மும்பையில் இருந்து அமெரிக்கா, கனடா நாடுகளுக்கு ‘கால்சென்டர்’ மூலம் போதை மருந்து, செக்ஸ் ‘பூஸ்டர்’ சப்ளை; 26 பெண்கள் உட்பட 100 பேரை பிடித்து போலீஸ் விசாரணை

தமிழ் முரசு  தமிழ் முரசு
மும்பையில் இருந்து அமெரிக்கா, கனடா நாடுகளுக்கு ‘கால்சென்டர்’ மூலம் போதை மருந்து, செக்ஸ் ‘பூஸ்டர்’ சப்ளை; 26 பெண்கள் உட்பட 100 பேரை பிடித்து போலீஸ் விசாரணை

மும்பை: மும்பையில் செயல்படும் கால்சென்டர் மூலம் போதை மருந்து, செக்ஸ் ‘பூஸ்டர்’ போன்றவற்றை அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு சப்ளை செய்த விவகாரத்தில் 26 பெண்கள் உட்பட 100 பேரை பிடித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் புறநகரான மலாட் நகரில் உள்ள மார்வேயில் செயல்படும் போலி கால்சென்டர் நடத்தும் ஆசாமிகள் சிலர், வெளிநாட்டவர்களிடம் பணம் பறித்து வருவதாக மும்பை குற்றப்பிரிவு போலீசாருக்கு புகார் வந்தது.

அதையடுத்து ஆக. 29ம் தேதி மலாட் ஜும்மா மார்க்கெட் பகுதியில் உள்ள கட்டிடம் மற்றும் மார்வே ரோட்டில் உள்ள செஜ் பிளாசா ஆகிய இடங்களில் ேபாலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

அதில் 5 போலி கால்சென்டர்கள் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலி கால் சென்டர்களை நடத்திய ஜிஷான் அன்சாரி (21), பைசன் பாலிம் (23), ஷாபாஸ் இக்பால் கரிபோடி (37), நிதின் ரானே (42), முகமது சயீத் (29), கணேஷ் ராஜ்புத் (27) ஆகிய 6 பேரை கைது செய்தனர்.இவர்கள் அமெரிக்கா மற்றும் கனடா மக்களிடம் தங்களை அந்நாட்டு வருவாய் அதிகாரிகள் என்றும், குடியுரிமை அதிகாரிகள் என கூறியும் வரி செலுத்தாமல் இருப்பதாக மிரட்டி அவர்களிடம் பணம் பறித்துள்ளனர். மேலும் இவர்கள், கால்சென்டர் பணியில் 81 ஆண்கள் மற்றும் 26 பெண்களை வேலைக்கு அமர்த்தி பணப்பறிப்பு வேலைகளில் ஈடுபடுத்தி வந்ததும் தெரியவந்தது.

இதைத்தவிர அவர்கள் வலி நிவாரண மாத்திரைகள், செக்ஸ் பூஸ்டர் (ஊக்குவிப்பு) மருந்துகள் போன்றவற்றை வெளிநாட்டில் இருந்து பெற்று மும்பையில் சட்டவிரோதமாக விற்று பணம் சம்பாதித்து வந்ததும் தெரியவந்தது. இவர்களிடம் வேலை பார்த்து வந்த 26 பெண்கள் உட்பட 100 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கைதான 6 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீஸ் காவலில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து  துணை போலீஸ் கமிஷனர் (குற்றம்) நந்த்குமார் தாக்கூர் கூறுகையில், ‘மும்பை காவல்துறையின் குற்ற புலனாய்வு பிரிவு (சிஐயு) அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ஐந்து கால் சென்டர்களில் வெளிநாட்டினரிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளனர்.ஆன்லைனில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களை விற்பனை செய்தல், செக்ஸ் மாத்திரைகள், வயக்ராவுக்கு மாற்றாக இருக்கும் பிற மருந்துகள் வெளிநாடுகளுக்கு சப்ளை செய்துள்ளனர். இவர்கள் வெளிநாட்டினரை அணுகி, நிலுவையில் உள்ள அபராதங்களை செலுத்தச் சொல்வார்கள்.

எடுத்துக்காட்டாக, செலுத்த வேண்டிய அபராதம் 2,000 அமெரிக்க டாலர்கள் என்றால், கால் சென்டர் ஊழியர் அதை பாதி தொகையை செலுத்தினால் அபராதம் விலக்கிக் கொள்ளப்படும் என்று கூறுவார். பின்னர் அவர்கள் வால்மார்ட் அல்லது ஏதேனும் ஒரு நிறுவனத்தின் பரிசு கூப்பன்களை வாங்கி அவர்களின் பாஸ்வேர்டை கேட்பார்கள்.

அவர்கள் பாஸ்வேர்டை சொன்னதும், அதிலிருந்து பல லட்சம் ரூபாயை எடுத்துக் கொள்வர்.

சட்டவிரோதமாக கூரியர் மூலம் அமெரிக்காவிற்கு பாலியல் தூண்டுதல்கள் மற்றும் பிற தடைசெய்யப்பட்ட மருந்துகளை விற்பனை செய்துள்ளனர்’ என்றார்.

.

மூலக்கதை