தபால் நிலையத்திற்கு சந்தீப் சிங் பெயர் அமெரிக்காவில் மசோதா நிறைவேற்றம்

தினமலர்  தினமலர்
தபால் நிலையத்திற்கு சந்தீப் சிங் பெயர் அமெரிக்காவில் மசோதா நிறைவேற்றம்

வாஷிங்டன்:அமெரிக்க பார்லி., பிரதிநிதிகள் சபை, மறைந்த போலீஸ்காரர், சந்தீப் சிங் தலிவாலை கவுரவிக்கும் விதமாக, அவர் பெயரை, ஹூஸ்டன் தபால் நிலையத்திற்கு சூட்டுவதற்கான மசோதாவை, ஒருமனதாக நிறைவேற்றியது.

இந்தியாவைச் சேர்ந்த, சந்தீப் சிங் தலிவால், சிறு வயதிலேயே, பெற்றோருடன் அமெரிக்காவின், டெக்சாஸ் மாகாணம், ஹூஸ்டன் நகரில் குடியேறினார்.வளர்ந்து வியாபாரத்தில் சிறப்பாக செயல்பட்ட போதிலும், 2009ல், சமூகப் பணியாற்றும் நோக்கில், ஹாரிஸ் நகர போலீசில் சேர்ந்தார்.கடந்த, 2019, செப்., 27ல், பணியில் இருந்த போது, ஒரு காரை நிறுத்தி விசாரிக்க முயன்றார்.

அப்போது, காரில் இருந்த நபர் திடீரென துப்பாக்கியால் சுட்டதில், சந்தீப் சிங் தலிவால் உயிரிழந்தார். இதையடுத்து, அமெரிக்க - சீக்கிய சமூக மக்களிடம் ஒற்றுமையை ஏற்படுத்த பாடுபட்ட, சந்தீப் சிங் தலிவாலை கவுரவிக்க வேண்டும் என்ற தீர்மானம், கடந்த ஆண்டு, அமெரிக்க பார்லி.,யில் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி, நேற்று, சந்தீப் சிங் தலிவால் பெயரை, ஹூஸ்டன் தபால் நிலையத்திற்கு சூட்டும் மசோதா, அமெரிக்க பார்லி., பிரதிநிதிகள் சபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.செனட் சபை ஒப்புதலுக்குப் பின், 'டெபுடி சந்தீப் சிங் தலிவால் போஸ்ட் ஆபிஸ் சட்டம்' அமலுக்கு வரும்.

அமெரிக்காவின், டெக்சாஸ் மாகாணத்தில், மேற்பார்வை போலீஸ் பிரிவின் முதல் சீக்கியர்; பணியில் தாடி, தலைப்பாகை அணிய அனுமதி பெற்ற முதல் சீக்கியர் என்ற சிறப்புகளை பெற்றவர், சந்தீப் சிங் தலிவால். தற்போது, தபால் நிலையத்திற்கு பெயர் சூட்டப்பட்ட, இரண்டாவது, இந்திய - அமெரிக்கர் என்ற சிறப்பும் கிடைத்து உள்ளது.கடந்த, 2006ல், முதன் முறையாக, இதுபோன்ற சிறப்பு, தெற்கு கலிபோர்னியா எம்.பி., தலிப் சிங் சாந்துக்கு கிடைத்தது.

மூலக்கதை