சீன மாணவர்கள், ஆராய்ச்சியாளர்களின் விசா ரத்து: அமெரிக்கா அதிரடி

தமிழ் முரசு  தமிழ் முரசு
சீன மாணவர்கள், ஆராய்ச்சியாளர்களின் விசா ரத்து: அமெரிக்கா அதிரடி

வாஷிங்டன்: சீனாவை சேர்ந்த மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் விசாக்களை திடீரென அதிரடியாக ரத்து செய்து, அமெரிக்க உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

சீனாவை சேர்ந்த 36 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் அமெரிக்காவில் உள்ள முன்னணி பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் கல்வி பயின்று வருகின்றனர். மேலும் ஆராய்ச்சி மாணவர்கள் ஏராளமானோரும் அமெரிக்காவில் தங்கி, அங்குள்ள பல்கலைக்கழகங்களில் தங்கள் ஆராய்ச்சி படிப்புகளை தொடர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் சீனாவை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் விசாக்களை ரத்து செய்துள்ளதாக அமெரிக்க உள்துறை அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது.

இவர்களில் பெரும்பாலானோர் அறிவியல், தொழில்நுட்பம், கணிதம் போன்ற பல்வேறு பிரிவுகளை சேர்ந்த உயர் கல்வி பயிலும் மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும், ரகசிய ஆய்வுத் தகவல்கள் திருடப்படுவதைத் தடுக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க உள்துறை பாதுகாப்பு அதிகாரி சாட் உல்ஃப் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், ‘‘அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் இளங்கலை, முதுகலைப் பட்டக்கல்வி பயின்று வரும் மாணவர்களின் விசாக்கள் உடனடியாக ரத்து செய்யப்பட்டதாக சீனாவில் உள்ள அமெரிக்கத் தூதரகத்திடமிருந்து அந்நாட்டு மாணவர்களுக்கு முறைப்படி இன்று தகவல் அனுப்பப்பட உள்ளது.

அமெரிக்காவுக்குப் பயணம் செய்ய அவர்கள் இனி புதிதாக விசாக்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

இங்கு ஆராய்ச்சி துறைகளில் ஈடுபட்டு, கல்வியை முடித்து செல்லும் மாணவர்கள், சீனா சென்று ராணுவப் பணிகளில் சேர்கிறார்கள். இதனால் எங்கள் நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது’’ என்று தெரிவித்துள்ளார்.

இது தவிர சீன ராணுவத்துடன் தொடர்புடையதாக நம்பப்படும் ஆயிரத்துக்கும் அதிகமான சீனர்களின் விசாக்களையும் ரத்து செய்து, அமெரிக்கா இன்று உத்தரவிட்டுள்ளது.

நேற்று முன்தினம் (8ம் தேதி) இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக அமெரிக்கா அறிவித்துள்ள நிலையில், தங்கள் விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதை அறிந்து சீனாவை சேர்ந்த மாணவர்கள் பலத்த அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அமெரிக்காவின் இந்த முடிவு, மாணவர்களின் எதிர்காலத்தைத்தான் கேள்விக்குறியாக்கி விட்டது என்று, வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் முதுகலை இறுதியாண்டு பயிலும் மாணவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலுக்கு பின்னர் அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்கள் ஆன்லைன் கல்வி முறைக்கு மாறி வருவதால், இனிமேல் வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் விசாக்களில் கட்டுப்பாடுகள் அதிகம் இருக்கும் என கடந்த ஜூன் மாதமே அமெரிக்கா அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி தேர்தல் நெருங்கி வரும் வேளையில், டொனால்டு டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசிடம் இருந்து, இம்மாதிரி அதிரடி உத்தரவுகள் அடுத்தடுத்து வரக்கூடும் என்று நடுநிலையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

.

மூலக்கதை