பிரசாரத்தில் அதிபர் டிரம்ப் பெருமிதம்: கொரோனா தடுப்பு பணிக்காக பிரதமர் மோடி பாராட்டினார்

தினகரன்  தினகரன்
பிரசாரத்தில் அதிபர் டிரம்ப் பெருமிதம்: கொரோனா தடுப்பு பணிக்காக பிரதமர் மோடி பாராட்டினார்

வாஷிங்டன்: ‘‘கொரோனா தடுப்பு பணிக்காக பிரதமர் மோடியே என்னை பாராட்டினார்’’ என அமெரிக்க அதிபர் டிரம்ப் பிரசாரத்தில் பெருமையாக  குறிப்பிட்டார். அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 3ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி அதிபர் டிரம்ப், வெஸ்ட் கோஸ்ட் பகுதியில் உள்ள  நெவேடாவில் தேர்தல் பிரசாரத்தில் கலந்துகொண்டார். அப்போது அவர் கூறியதாவது: அமெரிக்காவில் பன்றிக்காய்ச்சல் பரவியபோது துணை அதிபராக  இருந்தவர்தான் ஜோ பிடென். வைரஸைக் கட்டுப்படுத்தும் திறன் இல்லாமல் அமெரிக்கர்களின் உயிரைப் பறிக்கக் காரணமாக இருந்தவர். அவர்களது  ஆட்சிக்காலத்தில் பொருளாதார வளர்ச்சி மிகவும் பலவீனமானதாக மோசமடைந்திருந்தது. ஆனால், எனது நிர்வாகம் கொரோனாவை சிறப்பாகக்  கையாண்டு கட்டுப்படுத்தியிருக்கிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தப் பல்வேறு  ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை எனது நிர்வாகம் செய்துள்ளது. இந்தியா போன்ற  பெரிய  நாடுகளை விட அமெரிக்கா அதிகமான பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளது. இந்திய பிரதமர் மோடி கூட என்னை  தொலைபேசியில் அழைத்து,  கொரோனா தடுப்பு பணிகளுக்காக பாராட்டினார். நாட்டின் பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி, வேலை வாய்ப்பு, சீனாவுக்கு எதிரான உறுதியான  நடவடிக்கைகள் போன்ற பல தைரியமான முயற்சிகளை 4 ஆண்டுகளில் மேற்கொண்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.மோசமானவர் பிடென்எதிர்க்கட்சி வேட்பாளரான ஜோ பிடெனையும் அதிபர் டிரம்ப் கடுமையாக சாடினார். அவர் பேசுகையில், ‘‘அமெரிக்க தேர்தல் வரலாற்றில் இதுவரை  நிறுத்தப்பட்ட வேட்பாளர்களிலேயே மோசமானவர்  பிடென். அவர் வென்றால் இடதுசாரிகள் வசம் நாடு சிக்கிக் கொண்டுவிடும். அமெரிக்காவை சீனா  வசமும் ஒப்படைத்துவிடுவார். பிடென் வெல்வதும் சீனா வெல்வதும் ஒன்றுதான்’’ என்றார்.

மூலக்கதை