ஈரானுக்கு அதிபர் டிரம்ப் எச்சரிக்கை அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தினால் 1000 மடங்கு பதிலடி கொடுக்கப்படும்

தினகரன்  தினகரன்
ஈரானுக்கு அதிபர் டிரம்ப் எச்சரிக்கை அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தினால் 1000 மடங்கு பதிலடி கொடுக்கப்படும்

வாஷிங்டன்: ‘அமெரிக்கா மீது ஏதாவது தாக்குதல் நடத்தினால் அதற்கு பதிலாக 1000 மடங்கு தாக்குதல் நடத்தப்படும்’ என ஈரானை அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.  அதிபர் டிரம்ப் கடந்த 2015ம் ஆண்டு ஈரானுடனான அணுஆயுத ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியதோடு, ஈரானுக்கு எதிராக பல்வேறு தடைகளையும் விதித்தார். இதன் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே மோதல் வெடித்தது. கடந்த ஜனவரியில் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்க ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார்.  இதற்கு பதிலடியாக, வரும் நவம்பரில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடப்பதற்கு முன்பாக தென்னாப்பிரிக்காவில் உள்ள அமெரிக்க தூதர் லானா மார்க்சை கொல்வதற்கு ஈரான் சதிதிட்டம் தீட்டியுள்ளதாக உளவுத்துறை தகவல்கள் கூறுகின்றனர். இது தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.  டிரம்ப் தனது டிவிட்டர் பதிவில், “காசிம் சுலைமானி கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான் ஒரு படுகொலை அல்லது அமெரிக்காவிற்கு எதிராக எந்த விதத்திலாவது தாக்குதல் நடத்தலாம். எதிர்கால தாக்குதல் நடத்துவதற்கும், அமெரிக்க படைகள் மீது தாக்குதல் நடத்தவும் திட்டமிடலாம். அமெரிக்கா மீது ஈரான் நடத்தும் தாக்குதலுக்கு ஆயிரம் மடங்கு பதில் தாக்குதல் நடத்தப்படும்” என குறிப்பிட்டுள்ளார்.  இது தொடர்பாக ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் கூறுகையில், “ அமெரிக்காவில் வருகிற நவம்பர் 3ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்ற உள்ளது. இதற்கு முன்னோடியாக நடத்தப்படும் ஈரானுக்கு எதிரான பிரசாரத்தின் ஒரு பகுதிதான் அமெரிக்காவின் இந்த குற்றச்சாட்டுக்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

மூலக்கதை