நீதிமன்றம் உள்ளிட்ட இடங்களில் அத்துமீறினால் கைது, ரெய்டுக்கு ‘வாரன்ட்’ தேவையில்லை; சிறப்பு பாதுகாப்பு படைக்கு கூடுதல் அதிகாரம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
நீதிமன்றம் உள்ளிட்ட இடங்களில் அத்துமீறினால் கைது, ரெய்டுக்கு ‘வாரன்ட்’ தேவையில்லை; சிறப்பு பாதுகாப்பு படைக்கு கூடுதல் அதிகாரம்

லக்னோ: அலகாபாத் நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் உத்தரபிரதேசத்தில் சிறப்பு பாதுகாப்பு படை அமைக்கப்படும் என உத்தரபிரதேச அரசு தெரிவித்துள்ளது. உத்தரபிரதேச மாநில நீதிமன்றங்களில் கடந்த சில ஆண்டுகளாக கொலை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

கையில் ஆயுதங்கள் மற்றும் துப்பாக்கியுடன் நுழையும் மர்ம நபர்கள் தாக்குதலில் ஈடுபடுகின்றனர். இதனால் நீதிபதிகள், காவல்துறையினர் உள்ளிட்ட சிலர் நீதிமன்ற வளாகத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

இதற்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. நீதிபதிகள் மற்றும் மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சிறப்பு படையினரை பணியமர்த்த நீதிமன்றம் மாநில அரசுக்கு அறிவுறுத்தியது.இந்நிலையில், நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறப்பு பாதுகாப்பு படை அமைக்கப்படும் என உத்தரபிரதேச அரசு தெரிவித்துள்ளது. இந்தக் குழுவில் 9,919 பேர் பணியமர்த்தப்படவிருக்கின்றனர்.

உயர்நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றங்கள், மாவட்ட நிர்வாக அலுவலகங்கள், மெட்ரோ ரயில், விமான நிலையங்கள், நிதி நிறுவனங்கள், வங்கிகள், கல்வி நிலையங்கள், தொழில் நிறுவனங்களில் சிறப்பு பாதுகாப்பு படையினர் பணியில் ஈடுபடவுள்ளனர். இந்தப் பகுதிகளில் கண்காணிப்பில் ஈடுபட்டு பாதுகாப்பை பலப்படுத்துவதே சிறப்பு பாதுகாப்பு படையின் பணியாகும்.

மேலும், வாரன்ட் அல்லது நீதிமன்ற உத்தரவு இல்லாமல் யாரையும் தேடவோ, கைது செய்யவோ இந்த சிறப்பு பாதுகாப்பு படையினருக்கு அதிகாரம் உள்ளது. இதுதொடர்பாக உத்தரபிரதேச அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.இதுகுறித்து, மாநில உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அவனிஷ் குமார் அவஸ்தி கூறுகையில், ‘மாநிலத்தில் அனைத்து நீதிமன்றங்களின் பாதுகாப்பை பலப்படுத்த அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, 1,747 கோடி ரூபாய் செலவில், எஸ்எஸ்எப் எனப்படும் சிறப்பு பாதுகாப்பு படை உருவாக்கப்படுகிறது.

இதற்கான மசோதா, சட்டசபை மழைக்கால கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டது. இப்பிரிவிற்கு, வாரன்ட் இல்லாமல் சோதனை மற்றும் கைது செய்யும் அதிகாரம் வழங்கப்படும்.

இப்பிரிவை மூன்று மாதங்களுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக, 1,913 பேருடன், ஐந்து பட்டாலியன்களாக அமைக்கப்படும் இந்த சிறப்பு பாதுகாப்பு படையானது, பின்னர் 9,919 பேருடன் விரிவுபடுத்தப்படும்’என்றார்.

.

மூலக்கதை