சமூக சீர்திருத்தவாதி அக்னிவேஷ் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
சமூக சீர்திருத்தவாதி அக்னிவேஷ் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: சமூக சீர்திருத்தவாதி சுவாமி அக்னிவேஷ் மறைவுக்கு  திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை: சாதி, மதங்களைத் தூக்கியெறிந்து விட்டு துறவறம் பூண்ட சமூகச் சீர்திருத்தவாதியும், புகழ்பெற்ற சமூக ஆர்வலருமான சுவாமி அக்னிவேஷ் உடல்நலக்குறைவால் மறைவெய்தினார் என்ற வேதனை மிகுந்த செய்தி கேட்டு சொல்லொணாத் துயரத்திற்கு உள்ளானேன்.

அவரது மறைவிற்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த அவர் - துறவறம் மேற்கொண்டதிலிருந்து கொத்தடிமை தொழிலாளர்கள் முறையை அடியோடு ஒழிக்க அயராது பாடுபட்டவர். ‘பந்துவா முக்தி மோர்ச்சா’ (கொத்தடிமை தொழிலாளர் விடுதலை முன்னணி) என்ற அமைப்பை ஏற்படுத்தி புரட்சிகரமான மீட்புப் பணிகளில் ஈடுபட்டவர்.

அரியானா மாநில சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு - சட்டமன்ற உறுப்பினராகி - கல்வியமைச்சரானவர்.

அங்கு கொத்தடிமைத் தொழிலாளர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியதைக் கண்டித்து - இரண்டே ஆண்டுகளில் தனது அமைச்சர் பதவியையும் தூக்கியெறிந்து விட்டு சமூகப் பணியில் தன்னைத் தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்ட துணிச்சல் மிக்க கொள்கை வீரர். காஷ்மீர் மாநிலத்தில் அமைதி திரும்பவும், ஊழல் எதிர்ப்பு இயக்கத்திலும், மாவோயிஸ்டுகளைத் தேசிய நீரோட்டத்திற்குக் கொண்டு வரவும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட அவர் - நாட்டில் அமைதி நிலவ வேண்டும் என்பதில் தீராத நாட்டம் கொண்டவர். நான் தி. மு. க.

தலைவரான பிறகு 1. 12. 2018 அன்று சென்னை வந்து சந்தித்த சுவாமி அக்னிவேஷ் அவர்கள் “சமூக அக்கறை நிரம்பிய பல்வேறு கருத்துகளை” என்னுடன் பகிர்ந்து கொண்டதும் - ”Applied Spirituality” என்ற ஒரு நூலை அவர் எனக்கு நினைவுப் பரிசாக வழங்கியதும் இன்று என் கண் முன் வந்து நிற்கிறது.

சிறந்த சமூகச் சீர்திருத்தவாதியும், கொத்தடிமை முறை ஒழிப்புக்கு எதிராகத் தொய்வின்றி - மன உறுதியுடன் இறுதி மூச்சுவரை மனித நேயத்திற்காகப் போராடியவருமான சுவாமி அக்னிவேஷ் மறைவு நாட்டிற்கு மிகப்பெரிய இழப்பாகும்.

அவரது மறைவால் வாடும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

.

மூலக்கதை