகியாக ஏற்கவில்லை..

இதுவே இன்னும் சில வருடங்களுக்கு பின்னோக்கி சென்றால் மீனா, பேபி ஷாலினி என இரண்டு குழந்தை நட்சத்திரங்கள் கதாநாயகியாக மாறி வெற்றிக்கொடி காட்டிய உதாரணங்களையும் பார்க்க முடியும்.. கிட்டத்தட்ட இருவரும் பதினெட்டு வயதில் தான் கதாநாயகியாக நுழைந்தார்கள். அந்த சமயத்தில் அவர்கள் இருவருக்கும் கதாநாயகிக்கே உண்டான உடல்வாகும் பக்குவப்பட்ட முகத்தோற்றமும் அமைந்திருந்தன. அது அவர்களுக்கு பிளஸ் ஆக அமைந்தது.

ஆனால் தங்களது 15 வயதில் கதாநாயகியாக மாறிய பூர்ணிதாவுக்கும் சரண்யா மோகனுக்கும் அவர்களது குழந்தைத்தனம் மாறாத முகம் மைனஸ் ஆக இருந்தது. அதனால் தான் அவர்களால் சோபிக்க முடியவில்லை. தற்போது அதேபோன்ற நிலையில் தான் 15 வயதே ஆன அனிகாவும் எஸ்தர் அனிலும் இருக்கிறார்கள்.

அண்ணாமலை படத்தில் ரஜினி தனது மகளிடம் “இது ரெண்டும்கெட்டான்' வயசு.. இந்த நேரத்துல புத்திசாலிங்க முக்கியமான முடிவை எடுக்க மாட்டங்க” என சொல்வார். அதுபோல அனிகாவும் எஸ்தர் அனிலும் இன்னும் இரண்டு வருடங்களாவது பொறுமை காத்தால் நிச்சயம் சினிமா என்கிற பூமியை தங்கள் பங்கிற்கும் ஒரு ரவுண்டு வெற்றிகரமாக ஆளலாம்.

மூலக்கதை