சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்பதற்காக பரிசோதனை செய்யப்பட்ட 2 அதிமுக எம்எல்ஏக்களுக்கு கொரோனா: எடப்பாடி, ஓபிஎஸ், ஸ்டாலினுக்கு கொரோனா இல்லை

தமிழ் முரசு  தமிழ் முரசு
சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்பதற்காக பரிசோதனை செய்யப்பட்ட 2 அதிமுக எம்எல்ஏக்களுக்கு கொரோனா: எடப்பாடி, ஓபிஎஸ், ஸ்டாலினுக்கு கொரோனா இல்லை

சென்னை: சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்பதற்காக பரிசோதனை செய்யப்பட்ட 2 அதிமுக எம்எல்ஏக்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், எதிர்க்கட்சி தலைவர் மு. க. ஸ்டாலினுக்கு கொரோனா இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவை கூட்டம் நாளை மறுதினம் (திங்கள்) சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்குகிறது.

கொரோனா தொற்று பரவல் அச்சம் காரணமாக இந்த கூட்டத்தொடர் 14, 15, 16 ஆகிய 3 நாட்கள் மட்டுமே நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்கும் முதல்வர், துணை முதல்வர், எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட அனைத்து எம்எல்ஏக்கள், ஐஏஎஸ் அதிகாரிகள், தலைமை செயலக ஊழியர்கள், காவலர்கள், பத்திரிகையாளர்கள் அனைவரும் 72 மணி நேரத்துக்கு முன்னதாக கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும்.

இந்த பரிசோதனையில் கொரோனா இல்லை என்ற சான்றிதழ் இருந்தால்தான் சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள் என்று சபாநாயகர் தனபால் கூறி இருந்தார்.

அதன்படி நேற்று முதல்வர் உள்ளிட்ட அனைத்து எம்எல்ஏக்கள், அரசு ஊழியர்கள், காவலர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடைபெற்றது. எம்எல்ஏக்களுக்கு அவர்களது வீடுகளுக்கே சென்று சுகாதார ஊழியர்கள் கொரோனா பரிசோதனை செய்தனர்.

முதல்வர் எடப்பாடி சென்னையில் உள்ள வீட்டில் பரிசோதனை செய்தார். துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ளார்.

அவரது வீட்டுக்கு சுகாதார துறை ஊழியர்கள் சென்று பரிசோதனை செய்தனர். எதிர்க்கட்சி தலைவர் மு. க. ஸ்டாலின் சென்னை, ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார்.

நேற்று கொரோனா பரிசோதனை செய்தவர்களுக்கு இன்று காலை முடிவுகள் அறிவிக்கப்பட்டது.

அதன்படி முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், எதிர்க்கட்சி தலைவர் மு. க. ஸ்டாலின், சபாநாயகர் தனபால், அமைச்சர்கள் மற்றும் பெரும்பாலான எம்எல்ஏக்களுக்கு கொரோனா இல்லை என்று சோதனை முடிவில் தெரியவந்தது. அதேநேரம் திருச்செங்கோடு தொகுதி அதிமுக பெண் எம்எல்ஏ பொன். சரஸ்வதி மற்றும் செய்யாறு தொகுதி அதிமுக எம்எல்ஏ தூசி மோகன் ஆகிய இருவருக்கும் கொரோனா பாசிட்டிவ் என்று பரிசோதனை முடிவில் தெரியவந்தது.

இதையடுத்து இரண்டு அதிமுக எம்எல்ஏக்களும் சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்க தயாராக இருந்த 2 அதிமுக எம்எல்ஏக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது அதிமுகவினர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து திருச்செங்கோடு அதிமுகவினர் கூறுகையில், ‘‘நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் அதிமுகவினர் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். ஏற்கனவே மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி உள்ளிட்ட பலர், கொரோனாவில் இருந்து மீண்டு வந்துள்ளனர்.

தற்போது திருச்செங்கோடு அதிமுக எம்எல்ஏ பொன். சரஸ்வதிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே அவரது உறவினர்கள் பாதித்து மீண்ட நிலையில் அவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

கொரோனா காலக்கட்டத்திலும் தீவிரமாக தொகுதி மேம்பாட்டு பணிகளை அவர் மேற்கொண்டார். அவருடன் இணைந்து பணியாற்றிய அனைவரும் பரிசோதனை மேற்கொள்ள உள்ளோம்’’ என்றனர்.

கடந்த 5 மாதங்களில் மட்டும் அதிமுக, திமுக, காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த 39 சட்டமன்ற உறுப்பினர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் தொகுதி திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் சிகிச்சை பலன் அளிக்காமல் மரணம் அடைந்தார்.

அவரது மறைவுக்கு, நாளை மறுதினம் நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டு அன்றைய கூட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது.

.

மூலக்கதை