ஐந்து சீனப் பொருட்கள் இறக்குமதிக்கு அமெரிக்கா தடை

தினமலர்  தினமலர்
ஐந்து சீனப் பொருட்கள் இறக்குமதிக்கு அமெரிக்கா தடை

வாஷிங்டன்: தொழிலாளர்களை பலவந்தப்படுத்தி வேலை வாங்குவதாக கூறி, சீனாவில் உற்பத்தி செய்யப்படும், ஐந்து பொருட்களை இறக்குமதி செய்ய, அமெரிக்கா தடை விதித்துள்ளது.

கொரோனா பரவல் துவங்கியதில் இருந்தே, அமெரிக்கா - சீனா இடையேயான உறவு மோசமாகி வருகிறது. கொரோனா பரவலுக்கு, சீனா தான் காரணம் என, அமெரிக்க அதிபர் டிரம்ப் பகிரங்கமாக குற்றம்சாட்டிவருகிறார். சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் மனித உரிமைகள் மீறல், திபெத், ஹாங்காங் ஆகியவற்றுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்குவது, தொழில்நுட்ப திருட்டு உட்பட பல பிரச்னைகளில், அமெரிக்கா - சீனா இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் உள்ள உய்கர் முஸ்லிம் உள்ளிட்ட பல்வேறு சிறுபான்மை இனத்தவர் வசிக்கின்றனர். இங்கு, 10 லட்சத்துக்கும் அதிகமான சிறுபான்மையினரை, முகாம்களில் அடைத்து, பொருட்கள் தயாரிப்பில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்துவதாக சீன அரசு மீது மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டி வருகின்றன.

ஆனால், இதற்கு சீன அதிகாரிகள், 'முகாம்களில், சிறுபான்மையின மாணவர்களின் மத பயங்கரவாத போக்கை மாற்ற பயிற்சி அளித்து, மாண்டரின் மொழி கற்பிக்கப்படுகிறது; கட்டாய பணியில் ஈடுபடுத்தவில்லை' என, பதில் அளித்தனர். ஆனால், இதை, அமெரிக்கா உட்பட பல நாடுகளும், மனித உரிமை அமைப்புகளும் ஏற்றுக் கொள்ளவில்லை. 'உற்பத்தியை அதிகரிக்க, சீன அரசு, தொழிலாளர்களை கட்டாயப்படுத்தி வேலை வாங்குகிறது. ஜின்ஜியாங் மாகாணத்தில், தொழிலாளர்களை பலவந்தப்படுத்தி, பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இது, நவீன அடிமை முறை' என, அமெரிக்கா விமர்சித்தது.

நடவடிக்கை


இந்நிலையில், தொழிலாளர்களை கட்டாயப்படுத்தி, சித்ரவதை செய்து, உற்பத்தி செய்யப்படும் சீன பொருட்களை இறக்குமதி செய்வதை தடுக்க, அமெரிக்கா நடவடிக்கை எடுத்துள்ளது. முதல் கட்டமாக, பருத்தி, தக்காளி, கணினி உபகரணங்கள் உள்ளிட்ட, ஐந்து சீன பொருட்களை இறக்குமதி செய்ய, அமெரிக்கா தடை விதித்துள்ளது.

மூலக்கதை