நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்: தலைமை நீதிபதிக்கு கடிதம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்: தலைமை நீதிபதிக்கு கடிதம்

சென்னை: உயிருக்குப் பயந்து வீடியோ கான்பிரன்ஸ்  மூலம்  நீதி வழங்கும் நீதிபதிகள் என்று கருத்து தெரிவித்த சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு நீதிபதி கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் நீட் தேர்வுக்கு பயந்து மாணவர்களின் தற்கொலை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்தே வருகின்றது.

மேலும், தமிழகத்தில் நீட் தேர்வுக்கு பெற்றோர்கள், அரசியல் கட்சியினர் என பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் தமிழகத்தில் ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.

இந்தநிலையில் நடிகர் சூர்யா நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், நீட் தேர்வு பயத்தில் ஒரே நாளில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது மனசாட்சியை உலுக்குகிறது.தேர்வெழுத  போகும் மாணவர்களுக்கு வாழ்த்து சொல்வதற்குப் பதிலாக ஆறுதல் சொல்வதைப் போல அவலம் எதுவுமில்லை. கொரோனா தொற்று போன்ற உயிர் அச்சம் மிகுந்த பேரிடர் காலத்தில்கூட மாணவர்கள் தேர்வெழுதி தங்கள் தகுதியை நிரூபிக்க நிர்ப்பந்திக்கப்படுவது வேதனை அளிக்கிறது.

அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டிய அரசாங்கம், ஏற்றத்தாழ்வை உருவாக்குகிற கல்வி முறையைச்  சட்டமாகக் கொண்டு வருகிறது. ஏழை எளிய மாணவர்களின்  நிதர்சனம் அறியாதவர்கள் கல்விக் கொள்கைகளை வகுக்கிறார்கள்.

கொரோனா அச்சத்தால் உயிருக்குப் பயந்து வீடியோ கான்பிரன்சிங் மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடுகிறது.   இவ்வாறு அந்த  அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த அறிக்கை ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் நேற்று இரவே வைரலாகியது.

இந்தநிலையில், இதனை பார்த்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ். எம். சுப்ரமணியம், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் நடிகர் சூர்யா பத்திரிகை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அது ஊடகங்களில் வெளியாகியுள்ளது. அந்த அறிக்கையில் கொரோனா அச்சத்தால் உயிருக்குப் பயந்து வீடியோ கான்பிரன்ஸ் மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும்? என்று உத்தரவிடுகிறது.

என கூறப்பட்டுள்ளது. எனவே உயிருக்கு பயப்படும் நீதிமன்றம், மாணவர்களை தேர்வெழுத சொல்வதாக சூர்யாவின் கருத்து நீதிபதிகள் மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் நேர்மையையும், சிரத்தையையும் அவமதிக்கும் வகையில் உள்ளது.

சூர்யாவின் கருத்து மாண்பை குறைத்து மதிப்பிடுவது மட்டுமல்லாமல், தவறாக விமர்சிக்கும் வகையிலும் உள்ளது. நீதித்துறை மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலும் உள்ளது.

எனவே சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுத்து இந்திய நீதித்துறையின் மேன்மையை உறுதிபடுத்த வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

இதனைதொடர்ந்து அவர் மீது அவமதிப்பு வழக்கு தொடரப்படுமா என கேள்வி எழுந்துள்ளது.

.

மூலக்கதை