'நீட்' தேர்வு விவாதத்தில் திமுக- காங்., திணறல்

தினமலர்  தினமலர்
நீட் தேர்வு விவாதத்தில் திமுக காங்., திணறல்

சென்னை : ''காங்கிரஸ் கூட்டணியில், தி.மு.க., இடம் பெற்றிருந்த, 2010ம் ஆண்டில், 'நீட்' தேர்வை கொண்டு வந்தது தான், 13 பேர் மரணத்திற்கு காரணம். நீட் தேர்வு வர, தி.மு.க., துணை போனதை, யாரும் மறுக்க முடியாது. வரலாற்றுப் பிழையை, தி.மு.க., ஏற்படுத்தியுள்ளது,'' என, முதல்வர் இ.பி.எஸ்., குற்றஞ்சாட்டினார்.

'நீட்' தேர்வு தொடர்பாக, சட்டசபையில் நடந்த விவாதம்: எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின்: நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என, தி.மு.க., உள்ளிட்ட அனைவரும், மத்திய அரசை வலியுறுத்தி வருகிறோம். சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசுக்கு அனுப்பினோம். நம் உணர்வுகளை, மத்திய அரசு மதிக்கவில்லை.


நீட் தேர்வுக்கு முந்தைய நாளில் மட்டும், மூன்று மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். தமிழக சட்டசபை மற்றும் மாணவர்கள் உணர்வுகளை மதிக்காத, நீட் தேர்வை இதுவரை ரத்து செய்யாத, மத்திய அரசை எதிர்த்தும், நீட் தேர்வை ரத்து செய்யும்படி, அ.தி.மு.க., அரசு கேட்கவில்லை எனக் கூறியுள்ள, மத்திய அமைச்சர் பியுஷ் கோயலை கண்டித்தும், கண்டன தீர்மானம் கொண்டு வர வேண்டும். அ.தி.மு.க.,- இன்பதுரை: நீட் தேர்வானது, மத்திய காங்கிரஸ் அரசில், தி.மு.க., அங்கம் வகித்தபோது, 2010ல் கொண்டு வரப்பட்டது. இதை மறுக்க முடியுமா?

ஸ்டாலின்: தி.மு.க., எப்போதும், நீட் தேர்வை ஏற்கவில்லை. தி.மு.க., ஆட்சியில், தமிழகத்தில் நீட் தேர்வு அனுமதிக்கப்படவில்லை. முதல்வர்: 2010ல், நீட் தேர்வை கொண்டு வந்தது யார் என்பதற்கு பதில் கூறுங்கள்.

இன்பதுரை: வரலாற்றை திரிக்க முடியாது. காங்., - தி.மு.க., கொண்டு வந்த, நீட் தேர்வுக்கு எதிராக, ஜெ., வழக்கு தொடர்ந்து, நீட் தேர்வை ரத்து செய்தார். மத்திய காங்., அரசு சீராய்வு மனு போட்டது. அவ்வாறு செய்ய வேண்டாம் என, ஜெ., வலியுறுத்தினார்.அப்போது, தி.மு.க., வாய்மூடி இருந்தது. நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வது தி.மு.க.,விற்கு வழக்கமானது.

தி.மு.க., கோபம்: இவ்வாறு பேசிய இன்பதுரை, தி.மு.க., குறித்து பேசிய வார்த்தை, தி.மு.க.,வினரிடம் கோபத்தை ஏற்படுத்தியது. அதை, சபை குறிப்பிலிருந்து நீக்கக் கோரினர். அதை ஏற்று சபாநாயகர், அந்த வார்த்தையை சபை குறிப்பிலிருந்து நீக்கினார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக், அபுபக்கர்: நாம் எதிர்ப்பை, பலவீனப்படுத்த வேண்டாம். நீட் தேர்வை ஒருமித்து எதிர்ப்போம். நீட் தேர்வால், தமிழ் வழியில் படித்த மாணவர்கள், மருத்துவம் படிக்க முடியாத நிலை உள்ளது.


முதல்வர்: யாருடைய ஆட்சியில் நீட் தேர்வு வந்தது, எப்போது வந்தது, யார் அறிமுகப்படுத்தினர் என்பது, இந்த நாட்டிற்கே தெரியும். நீட் வேண்டாம் என, 2010ல், உச்ச நீதிமன்றத்தில் வாதாடி தீர்ப்பை பெற்றது அ.தி.மு.க.,காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்று, 2010ல் தி.மு.க., நீட் தேர்வை கொண்டு வந்தது தான், 13 பேர் மரணத்திற்கு காரணம். நீட் தேர்வு கொண்டு வர, தி.மு.க., துணை போனதை யாரும் மறுக்க முடியாது. வரலாற்றுப் பிழையை ஏற்படுத்தி விட்டீர்கள்.

அமைச்சர் சி.வி.சண்முகம்: நீட் தேர்வு கொண்டு வரப்பட்ட போது, தி.மு.க.,வைச் சேர்ந்த காந்திசெல்வன், சுகாதாரத்துறை இணை அமைச்சராக இருந்தார். அமைச்சர் விஜயபாஸ்கர்: இன்று நீட் தேர்வுக்கு எதிராக துடிக்கும் தி.மு.க., அன்றே துடித்திருந்தால், இந்த பிரச்னை ஏற்பட்டிருக்காது.நீட் தேர்வை கொண்டு வந்துவிட்டு, அதை வைத்து, தி.மு.க., அரசியல் செய்வது, வேதனையாக உள்ளது. எட்டு மாதங்களுக்கு பின், நீட் தேர்வை ரத்து செய்து விடுவோம் என, எதிர்க்கட்சி தலைவர் கூறியுள்ளார். அந்த வழியை கூறுங்கள்; இப்போதே செய்வோம்.

ஸ்டாலின்: ஜல்லிக்கட்டுக்கு விலக்கு பெற்றது போல, மத்திய அரசை வலியுறுத்தி, விலக்கு பெறுவோம்.
அமைச்சர் விஜயபாஸ்கர்: ஜல்லிக்கட்டு, தமிழகம் மட்டும் சார்ந்த பிரச்னை. நீட் தேர்வு இந்தியா முழுவதற்குமானது. தமிழகத்தை தவிர, அனைத்து மாநிலங்களும் ஏற்றுக்கொண்டு விட்டன. நீட் தேர்வை ரத்து செய்ய, எள் முனையளவு வழி இருந்தாலும், அதை பின்பற்றி நீட் தேர்வை ரத்து செய்ய, தமிழக அரசு தயாராக உள்ளது.இவ்வாறு, விவாதம் நடந்தது.

மூலக்கதை