இப்போதைக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டிக்குங்க...2024ம் ஆண்டில் தான் தடுப்பூசி கிடைக்கும்; சீரம் நிறுவன தலைமை செயல் அதிகாரி தகவல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
இப்போதைக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டிக்குங்க...2024ம் ஆண்டில் தான் தடுப்பூசி கிடைக்கும்; சீரம் நிறுவன தலைமை செயல் அதிகாரி தகவல்

புதுடெல்லி: வருகிற 2024ம் ஆண்டில் தான் கொரோனா தடுப்பூசி கிடைக்கும் என்று, சீரம் நிறுவன தலைமை செயல் அதிகாரி அடால் பூனாவல்லா தெரிவித்தார். உலக நாடுகள் பலவும் கொரோனாவால் சிக்கித் தவித்து வருகின்றன.

தொற்று ஏற்பட்டு குணமாகி வீடு திரும்பும் நபர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்தாலும் தொற்று பரவல் நின்றபாடில்லை. பலி எண்ணிக்கை அச்சமூட்டும் வகையில் இருக்கின்றது.

கொரோனா தடுப்பூசி மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. பல தடுப்பூசிகள் இறுதிக் கட்டத்தை எட்டியதாக கூறப்பட்டாலும் நடைமுறைக்கு இன்னும் வரவில்லை.

இதற்கிடையில் அஸ்ட்ராஜெனிகா நிறுவனம் மேற்கொண்டுள்ள ஆக்ஸ்போர்டு தடுப்பூசி பரிசோதனையின் போது ஒருவருக்கு எதிர்பாராத உடல்நலக் குறைபாடு ஏற்பட்டதை அடுத்து அனைத்து செயல்பாடுகளும் திடீரென நிறுத்தப்பட்டன.

இந்த தடுப்பூசியை இந்தியாவில் பரிசோதித்து வரும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனத்திற்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியதைத் தொடர்ந்து பரிசோதனை உடனடியாக நிறுத்தப்பட்டது.

ஆனால், பிரிட்டனில் ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் பரிசோதனை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. அஸ்ட்ராஜெனிகா நிறுவனத்துடன் இந்தியாவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனம் முக்கிய ஒப்பந்தம் போட்டுள்ளது.

அதன்படி 68 நாடுகளுக்கு 3 டாலர் விலையில் தடுப்பூசியை தயாரித்து வழங்க முடிவு செய்துள்ளது. இதேபோல் நோவாக்ஸ் நிறுவனத்துடன் 92 நாடுகளுக்கு தடுப்பூசி தயாரித்து வழங்கவும் ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது.

இதுகுறித்து  சீரம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அடால் பூனாவல்லா கூறுகையில், ‘ரஷ்யாவின் ஸ்புட்னிக் - 5 தடுப்பூசியை தயாரித்த காமலேயே ஆராய்ச்சி நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

வரும் 2024ம் ஆண்டு வரை உலக மக்கள் அனைவருக்கும் தேவையான போதிய தடுப்பூசிகள் கிடைக்க வாய்ப்பில்லை.

தற்போதைய சூழலில் இன்னும் 5 ஆண்டுகள் வரை ஆகலாம்’ என்று கூறியுள்ளார். சீரம் நிறுவனத்தின் செயல் அதிகாரியின் கருத்து மக்கள் மத்தியில் சற்று பதற்றத்தைக் கூட்டியிருக்கிறது.

காரணம், அடுத்தாண்டு தொடக்கத்தில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்துவிடும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியும் கூட, நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது, தடுப்பூசி விரைவில் கிடைத்துவிடும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

ஆனால், இந்த சூழலில் அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்க இன்னும் பல ஆண்டுகள் என்றால் அதற்குள் பாதிப்பின் தீவிரம் எப்படியிருக்குமோ என்று அச்சப்பட வைக்கிறது. எனவே, ‘மக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் முயற்சியில் ஈடுபட்டுக் கொள்ள ேவண்டும்.

தடுப்பூசிக்காக நம்பிக்கை உடன் காத்திருப்பதை தவிர வேறு வழியில்லை’என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

.

மூலக்கதை