கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளுக்கு மத்தியில் 8 மாதங்களுக்கு பின் நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது; விரைவில் தடுப்பூசி கிடைக்கும்: பிரதமர் மோடி உறுதி

தமிழ் முரசு  தமிழ் முரசு
கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளுக்கு மத்தியில் 8 மாதங்களுக்கு பின் நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது; விரைவில் தடுப்பூசி கிடைக்கும்: பிரதமர் மோடி உறுதி

புதுடெல்லி: கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று காலை  8 மாதங்களுக்கு பின் தொடங்கியது. முன்னதாக பேசிய பிரதமர் மோடி, மக்களுக்கு விரைவில் தடுப்பூசி கிடைக்கும் என்றார்.

அதேநேரம், நீட் தேர்வுக்கு எதிராக திமுக எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வழக்கமாக ஜூன், ஜூலை மாதங்களில் தொடங்கும்.

இக்கூட்டத் தொடர் இன்று தொடங்கி வரும் அக். 1ம் தேதி வரை நடைபெறுகிறது.

மத்திய சுகாதாரத் துறையின் வழிகாட்டுதல்படி முகக்கவசம், சமூக இடைவெளி ஆகிய கட்டுப்பாடுகள் கூட்டத் தொடர் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டதால், நாடாளுமன்ற எம்பிக்களின் வருகை தேசிய தகவல் மையம் (என்ஐசி) உருவாக்கியுள்ள செல்போன் செயலி மூலம் பதிவு செய்யப்படுகிறது. தொற்று அச்சுறுத்தல் காரணமாக கூட்டத் தொடருக்கு முன்பாக நடைபெறும் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தவில்லை.

அதேநேரத்தில் மாநிலங்களவையின் அலுவல் ஆலோசனைக் குழுக் கூட்டம் இன்று திட்டமிட்டபடி நடைபெறுகிறது. இரு அவைகளின் கூட்டம் ஒரே நேரத்தில் நடைபெறாது என்பதால், மக்களவைத் கூட்டம் இன்று காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடந்தது.



மாநிலங்களவை கூட்டம் பிற்பகல் 3 மணி முதல் இரவு 7 மணி வரை நடக்கிறது. நாளை (செப்.

15) மாநிலங்களவை காலை அமர்விலும், மக்களவை மாலையிலும் தலா நான்கு மணி நேரம் நடக்கும். அனைத்து நாடாளுன்ற உறுப்பினர்களும் கொரோனா பரிசோதனை செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதால், பரிசோதனை அறிக்கை அடிப்படையில் தொற்று இல்லாத எம்பிக்கள் மட்டுமே அவைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

எம்பிக்கள், அதிகாரிகள், பத்திரிகையாளர்கள், அவை பணியாளர்கள் என, 4,000க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில், நீட் தேர்வு அச்சத்தால், தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.

இதற்கு, அரசியல் தலைவர்கள் மாணவர்களின் குடும்பத்துக்கு இரங்கலையும், மத்திய, மாநில அரசுக்குக் கண்டனத்தையும் தெரிவித்து வருகின்றனர். மேலும், தமிழகம் முழுவதும் மாணவர்கள், அரசியல் கட்சியினர் என பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையடுத்து நீட் தேர்வு பிரச்னை தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் திமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என மக்களவை உறுப்பினரும், திமுக பொருளாளருமான டி. ஆர். பாலு அறிவித்திருந்தார்.

அதன்படி, நீட் தேர்வு விவகாரத்தை விவாதிக்கக்கோரி திமுக சார்பில் ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ் வழங்கியது.

தொடர்ந்து நீட் தேர்வுக்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு திமுக எம்பிக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நீட் தேர்வுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியும், கையில் பதாகைகள் ஏந்தியும் அவர்கள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

இதில், கூட்டணிக் கட்சி எம்பிகளும் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி. ஆர். பாலு, கனிமொழி, திருச்சி சிவா உள்ளிட்டோர் ‘நீட்’டுக்கு எதிரான வாசகத்துடன் கூடிய மாஸ்க்கை அணிந்திருந்தனர்.

தொடர்ந்து நாடாளுமன்ற கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக காலை 8. 55 மணியளவில் பிரதமர் மோடி நாடாளுமன்ற வளாத்தில் நிருபர்களிடம் பேசுகையில், ‘ராணுவ வீரர்கள் துணிச்சலான வீரம், தைரியம், ஆர்வம் மற்றும் உயர்ந்த உற்சாகத்துடன் எல்லையில் நிற்கிறார்கள். இன்னும் சிறிது நேரம் கழித்து அங்கு பனிப்பொழிவு தொடங்கும்.



எல்லையில் நின்று தாய்நாட்டைப் பாதுகாக்கும் படையினருடன் நமது முழு நாடும் நிற்கிறது என்ற செய்தியை அனைத்து உறுப்பினர்களும் தருவார்கள் என்று நம்புகிறேன். கடினமான ஒரு பிரச்னையில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குகிறது.

ஒருபுறம் கொரோனாவும், மறுபுறம் கடமையும் உள்ளது. எம்பிக்கள் கடமைக்கான பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.

நான் அவர்களுக்கு நன்றி கூறுகிறேன். இந்த முறை மக்களவை மற்றும் மாநிலங்களவை வெவ்வேறு நேரங்களில் இயங்கும்.

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் இயங்கும். அனைத்து உறுப்பினர்களும் இதை ஏற்றுக்கொண்டுள்ளனர்.

உலகின் எந்த மூலையில் இருந்தாவது தடுப்பூசி சீக்கிரம் தயாரிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறோம். நமது விஞ்ஞானிகளும் வெற்றியை நோக்கி நகர்கின்றனர்.

ஒரு தடுப்பூசி உருவாக்கப்படும் வரை மத்திய அரசு ஓய்வெடுக்காது. இந்த சிக்கலில் இருந்து அனைவரையும் வெளியே கொண்டு வருவதில் நாம் வெற்றி பெறுவோம்’ என்றார்.



தொடர்ந்து நாடாளுமன்ற மக்களவை கூட்டம் மக்களவை தலைவர் ஓம் பிர்லா தலைமையில் முறைப்படி தொடங்கியது. அப்போது, முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மறைவு குறித்து மக்களவையில் அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

அப்போது ஓம் பிர்லா பேசுகையில், ‘பிரணாப் முகர்ஜி ஒரு வெற்றிகரமான பேச்சாளர் மற்றும் நிர்வாகி. அவரது அறிவும் அனுபவமும் ஈடு இணையற்றது’ என்றார்.

அதேபோல், கன்னியாகுமரி எம்பி வசந்தகுமார் மறைவுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மேலும், மறைந்த புகழ்பெற்ற இந்திய பாரம்பரிய பாடகர் பண்டிட் ஜஸ்ராஜ், முன்னாள் சட்டீஸ்கர் முதல்வர் அஜித் ஜோகி, மத்திய பிரதேச ஆளுநர் லால்ஜி டாண்டன், உ. பி.

அமைச்சர்கள் கமல் ராணி மற்றும் சேதன் சவுகான் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ராகுவன்ஷ் பிரசாத் சிங் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

அவையில் துக்கம் அனுசரித்ததால் மக்களவை ஒரு மணி நேரம் ஒத்திவைக்கப்பட்டு, பின்னர் அவை நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கியது.

.

மூலக்கதை