போதை பொருள் விவகாரத்தில் பரபரப்பு திருப்பம் கர்நாடக அமைச்சருக்கு தொடர்பு?

தினகரன்  தினகரன்
போதை பொருள் விவகாரத்தில் பரபரப்பு திருப்பம் கர்நாடக அமைச்சருக்கு தொடர்பு?

பெங்களூரு: கன்னட திரையுலகினருக்கு போதை பொருள் சப்ளை செய்த வழக்கில் கைதான ராகுலுடன், அமைச்சர் அசோக் நெருக்கமாக நின்று போட்டோ எடுத்து கொண்டதுடன் கேக் ஊட்டிய போட்டோ தொடர்பான சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.  கன்னட திரையுலகை கதிகலங்க வைத்து வரும் போதை பொருள் விவகாரம் தற்போது அரசியல் பிரமுகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தும் வண்ணம் அமைந்துள்ளது. போதை பொருள் வழக்கில் கைதானா ராகிணி, சஞ்சனா, ராகுல், வீரேன் கண்ணா ஆகியோர் 34க்கும் அதிகமான அரசியல் புள்ளிகள், தொழிலதிபர்கள், நடிகர், நடிகைகளுக்கு இதில் தொடர்பு இருப்பதாக கூறியிருந்தனர். அதன்படி நேற்று மஜதவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜீவராஜின் மகன் ஆதித்யா ஆல்வாவின் ரிசார்ட்டில் சி.சி.பி அதிரடி சோதனை நடத்தியுள்ளது. இந்நிலையில் போதை பொருள் வழக்கில் சிறை சென்றுள்ள தொழிலதிபரும், ஆடைவடிவமைப்பாளருமான ராகுல் என்பவர், பல அரசியல் பிரமுகர்களுடன் நெருக்காக இருந்து போட்டோ எடுத்துள்ளார். அதில் ஒருவர் பாஜவை சேர்ந்த வருவாய் துறை அமைச்சர் ஆர். அசோக். ராகுல் பிறந்த நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அசோக், அவருடன் சேர்ந்து போட்டோவிற்கு போஸ் கொடுத்துள்ளார். மேலும் பல நிகழ்ச்சிகளில் ராகுலுடன் சேர்ந்து போட்டோ எடுத்துள்ளார். அசோக்கும் தனது நிகழ்ச்சிகளுக்கு ராகுலை வரவழைத்திருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சி.சி.பி போலீசாருக்கு அசோக் ராகுலுடன் இருந்த போட்டோ கிடைத்துள்ளது. போதை பொருள் வழக்கில் அரசியல் பிரமுகர்களுக்கு தொடர்பு உள்ளது என்று கூறப்பட்டு வரும் நிலையில், அசோக், ராகுல் போட்டோ அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பதில் அளித்த அசோக், தொகுதியில் நடந்த வளர்ச்சி திட்ட பணி தொடர்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது, அவர் என்னுடன் போட்டோ எடுத்து கொண்டார். அவர் போதை பொருள் கும்பலை சேர்ந்தவர் என்பது தெரியாது. போதை பொருள் வழக்கிற்கும் எனக்கும் எந்த தொடர்பு இல்லை என்று கூறியுள்ளார். இதற்கிடையில் எதிர்கட்சியான காங்கிரஸ், அமைச்சர் அசோக்கையும் விசாரிக்க வேண்டுமென்று கோரிக்கை வைத்துள்ளது.தம்பதிக்கு நோட்டீஸ்கன்னட நடிகையான ஆண்ட்ரிதா ராய், கடந்த ஆண்டு வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் ‘கொழும்பில் உள்ள கேசினோவில் எனது திரைப்படம் தொடர்பான ஆலோசனை நிகழ்ச்சி மற்றும் விருந்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு எனக்கு அழைப்பு விடுத்த கேசினோ உரிமையாளர் சேக் பைசலுக்கு மிகவும் நன்றி’ என கூறியிருந்தார். போதை பொருள் விவகாரத்தில் தேடப்பட்டு வரும் நபர் சேக் பைசல். அவருடன் சேர்ந்து ஆண்ட்ரிதா ராய் போட்டோ எடுத்துள்ள ஆதாரங்கள் கிடைத்துள்ளது. தற்போது ஆண்ட்ரிதா, நடிகர் டிக்காந்திற்கு திருமணம் நடந்து முடிந்துவிட்டது. இருவரும் இல்லற வாழ்க்கையில் இன்பமாக வாழ்ந்து கொண்டிருக்கும் நேரத்தில், அவர் கொடுத்த பேட்டி, தற்போது இருவரையும் சிக்க வைத்துவிட்டது. கணவன், மனைவி இருவரையும் சி.சி.பி தங்கள் கண்காணிப்பிற்குள் கொண்டு வந்ததுடன், 2 பேருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதன்படி இன்று அவர்கள் சி.சி.பி அலுவலகத்தில் ஆஜராகவுள்ளனர்.

மூலக்கதை