தோனி போல ‘பினிஷிங்’ * டேவிட் மில்லர் விருப்பம் | செப்டம்பர் 14, 2020

தினமலர்  தினமலர்
தோனி போல ‘பினிஷிங்’ * டேவிட் மில்லர் விருப்பம் | செப்டம்பர் 14, 2020

துபாய்: ‘‘தோனியைப் போல போட்டிகளில் கடைசிவரை களத்தில் இருந்து ‘பினிஷிங்’ செய்ய விரும்புகிறேன்,’’ என டேவிட் மில்லர் தெரிவித்தார்.

ஐக்கிய அரபு எமிரேட்சில் 13வது ஐ.பி.எல்., தொடர் செப். 19ல் துவங்குகிறது. எட்டு அணிகள் மோதும் இத்தொடரின் முதல் போட்டில் சென்னை–மும்பை அணிகள் மோதுகின்றன. ராஜஸ்தான் அணிக்காக இம்முறை களம் காணும் டேவிட் மில்லர் இதுகுறித்து கூறியது:

தோனியின் பேட்டிங்கை ரசித்து பார்ப்பேன். அவரது அமைதியான குணம் பிடிக்கும். அனைத்தையும் அவர் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதாக நீங்கள் நினைக்கலாம். இப்படித்தான் அவரை வெளிப்படுத்திக் கொள்கிறார். உண்மையில் தோனி நல்லவர். அவரைப் போல துடிப்பாக விளையாட முயற்சிப்பேன்.

எதிரணி பேட்ஸ்மேன்களின் பலம், பலவீனம் குறித்து தோனிக்கு நன்கு தெரியும். நானும் இதைப் போலத் தான். ‘சேஸ்’ செய்யும் போது இவரது பேட்டிங்கை பார்த்து வியந்துள்ளேன். உலகின் சிறந்த ‘பினிஷர்களில்’ தோனியும் ஒருவர். இதைப் பலமுறை அவர் நிரூபித்தார். 

வரும் தொடரில் இவரைப் போன்று பேட்டிங் செய்ய வேண்டும், அவர் செய்வது போல, போட்டியின் கடைசி வரை களத்தில் இருந்து சிறப்பான முறையில் ‘பினிஷிங்’ செய்து தர விரும்புகிறேன். 

எப்போதும் இல்லாத வகையில் இம்முறை சிறந்த ‘பார்மில்’ உள்ளேன். கூடுதல் அனுபவமும் உள்ளது. வரும் தொடரில் அணியின் வெற்றிக்கு என்ன வேண்டும் என்பதையும் உணர்ந்துள்ளேன். 

இவ்வாறு அவர் கூறினார்.


கங்குலி ஆய்வு

இந்திய கிரிக்கெட் போர்டு தலைவர் கங்குலி. 13வது ஐ.பி.எல்., தொடரின் முன்னேற்பாடுகளை கவனிக்க ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்றுள்ளார். நேற்று சார்ஜா உள்ளிட்ட மைதானங்களில் ஆய்வு நடத்தினார்.

 

பார்த்தாலே போதும்

பெங்களூரு சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜாம்பா கூறுகையில்,‘‘கோஹ்லி பயிற்சி செய்வது, பேட்டிங் செய்யும் அழகை பார்த்துக் கொண்டே இருக்கலாம் என்பதால், வரும் தொடர் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது,’’ என்றார்.

 

மாற்றக் கூடாது

முன்னாள் வீரர் காம்பிர் கூறுகையில்,‘‘தோனி தொடர்ந்து 6 அல்லது 7 போட்டிக்கு அணியை மாற்றவே மாட்டார். கோஹ்லி அப்படியல்ல, ஒரு போட்டியில் தோற்றாலும் அடுத்த போட்டிக்கு அணியை மாற்றி விடுவார். சரியான அணியை தேர்வு செய்யவில்லை போல என்ற சந்தேகம் அவருக்கு வந்து விடும். இது தான் இருவருக்கும் உள்ள மிகப்பெரிய வித்தியாசம். துவக்கத்தில் ஒரு சில போட்டிகளில் சொதப்பினாலும், களமிறங்கும் லெவன் அணியை கோஹ்லி மாற்றக் கூடாது,’’ என்றார்.

 

‘பெஸ்ட்’ கேப்டன்

சென்னை அணியின் பியுஸ் சாவ்லா கூறுகையில்,‘‘பொதுவாக எந்த சுழற்பந்து வீச்சாளராக இருந்தாலும் சிறந்த கேப்டன் வேண்டும் என விரும்புவார். எனக்கு தோனி கிடைத்துள்ளார். உலகின் ‘பெஸ்ட்’ கேப்டன். இதைவிட வேறென்ன வேண்டும்,’’ என்றார்.

 

120 நாடுகளில்...

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையில் 13வது சீசன் ஐ.பி.எல்., தொடர் செப். 19ல் ஐக்கிய அரபு எமிரேட்சில் துவங்க உள்ளது. இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உட்பட 120 நாடுகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. 

இந்தியாவில் 9 மொழிகளில் வர்ணனை செய்யப்படும். பாகிஸ்தானில் ஒளிபரப்பு செய்யப்படவில்லை. 

 

பன்டுக்கு ‘பாட்டு’

டில்லி அணிக்காக விளையாடுகிறார் ரிஷாப் பன்ட். இவருக்காக டில்லி அணி நிர்வாகம் ‘ஸ்பெஷல்’ பாட்டு வெளியிட்டது. அதில்,‘நாங்கள் பன்ட்டை பெற்றுள்ளோம், ரிஷாப் பன்ட், உங்களுக்கு புரியவில்லையா, உங்களுக்காக சிக்சர் அடிப்பார், உங்கள் குழந்தைகளை பார்த்துக் கொள்வார், நாங்கள் பன்ட்டை பெற்றுள்ளோம்,’ என செல்கிறது அந்தப் பாடல்.

 

அஷ்வின் நடனம்

டில்லி வீரர்கள் அஷ்வின், ரகானேவுக்கு பஞ்சாப்பின் பிரபலமான ‘பாங்க்ரா’ நடனம் கற்றுக் கொடுத்தார் ஷிகர் தவான். அவர் கூறுகையில்,‘‘எங்கள் அணியின் அஷ்வின், ரகானேவுக்கு பஞ்சாப் நடனம் கற்றுக் கொடுத்தேன். இதில் கற்றுத் தேற, இன்னும் சில நாட்கள் தேவைப்படும்,’’ என்றார். 

மூலக்கதை