மறக்க முடியுமா? - அமரன்

தினமலர்  தினமலர்
மறக்க முடியுமா?  அமரன்

படம் : அமரன்
வெளியான ஆண்டு : 1992
நடிகர்கள் : கார்த்திக், பானுப்ரியா, ராதாரவி, பிரதாப் போத்தன்
இயக்கம் : கே.ராஜேஸ்வர்
தயாரிப்பு : அன்னலட்சுமி பிலிம்ஸ்

தமிழில் வெளியான, டான் வகை படங்களில், முக்கிய இடம் பிடிக்கிறான் அமரன்! தமிழில், 70 எம்.எம்., வடிவத்தில் எடுக்கப்பட்ட முதல் படம், இது. இப்படத்தில், நடிகர் கார்த்திக், நான் வெத்தல போட்ட ஷோக்குல... என்ற பாடல் வழியாக, பாடகராக அடியெடுத்து வைத்தார். ஆதித்யன் மற்றும் விஸ்வா குரு இசையில், பாடல்கள் வெற்றி பெற்றன. இப்படத்தின் மூலமாகத் தான், இசையமைப்பாளர் ஆதித்யன் அறிமுகமானார். படத்தை தயாரித்து, இயக்கியிருந்தார் கே.ராஜேஸ்வர்.

ஏரியாவில், சிறிய ரவுடி போல செயல்படும் அமரன், ஒருநாள், ராஜவர்மா என்ற வித்தியாசமான மனிதனை சந்திக்கிறான். அவர், ஆண்டவ பெருமாள் என்ற தாதாவை கொலை செய்யும் படி, அமரனை துாண்டுவார். ராஜவர்மா மற்றும் அமரனின் குடும்பத்தை, ஆண்டவ பெருமாள் தான் கொலை செய்திருப்பார். இதனால், ஆண்டவ பெருமாளை எதிர்கொள்ளும் அமரன், சந்தர்ப்ப சூழலால், கேரளாவிற்கு தப்பி செல்கிறான். சில ஆண்டுகளுக்கு பின், தமிழகம் வரும் அமரன், ரத்தம் வெறியாட்டத்துடன், ஆண்டவ பெருமாளை கொலை செய்கிறான்.

ஆண்டவர் பெருமாளாக, இந்தப் படத்தின் மூலமாக, கொடூர வில்லனாக, ராதாரவி நடித்திருப்பார். அவருடைய, மேக் அப் மற்றும் குரல், அந்த கதாபாத்திரத்திற்கு மேலும் வலிமை சேர்த்தன.

கார்த்திக், உருட்டுக்கட்டையை எடுத்து வரும் காட்சிகளில், தியேட்டரில், விசில் சத்தம் காதை கிழித்தது. பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு, த்ரில்லர் ஆக்ஷன் படத்திற்கு தேவையான ஒளியை, ரசிகர்களுக்கு கடத்தியது. சமீபத்தில், இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்து, பேச்சு எழுந்தது. என்ன ஆகும் என, தெரியவில்லை. அடித்து துாள் கிளப்பினான், அமரன்!

மூலக்கதை