பும்ரா, பவுல்ட், பட்டின்சன்... * மிரட்டும் மும்பை பவுலிங் | செப்டம்பர் 15, 2020

தினமலர்  தினமலர்
பும்ரா, பவுல்ட், பட்டின்சன்... * மிரட்டும் மும்பை பவுலிங் | செப்டம்பர் 15, 2020

அபுதாபி: பும்ரா, பவுல்ட், பட்டின்சன் என ஐ.பி.எல்., தொடரில் மும்பை அணியின் வேகப்பந்து வீச்சு வலுவானதாக உள்ளது.

ஐ.பி.எல்., தொடரில் நான்கு முறை கோப்பை வென்றது ரோகித் சர்மாவின் மும்பை அணி (2013, 2015, 2017, 2019). இம்முறையும் வலுவான பவுலிங் படையுடன் களமிறங்குகிறது. முன்னணி பவுலர் மலிங்கா விலகினாலும், இந்தியாவின் பும்ராவுடன் இணைந்து பந்து வீச, ஆஸ்திரேலிய அணியின் பட்டின்சன், நியூசிலாந்தின் டிரன்ட் பவுல்ட் என மூவர் கூட்டணி மிரட்டக் காத்திருக்கிறது.

மும்பை அணி வெளியிட்ட ‘டுவிட்டர்’ செய்தியில்,‘பட்டின்சன் அணியுடன் இணைந்தார். பும்ரா, பவுல்ட்டுடன் கலக்க காத்திருக்கிறார்,’ என தெரிவித்தது.

பட்டின்சன் கூறுகையில்,‘‘சர்வதேச ‘டுவென்டி–20’ அரங்கில் ‘பெஸ்ட்’ பவுலர் பும்ரா. பவுல்ட்டும் அதுபோலத் தான். இப்படி, சிறந்த பவுலர்களுடன் இணைந்து செயல்பட உள்ளது, தனிப்பட்ட முறையில் எனக்கு ‘ஸ்பெஷல்’ தான். சிறந்த அனுபவமாகவும் இருக்கப் போகிறது. ஐக்கிய அரபு எமிரேட்சில் இதற்கு முன் ஒருசில ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றுள்ளேன். இந்த அனுபவம் ஐ.பி.எல்., தொடருக்கு உதவும்,’’ என்றார்.

 

யாருக்கு வாய்ப்பு

முன்னாள் வீரர் காம்பிர் கூறுகையில்,‘‘சென்னை அணிக்கு எதிரான முதல் போட்டியில் மும்பை அணி ஆதிக்கம் செலுத்த வாய்ப்புள்ளது. பேட்டிங், பவுலிங்கில் ‘பேலன்ஸ்’ ஆக உள்ளது. பும்ரா, பவுல்ட் கூட்டணி இத்தொடர் முழுவதும் மிரட்டக் காத்திருக்கிறது. சென்னை எப்படி சமாளிக்கப் போகிறது எனத் தெரியவில்லை. ரெய்னா இல்லாதது பெரும் இழப்பு,’’ என்றார்.

 

குறைக்க முடியுமா

இங்கிலாந்தில் ஒருநாள் தொடரில் பங்கேற்ற பின்,ஆஸ்திரேலிய அணியின்வார்னர்(ஹைதராபாத்), ஸ்டீவ் ஸ்மித் (ராஜஸ்தான்), ஹேசல்வுட் (சென்னை), இங்கிலாந்தின் ஆர்ச்சர் (ராஜஸ்தான்)உள்ளிட்டோர் துபாய் வருகின்றனர்.இங்கு 6 நாள் தனிமைப்படுத்தப்பட்டால், துவக்க போட்டிகளில் பங்கேற்க முடியாது. இதனால் 3 நாட்களாக குறைக்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் போர்டிடம் கேட்டுள்ளனர்.

மூலக்கதை