யுஎஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ்; ஆஸ்திரியாவின் டொமினிக் தீம் சாம்பியன்: ஜெர்மன் வீரரை போராடி வீழ்த்தினார்

தினகரன்  தினகரன்
யுஎஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ்; ஆஸ்திரியாவின் டொமினிக் தீம் சாம்பியன்: ஜெர்மன் வீரரை போராடி வீழ்த்தினார்

நியூயார்க்: யுஎஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம் ஆடவர் ஒற்றையர் பைனலில் ஜெர்மன் வீரர் அலெக்சாண்டர் ஸ்ெவரெவை வீழ்த்தி, ஆஸ்திரியாவின் டொமினிக் தீம் சாம்பியன் பட்டம் வென்றார். இது அவரது முதலாவது கிராண்ட்ஸ்லாம் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. யுஎஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம் ஆடவர் ஒற்றையர் பைனல் இந்திய நேரப்படி இன்று அதிகாலை 1.30 மணிக்கு துவங்கியது. இதில் ஏடிபி தரவரிசையில் 2ம் இடத்தில் உள்ள ஆஸ்திரியாவின் டொமினிக் தீமும் (27), 5ம் இடத்தில் உள்ள ஜெர்மன் வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவும் (23) மோதினார். விறுவிறுப்புடன் நடந்த இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 6-2 என ஸ்வெரேவ் எளிதாக கைப்பற்றினார். தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய அவர், 2வது செட்டையும் 6-4 என வசப்படுத்தினார். இதன் பின்னர் டொமினிக் தீமின் கை ஓங்கியது. முதல் 2 செட்டை இழந்த நிலையில் ஆக்ரோஷமாக ஆடிய அவர், 6-4 என 3வது செட்டை கைப்பற்றினார். 4வது செட்டிலும் ஆக்ரோஷ ஆட்டத்தை தொடர்ந்த டொமினிக் தீம், அந்த செட்டை 6-3 என தனதாக்கினார். இதையடுத்து வெற்றி யாருக்கு என்பதை தீர்மானிக்கும் 5வது செட்டில் கடும் போட்டி நிலவியது. இருவரும் மாறி மாறி புள்ளிகளை சேர்த்தனர். டை பிரேக்கர் வரை சென்ற இந்த செட்டை 7(8)-6(5) என டொமினிக் தீம் கைப்பற்றினார். முடிவில் 2-6, 4-6, 6-4, 6-3, 7-6 என 5 செட்டிகளில் போராடி வென்று, டொமினிக் தீம் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இருவருக்கும் இடையேயான இப்போட்டி 4 மணி நேரம் வரை நீடித்தது. முதல் 2 செட்டை இழந்த பின்னரும், தளராமல் நின்று கோப்பையை கைப்பற்றிய டொமினிக் தீமின் ஆட்டம் பிரமிக்கும் வகையில் இருந்தது. இது அவரது முதல் கிராண்ட்ஸ்லாம் கோப்பை என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு 22 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. ரன்னரான அலெக்சாண்டர் ஸ்வெரேவ் ரூ.11 கோடி பெற்றார்.

மூலக்கதை