சீனா மிரட்டல் எதிரொலி: இந்திய விமானப்படையில் ரஃபேல் சேர்ப்பு: அம்பாலா விமானப்படைத் தள விழாவில் நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்

தமிழ் முரசு  தமிழ் முரசு
சீனா மிரட்டல் எதிரொலி: இந்திய விமானப்படையில் ரஃபேல் சேர்ப்பு: அம்பாலா விமானப்படைத் தள விழாவில் நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்

அம்பாலா: சீனா எல்லையில் போர் பதட்டம் ஏற்பட்டுள்ள நிலையில், பிரான்ஸ் நாட்டிடம் இருந்து வாங்கப்பட்ட 5 ரஃபேல் போர் விமானங்கள், இன்று முறைப்படி இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டன. ஹரியானா மாநிலம் அம்பாலா விமானப்படைத் தளத்தில் நடந்த நிகழ்ச்சியில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ரஃபேல் விமானங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

பிரான்ஸ் நாட்டில் இருந்து ரூ. 59 ஆயிரம் கோடி மதிப்பில், 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க, கடந்த 2016ம் ஆண்டு மத்திய அரசு ஒப்பந்தம் செய்து கொண்டது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் கடந்த ஆண்டு அக்டோபரில், முதல் ரஃபேல் விமானத்தை இந்தியாவிடம், பிரான்ஸ் ஒப்படைத்தது.

பின்னர் அடுத்தடுத்து 4 விமானங்களையும் பிரான்சில் உள்ள இந்திய தூதரகத்திடம், அந்நாடு ஒப்படைத்தது.

இந்த  5 விமானங்களும் கடந்த ஜூலை 27ம் தேதி இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் உள்ள அம்பாலா விமானப்படை தளத்துக்கு வந்தன.

இந்நிலையில் மேலும் 5 விமானங்களை, பாரீசில் உள்ள இந்திய தூதரக அலுவலகத்தில் பிரான்ஸ் ஒப்படைத்துள்ளது. இந்தியா வந்துள்ள 5 ரஃபேல் விமானங்களையும், முறைப்படி இன்று இந்திய விமானப்படையில் சேர்க்கும் நிகழ்ச்சி அம்பாலாவில் நடந்தது.

இன்று காலை நடந்த நிகழ்ச்சியில் முதலில் வழக்கமான முறையில் 3 மதங்களின் சார்பில் பூஜைகள், வழிபாடுகள் நடந்தன. பின்னர் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இன்று காலை ரஃபேல் போர் விமானங்களை முறைப்படி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.



பின்னர் அந்த விமானங்கள் ஐந்தும், இந்திய விமானப்படையுடன் சேர்க்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் பிரான்சின் பாதுகாப்புத் துறை அமைச்சர் புளாரன்ஸ் பார்லி மற்றும் இந்திய பாதுகாப்பு படை தளபதி ஜெனரல் பிபின் ராவத், விமானப்படை தலைமை தளபதி ஆர். கே. எஸ். பதோரியா, பாதுகாப்புத் துறை செயலாளர் அஜய் குமார், இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறை செயலாளர் டாக்டர் சதீஷ் ரெட்டி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

4வது நாடு இந்தியா இரட்டை இன்ஜின்கள் கொண்ட சக்தி வாய்ந்த ரஃபேல் விமானம், மணிக்கு 1,400 கிமீ வேகத்தில் பறக்கும் தன்மை கொண்டது. 3,900 கிமீ தொலைவு வரை நிற்காமல் பறந்து சென்று, இலக்கை தாக்கி விட்டு திரும்பும் வல்லமை கொண்டவை.



தற்போது இந்தியாவையும் சேர்த்து 4 நாடுகளின் விமானப்படைகளில் மட்டுமே ரஃபேல் விமானம் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விமானத்தை தயாரித்துள்ள பிரான்ஸ் தவிர, எகிப்து மற்றும் கத்தார் நாடுகளின் ராணுவத்திடம் மட்டுமே ரஃபேல் விமானங்கள் உள்ளன.
சீனா எல்லையில் போர் பதட்டம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்திய விமானப்படையில் ரபேல் போர் விமானங்கள் சேர்க்கப்பட்டுள்ளது, நமது ராணுவத்துக்கு கூடுதல் பலத்தை கொடுத்துள்ளது.

.

மூலக்கதை