ஆஸி.யுடன் 2வது ஒருநாள் போட்டி பதிலடி தந்தது இங்கிலாந்து

தினகரன்  தினகரன்
ஆஸி.யுடன் 2வது ஒருநாள் போட்டி பதிலடி தந்தது இங்கிலாந்து

மான்செஸ்டர்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இங்கிலாந்து அணி 24 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்று பதிலடி கொடுத்தது. இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி  3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 19 ரன் வித்தியாசத்தில் வென்று 1-0 என முன்னிலை வகிக்க, 2வது போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது. டாஸ் வென்று பேட் செய்த இங்கிலாந்து, 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 231 ரன் குவித்தது. ஜேசன் ராய் 21, ஜோ ரூட் 39, கேப்டன் மோர்கன் 42, கிறிஸ் வோக்ஸ்ஸ் 26, டாம் கரண் 37, அடில் ரஷித் 35* ரன் எடுத்தனர். ஆஸி. பந்துவீச்சில் ஆடம் ஸம்பா 3, மிட்செல் ஸ்டார்க் 2, ஹேசல்வுட், கம்மின்ஸ், மிட்செல் மார்ஷ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். அடுத்து 232 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா, 48.4 ஓவரில் 207 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. கேப்டன் ஆரோன் பிஞ்ச் 73 ரன் (105 பந்து, 8 பவுண்டரி, 1 சிக்சர்), லாபுஷேன் 48, அலெக்ஸ் கேரி 36, கம்மின்ஸ் 11 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேறி ஏமாற்றமளித்தனர். இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் வோக்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர், சாம் கரண்தலா 3 விக்கெட், ரஷித் 1 விக்கெட் வீழ்த்தினர். ஆர்ச்சர் ஆட்ட நாயகனாக தேர்வு பெற்றார். இங்கிலாந்து 24ரன் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்தி பதிலடி கொடுத்தது. இரு அணிகளும் 1-1 என சமநிலை வகிக்க, 3வது மற்றும் கடைசி ஆட்டம் மான்செஸ்டரில் நாளை  நடக்கிறது.

மூலக்கதை