மிகப்பெரிய தரவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சீனாவின் வேவு வலையில் ஜனாதிபதி உட்பட 10,000 பேர்; நாடாளுமன்ற கூட்டத்தில் எதிர்கட்சிகள் கோஷம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
மிகப்பெரிய தரவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சீனாவின் வேவு வலையில் ஜனாதிபதி உட்பட 10,000 பேர்; நாடாளுமன்ற கூட்டத்தில் எதிர்கட்சிகள் கோஷம்

புதுடெல்லி: மிகப்பெரிய தரவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்திய ஜனாதிபதி முதல் உள்ளூர் நடிகர்கள் வரை வேவு பார்க்கும் வேலையில் சீனா இறங்கியுள்ளது. இந்தியாவில் 10,000 பேரின் பட்டியலை சீன நிறுவனம் வேவு பார்த்து வைத்துள்ளதாக தகவல்கள் ெவளியாகி உள்ளது.

சீனாவின் ஷென்சென் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஜென்ஹுவா டேட்டா இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி கோ லிமிடெட் நிறுவனம் இந்தியாவில் இருக்கும் இலக்குகளை அடையாளம் கண்டு கண்காணித்து வருகிறது.   இந்நிறுவனம் சீன கம்யூனிச கட்சிக்கும், சீன அரசுக்கும் அதிக அளவில் தொடர்பில்  இருக்கும் தொழில்நுட்ப நிறுவனமாக உள்ளது. இந்தியாவில் இருக்கும் மிக  முக்கியமான 10 ஆயிரம் நபர்களை வேவு பார்த்து வருகின்றது.

உலகளாவிய  தரவுகளில் இருக்கும் வெளிநாட்டு இலக்குகளில் இந்திய நிறுவனங்கள் மற்றும்  தனிநபர்கள் அதிகளவில் இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அந்த பட்டியலில், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள்.

முதல்வர்களில் மம்தா பானர்ஜி, அஷோக் கெலாத், மற்றும் அம்ரிந்தர் சிங், உத்தவ் தாக்கரே, நவீன் பட்நாயக், சிவராஜ் சிங் சவுஹான் ஆகியோரும், மத்திய அமைச்சர்களில் ராஜ்நாத் சிங், ரவிசங்கர் பிரசாத், நிர்மலா சீதாராமன், ஸ்மிருதி இரானி மற்றும் பியூஷ் கோயல் ஆகியோரும் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். முப்படை தளபதி பிபின் ராவத், முன்னாள் ராணுவ, விமானப்படை, கப்பற்படை தளபதிகள் 15 பேர்; உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி போப்டே, நீதிபதி ஏம். எம். கான்வில்கர், லோக்பால் நீதிபதி பி. சி. கோஷ், மத்திய கணக்கு தணிக்கையாளர் ஜி. சி.

முர்மு; தொழிலதிபர்களில் அஜய் டெஹ்ரான், ரத்தன் டாட்டா மற்றும் கவுதம் அதானி ஆகியோரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.

அரசியல் பிரபலங்கள் மற்றுமின்றி முக்கிய பொறுப்புகளில் இருக்கும் அரசு அதிகாரிகள், நீதிபதிகள், ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள், பத்திரிகையாளர்கள், நடிகர்கள், விளையாட்டு வீரர்கள், மதத்தலைவர்கள், செயற்பாட்டாளர்கள், உள்ளூர் மேயர்கள் என பலரின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன.

மேலும், நிதி மோசடி, ஊழல், தீவிரவாதம், போதைப்பொருள் கடத்துபவர்கள், தங்கம் மற்றும் ஆயுதங்களை கடத்திய குற்றவாளிகளின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன. இந்திய - சீன எல்லையில் சீனா தொடர்ந்து லடாக் மற்றும் அண்டை நாடுகளில் மேலும் முன்னேறி செல்லும் இந்த நேரத்தில் இந்த தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் ஷென்ஹூவா நிறுவனம் சீனாவின் உளவுத்துறை, ராணுவம் மற்றும் பாதுகாப்பு துறையுடன் பணியாற்றி வருகிறது என்று கூறியது குறிப்பிடத்தக்கது. கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக, இந்தியாவில் உள்ள பிரபல செய்தி நிறுவனம் ஒன்று மிகப்பெரிய தரவுக் கருவிகளைப் பயன்படுத்தி, ஷென்ஹுவாவின் நடவடிக்கைகளில் இருந்து ரகசிய மொழியில் எழுதப்பட்ட தரவை ஆராய்ந்து எடுத்துள்ளது.வெளிப்படையான குறிப்புகள் ஏதும் இல்லாமல் நூற்றுக்கணக்கான உள்ளீடுகளை உள்ளடக்கியதாக இந்த தரவுகள் உள்ளன. அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், ஆஸ்திரேலியா, கனடா, ஜெர்மனி, மற்றும் அமீரகம் நாடுகளின் உள்ளீடுகளும் அதில் உள்ளன.

இந்த தரவுகள் அனைத்தும் ஷென்ெசன் நிறுவனத்துடன் தொடர்பில் இருக்கும் ஆராய்ச்சியாளர்கள் மூலம் பெறப்பட்டது. ஆபத்து மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக, தகவல்கள் அளித்தவரின் பெயர் மேற்கோள்காட்டப்படவில்லை என்று அந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த தரவுகளை ஷென்செனில் பணியாற்றி, தற்போது வியட்நாமில் இருக்கும் பேராசிரியர் கிறிஸ்டோஃபர் பல்டிங் என்பவர், இந்தியா, ஆஸ்திரேலியா, இத்தாலி, லண்டன் நகரில் உள்ள ஊடகங்களுடன் தரவுகளை பகிர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து ஷென்செனில் செயல்படும் நிறுவனம் கூறுகையில், ‘யுத்தம் மற்றும் சீன தேசத்தின் பெரும் புத்துணர்ச்சி திட்டங்களுக்காக பிற நாடுகளின் மிகப்பெரிய தரவுகளை பயன்படுத்துகின்றோம்’ என்று தெரிவித்துள்ளது.

மேற்கண்ட செய்தி இன்று இந்திய ஆங்கில ஊடகங்களில் வெளியானதால், இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் எதிரொலித்தது.


.

மூலக்கதை