இறுதிகட்ட பரிசோதனையில் 4 தடுப்பூசிகள்... நவம்பர் மாதத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் : சீனா அறிவிப்பு!!

தினகரன்  தினகரன்
இறுதிகட்ட பரிசோதனையில் 4 தடுப்பூசிகள்... நவம்பர் மாதத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் : சீனா அறிவிப்பு!!

பெய்ஜிங் : சீனா தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசி மருந்துகள் நவம்பர் மாதம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று அந்நாட்டின் நோய்க் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. கொரோனாவுக்கு யார் முதலில் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பது என்ற போட்டி உலகளவில் நடந்து வருகிறது. கொரோனா வைரசை தடுக்க மக்கள் பயன்பாட்டுக்காக, உலகில் முதன்முறையாக ரஷ்யா தனது தடுப்பூசி விநியோகத்தை தொடங்கி உள்ளது. இதற்கு போட்டியாக, தான் கண்டுபிடித்துள்ள தடுப்பு மருந்து வரும் நவம்பர் மாதம் முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று சீனா அறிவித்துள்ளது.சீனாவின் நேஷனல் பார்மாசூட்டிகல் குரூப் (சைனோபார்ம்), அமெரிக்க பங்குச் சந்தையில் இடம் பெற்று இருக்கும் சைனோவாக் பயோடெக் எஸ்விஏ.ஓ ஆகியவை இணைந்து மூன்று தடுப்பு மருத்துகளை தயாரித்து வருகின்றன. இந்த மூன்று தடுப்பூசிகள், ஏற்கனவே ஜூலை மாதம் தொடங்கப்பட்ட அவசரகாலப் பயன்பாட்டுத் திட்டத்தின் கீழ் முதலில் அத்தியாவசியத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டன. நான்காவது தடுப்பு மருந்தை கேன்சைனோ பயாலஜிக்ஸ் என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த தடுப்பு மருந்துதான் கடந்த ஜூன் மாதம் ராணுவத்தினருக்கு செலுத்தப்பட்டது. இதுகுறித்து அந்த நாட்டின் தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மைய தலைவர் கைசென் வு, \'\'மருத்துவப் பரிசோதனைகளின் இறுதிக் கட்டத்தில் சீனாவில் நான்கு கொரோனா தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டுள்ளன. வரும் நவம்பர் அல்லது டிசம்பர் மாதங்களில் மனித பயன்பாட்டுக்கு வந்துவிடும்\'\' என்று தெரிவித்துள்ளார். இந்த தடுப்பு மருந்தை தானும் கடந்த ஏப்ரல் மாதம் செலுத்திக் கொண்டதாகவும், அதன்பின்னர் தனக்கு எந்த பக்க விளைவுகளும் ஏற்படவில்லை என்று கைசென் தெரிவித்துள்ளார்.எனினும் எந்த 4ல் எந்த தடுப்பு மருந்து என்பதை அவர் தெரிவிக்கவில்லை.  

மூலக்கதை