தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்கியது; 23 முன்னாள் எம்எல்ஏக்களுக்கு இரங்கல்: பிரணாப் முகர்ஜி, ஜெ.அன்பழகன், வசந்தகுமாருக்கும் அஞ்சலி

தமிழ் முரசு  தமிழ் முரசு
தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்கியது; 23 முன்னாள் எம்எல்ஏக்களுக்கு இரங்கல்: பிரணாப் முகர்ஜி, ஜெ.அன்பழகன், வசந்தகுமாருக்கும் அஞ்சலி

சென்னை: கொரோனா வேகம், ஊழல் போன்ற குற்றச்சாட்டுக்கு மத்தியில், தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்கியது. 23 முன்னாள் எம்எல்ஏக்கள், பிரணாப் முகர்ஜி, ஜெ. அன்பழகன், வசந்தகுமாருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் பங்கேற்க வந்த திமுக எம். எல். ஏக்கள் நீட் தேர்வுக்கு எதிரான முகக்கவசம் அணிந்து வந்தனர். தமிழக சட்டப்பேரவை கூட்டம் கடந்த மார்ச் மாதம் மானியகோரிக்கை விவாதத்துடன் முடிவடைந்தது.

ஆண்டின் 2வது கூட்டத்தொடரை கூட்டுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவந்தது. கொரோனா தாக்கம் காரணமாக சமூக இடைவெளி முக்கியமானது.

இதனால், தலைமை செயலக சட்டசபை கூட்ட அரங்கிற்கு பதிலாக மாற்று இடத்தில் சட்டமன்ற கூட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டது. எனவே, கலைவாணர் அரங்கத்தில் சட்டசபை கூட்டம் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

இதையடுத்து, கலைவாணர் அரங்கில் இன்று முதல் 3 நாட்கள் சட்டசபை கூட்டம் நடைபெற உள்ளது. முன்னதாக சட்டசபை கூட்டத்தில் பங்கேற்கும் அமைச்சர்கள், எம். எல். ஏக்கள், அதிகாரிகள் உள்ளிட்ட அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில், 3 அதிமுக எம். எல். ஏக்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுடன் சேர்த்து மொத்தம் 43 பேர் இதுவரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தசூழலில் இன்று காலை அறிவிக்கப்பட்டபடி கலைவாணர் அரங்கத்தில் உள்ள 3வது தளத்தில் சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது.

காலை 10 மணி அளவில் சபாநாயகர் தனபால் தலைமையில் கூட்டம் தொடங்கியது.

பங்கேற்க வந்த அனைவரும்  முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் அமரவைக்கப்பட்டனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வரும் எம். எல். ஏக்கள் தவிர மற்ற அனைவரும் இன்றைய கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

இதைத்தொடர்ந்து, கூட்டத்தில் கலந்துகொள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் 9. 40 மணி அளவில் வந்தனர். இதைத்தொடர்ந்து 9. 45 மணிக்கு திமுக தலைவரும், எதிர்கட்சி தலைவருமான மு. க. ஸ்டாலினுடன் திமுக எம். எல். ஏக்கள் வந்தனர்.

இதையடுத்து, மறைந்த முன்னாள் எம். எல். ஏக்கள் ஆர். டி. கோபாலன், கு. லாரன்ஸ், ஜெமினி கே. ராமச்சந்திரன், கே. என். லட்சுமணன், மு. ஜான் வின்செண்ட், ஜி. காளன், எஸ். ஆர். சுப்பிரமணிய ஆதித்தன், பூ. கிருஷ்ணன், ஆர். சுந்தர்ராஜன், குழந்தை தமிழரசன், மு. அம்பிகாபதி, எஸ். ராஜம்மாள், அ. அஸ்லாம் பாஷா, பே. மாரி அய்யா, வ. பாலகிருஷ்ணன், ஓ. எஸ். வேலுச்சாமி, அ. ரகுமான்கான், வ. சுப்பையா, நயினாமுகம்மது, சீனிவாசன், அய்யாச்சாமி, சண்முகம், தங்கவேல் ஆகிய 23 பேருக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 2 நிமிடம் அனைவரும் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர்.

பின்னர், மறைந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி எம். எல். ஏ ஜெ. அன்பழகன், முன்னாள் எம். எல். ஏவும் மறைந்த நாடாளுமன்ற உறுப்பினருமான எச். வசந்தகுமார் மற்றும் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் ஆகியோருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


கூட்டத்தில் சபாநாயகர் உட்பட அனைவரும் மாஸ்க், கையுறை அணிந்தே பங்கேற்றனர்.

இரங்கல் தீர்மானம் நிறைவேற்றபட்ட பின்னர், திமுக தலைவரும், எதிர்கட்சி தலைவருமான மு. க. ஸ்டாலின் நீட் தேர்வினால் இறந்த மாணவர்களுக்கும் இரங்கல் தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்தார். இதுகுறித்து பரிசீலனை செய்யப்படும் என சபாநாயகர் தெரிவித்தார்.   பின்னர், கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

16 நிமிடத்தில் முதல் நாள் கூட்டம் முடிந்தது. நாளை நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் துணை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வார்.

பின்னர், நாளை மறுநாள் (16ம் தேதி) கேள்வி நேரம் உள்ளது. இந்த கூட்டத்தில், திமுக சார்பில் நீட், கொரோனா, பிரதமர் கிஷான் திட்ட முறைகேடு உள்ளிட்ட  பல்வேறு பிரச்னைகள் குறித்து பேச உள்ளனர்.

இதேபோல், தமிழகத்தில் நிலவும் பல்வேறு பிரச்னைகள் குறித்து எதிர்கட்சியினர் கேள்வி எழுப்ப திட்டமிட்டுள்ளனர். இதனால், சட்டசபையில் காரசார விவாதத்திற்கு பஞ்சம் இருக்காது.

கொரோனா பாதிப்புக்கு இடையே கலைவாணர் அரங்கில் கூட்டம் நடைபெறுவதால் அரங்கத்தை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சுமார் 1,500 போலீசார் இன்று பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

அரங்கத்தின் முன்பாக துப்பாக்கி ஏந்திய போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். தலைமை செயலக சட்டப்பேரவை கூட்ட அரங்கு போன்ற அமைப்பு: தலைமை செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை கூட்ட அரங்கு போலவே காந்தி, பெரியார், திருவள்ளுவர், அண்ணா, எம். ஜி. ஆர்.

ஜெயலலிதா உட்பட 12 போட்டோக்கள் புதியதாக செய்யப்பட்டு கலைவாணர் அரங்க சட்டசபையில் வைக்கப்பட்டது.

ஒவ்வொரு தலைவரின் புகைப்படத்திற்கு கீழே வாசகங்களும் எழுதப்பட்டிருந்தது.

சபாநாயகர் இருக்கை மட்டும் தலைமை செயலகத்தில் இருந்த இருக்கையை கொண்டுவந்து வைத்திருந்தனர். மற்றவர்களுக்கு தனித்தனி இருக்கை அமைக்கப்பட்டிருந்தது.

ஒவ்வொரு இருக்கைக்கும் இடையே 1 மீட்டருக்கும் அதிகமாக இடைவெளி இருந்தது. இதனால், எம். எல். ஏக்கள் எளிதாக வந்துசெல்ல வசதியாக அமைந்திருந்தது.

எம். எல். ஏக்கள் அனைவருக்கும் மைக் வைத்திருந்தனர். பழைய தலைமை செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை கூட்ட அரங்கு வரிசை அடிப்படையிலேயே எம். எல். ஏக்களுக்கு இருக்கை வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பழைய சட்டசபையை விட இது நன்றாக உள்ளது என்றும், இடவசதியாக உள்ளதால் இனிமேல் இங்கேயே கூட்டத்தை நடத்தினால் நன்றாக இருக்கும் என எம். எல். ஏக்கள் கருத்து தெரிவித்தனர்.   திமுக எம். எல். ஏக்களுக்கு முதல் தளத்தில் ஓய்வறை கொடுக்கப்பட்டுள்ளது.

2வது தளத்தில் சபாநாயகர் மற்றும் துணை முதல்வருக்கும், மூன்றாவது தளத்தில் முதல்வர், செயலாளர், அதிமுக எம். எல். ஏக்களுக்கும் ஓய்வு அறை ஒதுக்கப்பட்டுள்ளது.

.

மூலக்கதை