யுஎஸ் ஓபன் டென்னிஸ் டொமினிக் தீம் சாம்பியன்: பைனலில் ஸ்வெரவை வீழ்த்தினார்

தினகரன்  தினகரன்
யுஎஸ் ஓபன் டென்னிஸ் டொமினிக் தீம் சாம்பியன்: பைனலில் ஸ்வெரவை வீழ்த்தினார்

நியூயார்க்: யுஎஸ் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், ஆஸ்திரியா வீரர் டொமினிக் தீம் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார். இறுதிப்போட்டியில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரவுடன் (7வது ரேங்க், 23 வயது), டொமினிக் தீம் (3வது ரேங்க், 27 வயது) மோதினார். இருவரும் முதல் முறையாக கிராண்ட் ஸ்லாம் பட்டம் வெல்லும் முனைப்புடன் களமிறங்கினர். தொடக்கத்தில் அபாரமாக விளையாடிய ஸ்வெரவ் 6-2, 6-4 என முதல் 2 செட்களையும் கைப்பற்றி முன்னிலை பெற்றார். அவர் 3வது செட்டையும் எளிதாக வென்று கோப்பையை முத்தமிடுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.ஆனால், திடீரென வீறுகொண்டு எழுந்த தீம் தனது அதிரடி சர்வீஸ்கள் மூலம் ஸ்வெரவை திணறடித்தார். தொடர்ச்சியாக புள்ளிகளைக் குவித்த தீம் அடுத்த 2 செட்களையும் 6-4, 6-3 என கைப்பற்றி பதிலடி தந்தார். இதனால், சாம்பியன் யார் என்பதை முடிவு செய்யும் கடைசி மற்றும் 5வது செட்டில் அனல் பறந்தது. இருவரும் விடாப்பிடியாக புள்ளிகளைக் குவித்ததால் ஆட்டம் டை பிரேக்கர் வரை இழுபறியாக நீண்டது. ஸவ்ரெவ் செய்த தவறுகளை சாதகமாக்கி கொண்ட தீம் முடிவில்  7-6 (8-6) என்ற புள்ளி கணக்கில் கடைசி செட்டை வசப்படுத்தினார். மொத்தம் 4 மணி, ஒரு நிமிட நேரத்துக்கு நீடித்த இந்த பரபரப்பான பைனலில் டொமினிக் தீம் 2-6, 4-6, 6-4, 6-3, 7-6 (8-6) என்ற செட் கணக்கில் வென்று முதல் முறையாக யுஎஸ் ஓபன் கோப்பையை முத்தமிட்டார். கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வெல்லும் 2வது ஆஸ்திரிய வீரர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்துள்ளது. முன்னதாக ஆஸ்திரியாவின் தாமஸ் மஸ்டர் 1995 பிரெஞ்ச் ஓபனில் பட்டம் வென்றுள்ளார். முன்னணி வீரர்கள் நடால் (ஸ்பெயின்), பெடரர் (சுவிஸ்) ஆகியோர் இந்த போட்டியில் பங்கேற்கவில்லை. போட்டி விதியை மீறியதால், உலகின் முதல்நிலை வீரர் ஜோகோவிச் காலிறுதி போட்டிக்கு முன்பே தகுதிநீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 2018 பிரெஞ்ச் ஓபன் பைனலில் நடாலிடம் 3-0 என்ற கணக்கிலும், 2019 பிரெஞ்ச் ஓபன் பைனலில் மீண்டும் நடாலிடம் 3-1 என்ற கணக்கிலும், இந்த ஆண்டு ஆஸி. ஓபன் பைனலில் ஜோகோவிச்சிடம் 3-2 என்ற கணக்கிலும் தோற்றிருந்த தீம், தனது 4வது கிராண்ட் ஸ்லாம் பைனலில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளார்.  

மூலக்கதை