நதி நீர் பிரச்னை தொடர்பாக தமிழகம் மற்றும் கேரளா இடையே நாளை இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தை

தமிழ் முரசு  தமிழ் முரசு
நதி நீர் பிரச்னை தொடர்பாக தமிழகம் மற்றும் கேரளா இடையே நாளை இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தை

அரசு செயலாளர் மணிவாசன் தலைமையில் குழு விரைந்தது

ெசன்னை: நதி நீர் பிரச்சனை தொடர்பாக தமிழகம் மற்றும் கேரளா இடையே நாளை இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தை நடக்கிறது. இந்த கூட்டத்தில், பாண்டியாறு-புன்னம்புழா திட்டம் செயல்படுத்துவது தொடர்பாகவும், நல்லாறு-நீராறு அணை திட்டம் ஒப்பந்த மறு ஆய்வு குறித்தும் விவாதிக்கப்படுகிறது.

தமிழகம் மற்றும் கேரளா இடையே பல்வேறு நதிநீர் பிரச்னைகள் இருக்கிறது. குறிப்பாக, சிறுவாணி அணை, பரம்பிகுளம்-ஆழியாறு, ஆணைமலை ஆறு, புன்னம்புழா ஆகிய ஆறுகளின் நீர் பங்கீட்டில் இரு மாநிலங்களுக்கு இடையே பிரச்னை நீடித்து வருகின்றது.

இதுதவிர முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை அதிகரிப்பது தொடர்பாக இருமாநிலங்களுக்கு இடையே தீர்வு எட்டியபாடில்லை. இந்த பிரச்னை தீர்க்கப்படாமல் இருப்பதால் தண்ணீர் கிடைக்காமல் இருமாநில விவசாயிகள் கடும் பாதிப்பிற்கு ஆளாகின்றனர். இப்பிரச்னைக்கு தீர்வு காணவேண்டும் என்று இருமாநில விவசாயிகளும் வலியுறுத்தி வருகின்றனர்.



இந்த விவகாரம் குறித்து கடந்தாண்டு செப்டம்பர் 25ம் தேதி கேரள முதல்வர் பினராய் விஜயனிடம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். அப்போது, பரம்பிகுளம்-ஆழியாறு (பிஏபி) ஒப்பந்தம் புதுப்பிப்பு, பாண்டியாறு-புன்னம்புழா, நீராறு-நல்லாறு திட்டம், நெய்யாறு திட்டம், செண்பகவல்லி நீர்வழிப்பாதை சீரமைப்பு என பல்வேறு திட்டங்கள் மற்றும் நீர் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இந்த கூட்டத்தில், இருமாநில நதிநீர் பிரச்னைகளுக்கு தீர்வுகாணும் வகையில், பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக இரண்டு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்த இரு மாநிலத்திலும் செயலாளர்கள் தலைமையில் குழு அமைக்க முடிவு செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து தமிழக அரசு சார்பில் பரம்பிகுளம்-ஆழியாறு திட்டம் தொடர்பாக பேசவும், பாண்டியாறு-புன்னம்புழா என்கிற புதிய திட்டத்தை செயல்படுத்த ஆராய புதிய குழு ஒன்று பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் க. மணிவாசன் தலைமையில் அமைக்கப்பட்டது.

அதே போன்று கேரளாவிலும் நீர்வளத்துறை செயலாளர் அசோக் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு சார்பில் கடந்தாண்டு டிசம்பர் 12ம் தேதி இரண்டு மாநில நதிநீர் பங்கீடு குறித்து தமிழகம் மற்றும் கேரள அதிகாரிகள் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த கூட்டத்தில் பிஏபி ஒப்பந்தம் புதுப்பிப்பது குறித்தும், பரம்பிகுளம் அணையில் இருந்து நீர் பங்கீட்டை உரிய முறையில் வழங்குவது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது.

பருவமழை பற்றாக்குறை நேரத்தில் அணையின் நீர் இருப்ைப பொறுத்து தண்ணீர் திறந்து விடுவது தொடர்பாகவும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தை ஜனவரி மாதத்தில் ேகரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெறும் என்று கூறப்பட்டது.

ஆனால், பல்வேறு காரணங்களால் பேச்சுவார்த்தை நடத்துவதில் தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில் இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தை திருவனந்தபுரத்தில் நாளை நடைபெறுகிறது.

இக்கூட்டத்தில் பங்கேற்க தமிழக பொதுப்பணித்துறை செயலாளர் மணிவாசன் தலைமையிலான குழுவினர் கேரளா புறப்பட்டு சென்றனர்.

இந்த நிலையில் நாளை திருவனந்தபுரம் சுற்றுலா மேம்பாட்டு கழக ஓட்டலில் தமிழக-கேரளா மாநில அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடக்கிறது.

இந்த பேச்சுவார்த்தையின் போது, நீராறு-நல்லாறு அணை திட்டம் ஒப்பந்தம் மறு ஆய்வு, பாண்டியாறு-புன்னம்புழா திட்டம் செயல்படுத்தி பவானி அணைக்கு தண்ணீர் திருப்பும் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக இக்கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.

.

மூலக்கதை