தாமஸ் , உபெர் கோப்பை பேட்மின்டன் தொடர் ஒத்திவைப்பு

தினகரன்  தினகரன்
தாமஸ் , உபெர் கோப்பை பேட்மின்டன் தொடர் ஒத்திவைப்பு

புதுடெல்லி: டென்மார்க்கில் நடைபெற இருந்த தாமஸ் மற்றும் உபெர் கோப்பை பைனல்ஸ் பேட்மின்டன் தொடர்கள் அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்படுவதாக உலக பேட்மின்டன் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. பேட்மின்டன் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இந்த தொடர்கள் டென்மார்க்கின் ஆர்ஹஸ் நகரில் வரும் அக்டோபர் 3ம் தேதி தொடங்கி 11ம் தேதி வரை நடைபெறுவதாக இருந்தது. இந்த தொடர்களுக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு வீரர், வீராங்கனைகள் தீவிர பயிற்சி மேற்கொண்டு வந்தனர். எனினும், கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக தாய்லாந்து, ஆஸ்திரேலியா, சீன தைபே, அல்ஜீரியா அணிகள் இந்த தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தன. இந்த நிலையில், கடந்த வெள்ளியன்று இந்தோனேசியா மற்றும் தென் கொரியாவும் விலகுவதாக அறிவித்ததை அடுத்து, உலக பேட்மின்டன் கூட்டமைப்பின் (பிடபுள்யுஎப்) நிர்வாகக் குழு உறுப்பினர்கள் மற்றும் டென்மார்க் பேட்மின்டன் சங்க நிர்வாகிகள் வீடியோ கான்பரன்சில் அவசரமாகக் கூடி ஆலோசனை நடத்தினர். இதைத் தொடர்ந்து, சிங்கப்பூர் அல்லது ஹாங்காங்கில் போட்டிகளை நடத்தலாமா என பரிசீலிக்கப்பட்டது.  எனினும், பெரும்பாலான அணிகள் தற்போதைய சூழ்நிலையில் பங்கேற்க முடியாது என்பதில் உறுதியாக இருப்பதால், போட்டித் தொடரை அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைப்பதாக  பிடபுள்யுஎப் நேற்று அறிவித்தது.

மூலக்கதை