மாஸ்கோவில் இந்திய-சீன அமைச்சர்கள் சந்திப்பு: எல்லை பதற்றத்தை குறைக்க 5 அம்ச திட்டம்: சீன வெளியுறவு அமைச்சகம் அறிக்கை

தமிழ் முரசு  தமிழ் முரசு
மாஸ்கோவில் இந்தியசீன அமைச்சர்கள் சந்திப்பு: எல்லை பதற்றத்தை குறைக்க 5 அம்ச திட்டம்: சீன வெளியுறவு அமைச்சகம் அறிக்கை

மாஸ்கோ: லடாக்கில் எல்லை பிரச்னை நீடிக்கும் நிலையில் மாஸ்கோவில் இந்திய-சீன வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு நடந்தது. அதில் எல்லை பதற்றத்தை குறைக்க 5 அம்ச திட்டம் வகுக்கப்பட்டதாக சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஜூன் 15ம் தேதி கல்வான் பள்ளத்தாக்கு பகுதியை ஆக்கிரமிக்க சீன துருப்புகள் பயங்கர ஆயுதங்களுடன் வந்து நடத்திய மோதலில் 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்ததைத் தொடர்ந்து எல்லையில் நிலைமை மேலும் மோசமானது. கடந்த 4ம் தேதி மாஸ்கோவில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் ராணுவ அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்றபோது, சீன ராணுவ அமைச்சர் வெய் பெங்கியை இந்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்தித்து பேசினார்.



அப்போது அவர், ‘சீன துருப்புகள் ஒரு தலைபட்சமாக அசல் கட்டுப்பாட்டு கோட்டுடனான நிலைமையை மாற்ற முயற்சிக்கும் செயல், இரு தரப்பு ஒப்பந்தங்களை மீறுவதாகும்’ என்று கூறினார். ஆனால் கடந்த 7ம் தேதி இரவு சீன துருப்புகள் பயங்கரமான ஆயுதங்களுடன் லடாக்கில் அசல் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இந்திய நிலைகளில் ஒன்றை நோக்கி அத்துமீறி முன்னேறி துப்பாக்கி சூடு நடத்தி விட்டு, இந்திய தரப்பினர் மீது பழி போட்டது.

இதனால் லடாக்கில் இரு தரப்புகளும் படைகளை குவித்து, தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மாஸ்கோ சென்றார்.

தொடர்ந்து, ரஷியா, இந்தியா, சீனா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பான ‘ரிக்’ அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் நேற்று நடந்தது.

இந்த கூட்டத்தை ரஷிய வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவ் நடத்தினார்.

இதில், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், லடாக் மோதல் வலுத்து வருகிற நிலையில் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யியை நேருக்கு நேர் சந்தித்து பேசினார். இந்த கூட்டத்துக்கு பின்னர் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தனது டுவிட்டர் பதிவில், ‘ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ் மாஸ்கோவில் நடத்திய ‘ரிக்’ வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்றேன்.

வரும் ஆண்டில் ‘ரிக்’ செயல்முறையின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், சீன வெளியுறவு அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிக்கையில், ‘சீன அரசு இந்தியாவுடன் ராஜதந்திர மற்றும் ராணுவ மட்டத்திலான பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறது. அப்போதுதான் சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதியில் அமைதியை மீட்டெடுக்க முடியும்.



தற்போதைய எல்லை நிலைமை இரு நாடுகளின் நலனுக்கும் சரியானதாக இல்லை. சமாதானத்தை உறுதி செய்வதற்கும், அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்கும் தற்போதுள்ள ஒப்பந்தங்களுக்கு கட்டுப்பட வேண்டும்.

மேலும், இன்றைய நிலையில் இரு நாடுகளும் ஐந்து அம்ச திட்டத்தை வகுத்துள்ளன’ என்று தெரிவித்துள்ளது.

5 அம்ச திட்டம் என்ன?
* இந்திய - சீன உறவை மேம்படுத்தும் வகையில் இருநாட்டு தலைவர்களுக்கு இடையில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களைப் பின்பற்றி நடக்க வேண்டும். பிரச்னையை ஏற்படுத்தும் எந்தவொரு விஷயத்தை இனி அனுமதிக்கக் கூடாது.
* எல்லையில் நிலவும் பதற்றமான சூழல் இருநாடுகளுக்கும் நல்லதல்ல.

இருநாட்டு ராணுவ அதிகாரிகளும் பேச்சுவார்த்தை மூலம் தங்கள் பிரச்சினையை தீர்த்துக் கொள்ள வேண்டும். விரைவாக படைகளை பின்வாங்கிக் கொள்ள வேண்டும்.

இரு படைகளுக்கும் இடையில் குறிப்பிட்ட இடைவெளியை உறுதிப்படுத்த வேண்டும். எல்லைப் பதற்றத்தை தணிக்க வேண்டும்.
*  இந்திய மற்றும் சீன எல்லை விவகாரம் தொடர்பாக ஏற்கனவே உள்ள ஒப்பந்தங்கள் மற்றும் நெறிமுறைகளைப் பின்பற்றி நடப்போம்.

எந்தவொரு விவகாரமும் மீண்டும் சிக்கலை ஏற்படுத்தாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
* இருதரப்பிற்கும் இடையிலான பேச்சுவார்த்தை மற்றும் தகவல்தொடர்பு ஆகியவை சிறப்பு பிரதிநிதித்துவ வழிமுறைகளின்படி மேற்கொள்ளப்படும். எல்லை விவகாரம் தொடர்பாக அடுத்தடுத்து பேச்சுவார்த்தைகளுக்கு உடனடியாக ஏற்பாடு செய்யப்படும்.


* எல்லையில் நிலவரத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வந்து புதிய நம்பிக்கையை விதைத்து அமைதியை நிலைநாட்டவும், உறுதிப்படுத்தவும் வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிங்கர் - 4-ஐ கைப்பற்றிய இந்தியா
பாங்காங் ஏரிப்பகுதியை சுற்றியுள்ள மலைத்தொடர்களில் இரு நாடுகளும் ராணுவ நிலைகளை அமைத்துள்ளன. இந்த ஏரி பகுதியை சுற்றி பிங்கர் 1 முதல் பிங்கர் 14 வரை பல்வேறு நிலைகள் உள்ளன.

ஏரியின் தெற்கு கரையோரத்தில் சீன வீரர்களின் பிங்கர் - 4 (விரல் 4) நிலை அமைந்துள்ளது. சீன படையினர் கடந்த ஏப்ரல்-மே மாதங்களின் போது அத்துமீறி நுழைந்தனர்.

இந்நிலையில், பிங்கர் - 4 பகுதியில் சீன படையினர் ஆக்கிரமித்துள்ள மலைத்தொடரை விட மிகவும் உயரமான மலைத்தொடரை இந்திய ராணுவம் கைப்பற்றியுள்ளது. இந்தியா கைப்பற்றியுள்ள மலைத்தொடர் சீன ராணுவ நிலைகளுக்கு மிக அருகிலும் மிக உயரமாகவும் உள்ளது.



இந்திய ராணுவத்தின் இந்த நடவடிக்கை கடந்த மாதம் இறுதியில் தொடங்கப்பட்டது. தற்போது பிங்கர் - 4 பகுதியின் மிகவும் உயரமான மலைத்தொடர் இந்தியாவின் கட்டுப்பாட்டில் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பாங்காங் ஏரியின் தெற்கு கரையோரம் அமைந்துள்ள முக்கிய நிலைகளை கைப்பற்ற சீனா முயற்சித்தபோது, அதை இந்திய வீரர்கள் முறியடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை