நீட் தேர்வு பயத்தில் தற்கொலை மாணவர் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்: தர்மபுரி ஜி.ஹெச்.ல் பரபரப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
நீட் தேர்வு பயத்தில் தற்கொலை மாணவர் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்: தர்மபுரி ஜி.ஹெச்.ல் பரபரப்பு

தர்மபுரி: நீட் தேர்வு பயத்தால் தர்மபுரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார். அவரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தர்மபுரி செந்தில்நகரை சேர்ந்தவர் மணிவண்ணன். இவரது மனைவி ஜெயசித்ரா.

இவர்களின் ஒரே மகன் ஆதித்யா (20), அங்குள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு வரை படித்து விட்டு 11 மற்றும் 12ம் வகுப்பை 2018ல் நாமக்கல்லில் உள்ள ஒரு பள்ளியில் முடித்துள்ளார். டாக்டராகும் ஆசையில் அந்த ஆண்டே நீட் தேர்வு எழுதினார்.

அதில், தோல்வியை தழுவியதால் மீண்டும் கடந்தாண்டு 2வது முறையாக நீட் தேர்வில் பங்கேற்று குறைந்த மதிப்பெண்களே பெற்றுள்ளார். இதையடுத்து, 3வது முறையாக இந்தாண்டு தேர்வெழுத விண்ணப்பித்து அதற்கு தயாராகி வந்தார்.

இன்று தேர்வு நடைபெறும் நிலையில், நேற்று ஆதித்யாவின் பெற்றோர் நீட் தேர்வு மையத்தை பார்ப்பதற்காக சொந்த ஊரான சேலம் மாவட்டம் பூசாரிப்பட்டிக்கு புறப்பட்டு சென்றனர். வீட்டில் தனியாக இருந்த ஆதித்யா இந்த ஆண்டும் தோல்வி அடைந்து விடுவோமோ என்ற பயத்தில் நேற்று மாலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மாலையில் வீட்டிற்கு வந்த பெற்றோர், மகன் மின்விசிறியில் தாயின் புடவையால் தூக்கில் தொங்கியதை பார்த்து கதறித்துடித்தனர். தகவலறிந்த போலீசார் அங்கு சென்று மாணவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.



இதுபற்றி ஆதித்யாவின் உறவினர்கள் கூறுகையில், `நீட்டுக்காக இதுதான் கடைசி உயிர் இழப்பாக இருக்க வேண்டும். இனி இதுபோல் நடக்கக்கூடாது.

இதுபற்றி அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர். இந்நிலையில், உறவினர்கள், பிரேத பரிசோதனை அறை முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எங்கள் அனுமதியின்றி உடலை பிரேத பரிசோதனை செய்துள்ளனர். நீட்தேர்வை ரத்து செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என கோஷங்களை எழுப்பினர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

மாணவி தற்கொலை முயற்சி ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பாரதி நகரை சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மகள் சவுமியா(19).

இவர் மருத்துவ படிப்பில் சேர்வதற்காக நீட் தேர்விற்கு விண்ணப்பித்திருந்தார். இன்று நீட் தேர்வு நடைபெறுவதையொட்டி கடந்த ஒரு வாரமாக சரியான தூக்கம் இன்றி தீவிரமாக படித்து வந்தார்.

நேற்றிரவு முதல் விடியவிடிய நீட் தேர்விற்கு தயாராகி கொண்டிருந்த சவுமியா தோல்வி பயத்தில் இன்று அதிகாலை திடீரென வீட்டில் இருந்த மாத்திரைகளை அதிகளவு சாப்பிட்டுள்ளார். சிறிது நேரத்தில் சவுமியா மயங்கி விழுந்தார்.

இதைபார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர், அவரை மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சோளிங்கர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திருச்செங்கோடு மாணவன் உடல் தகனம்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு கிரிவலப்பாதை இடையன்பரப்பு பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (47).   இவரது மனைவி கோமதி.

இவர்களது மகன் மோதிலால் 2 முறை தேர்வு எழுதியும் போதிய மதிப்பெண் கிடைக்காததால் இந்த ஆண்டு 3வது முறையாக நீட் தேர்வு எழுத இருந்தார். இந்நிலையில் நேற்று மாலை நீட் தேர்வு எழுதச்செல்ல தேவையான ஹால் டிக்கெட், ஆவணங்களை எடுத்து தயாராக வைத்து விட்டு அறையில் படித்துக்கொண்டு இருந்துள்ளார்.

இரவு 8. 30 மணியளவில் மோதிலாலை சாப்பிட தாய் அழைத்தபோது, மின்விசிறியில் அவர் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் இன்று அதிகாலையில் பிரேத பரிசோதனை முடிந்து பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இறுதிசடங்கிற்கு பின் திருச்செங்கோடு செங்கோடம்பாளையத்தில் உள்ள மின் மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட்டது. தற்கொலை முன் மாணவன் கடிதம் எழுதி வைத்திருந்ததாகவும், ஆனால் அதனை பெற்றோர் போலீசாரிடம் கொடுக்க மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

நீட் தேர்வு பயத்தில் மாணவ, மாணவிகள் அடுத்தடுத்து தற்கொலையால் பெற்றோர் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது.

இதனி டையே உயிர் இழந்த மாணவர்களின் பெற்றோரை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று சந்தித்து ஆறுதல் கூற உள்ளார்.

.

மூலக்கதை