முதல் கையெழுத்து எதற்கு? கமலா ஹாரிசின் திட்டம்

தினமலர்  தினமலர்
முதல் கையெழுத்து எதற்கு? கமலா ஹாரிசின் திட்டம்

வாஷிங்டன்:'அமெரிக்க அதிபர் மற்றும் துணை அதிபர் தேர்தலில் வென்றதும், 'கொரோனா' வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாகவே, முதல் கையெழுத்து இடுவோம்' என, ஜனநாயக கட்சியின் துணை அதிபர் வேட்பாளரான, இந்தியாவை பூர்வீகமாக கொண்ட, கமலா ஹாரிஸ் கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் நவ., 3ல் நடக்க உள்ளது. குடியரசு கட்சி சார்பில், அதிபர், டொனால்டு டிரம்பும், ஜனநாயகக் கட்சி சார்பில், ஜோ பிடனும் போட்டியிடுகின்றனர். ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் வேட்பாளராக, ஆப்ரிக்கா மற்றும் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட, செனட், எம்.பி., கமலா ஹாரிஸ் நிறுத்தப்பட்டுள்ளார். பல்வேறு பேட்டிகள் மற்றும் பிரசார கூட்டங்களில், தன் தாய், ஷியாமளா குறித்து பல விஷயங்களை கமலா பகிர்ந்து கொண்டுள்ளார்.

தேர்தல் நிதி திரட்டும் நிகழ்ச்சி ஒன்றில், பார்வையாளர்கள் கேள்விகளுக்கு பதிலளித்து, அவர் கூறியதாவது: துணை அதிபர் வேட்பாளராக என்னை நிறுத்துவதாக, ஜோ பிடன் கூறியபோது, எனக்கு, என்னுடைய தாய் தான் நினைவுக்கு வந்தார். நான் இந்த நிலைக்கு உயர்ந்துள்ளதை, மேலேயிருந்து பார்த்து மகிழ்ச்சி அடைந்திருப்பார் என்று நினைக்கிறேன்.

நாங்கள் பதவியேற்ற, முதல், 100 நாட்களில் நிறைவேற்ற வேண்டிய திட்டங்கள் குறித்து ஆலோசித்து வருகிறோம். எங்களுடைய முதல் கையெழுத்து, கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக இருக்கும். அதிக அளவில் பரிசோதனைகள் செய்வது, தடுப்பூசி கண்டுபிடிப்பதை வேகப்படுத்துவது ஆகியவை மேற்கொள்ளப்படும்.

பருவநிலை மாறுபாடு தொடர்பான, பாரிஸ் ஒப்பந்தத்தில் இணைவது மிக முக்கியமான திட்டமாகும். 'நேட்டோ' அமைப்பில் உள்ள நாடுகளுடனான உறவை புதுப்பித்தல் மற்றொரு முக்கியமான பணியாகும்.

போதிய ஆவணங்கள் இல்லாமல், அகதிகளாக தவிக்கும், ஒரு கோடிக்கும் மேற்பட்டோருக்கு, குடியுரிமை வழங்குவது தொடர்பாக, எங்களுடைய நிர்வாகம் கருணையுடன் பரிசீலிக்கும். இனவெறி தாக்குதலை தடுப்பதற்கான மசோதா நிச்சயம் கொண்டு வரப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

கமலா ஹாரிஸ் மற்றும் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் இணைந்து நடத்திய நிதி திரட்டும் நிகழ்ச்சியில், 44 கோடி ரூபாய் திரட்டப்பட்டு உள்ளது.

மூலக்கதை