கேரள தங்க கடத்தல் வழக்கு நகை தயாரிப்பாளர் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை: கோவையில் அதிரடி விசாரணை

தமிழ் முரசு  தமிழ் முரசு
கேரள தங்க கடத்தல் வழக்கு நகை தயாரிப்பாளர் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை: கோவையில் அதிரடி விசாரணை

கோவை: கேரளா தங்க கடத்தல் வழக்கு தொடர்பாக கோவை நகை தயாரிப்பாளர் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகம் பெயரில் வந்த பார்சலில் சட்டவிரோதமாக கடத்தப்பட்ட ரூ. 15 கோடி மதிப்புள்ள 30 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த தங்க கடத்தல் வழக்கில் தூதரக முன்னாள் ஊழியர் ஸ்வப்னா சுரேஷ், சரித், சந்தீப்நாயர், பைசல் பேரத் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கு கேரள அரசியலில் பெரும் புயலை கிளப்பியதோடு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என். ஐ. ஏ) அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஸ்வப்னா சுரேசுடன் தொடர்புடைய நபர்கள் குறித்து தகவல்களை சேகரித்து வந்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் பல்வேறு கட்டங்களாக விசாரணை நடத்தினர்.

இதில் நகை கடத்தல் வழக்கில் தொடர்புடைய கும்பலுக்கு, கோவையை சேர்ந்த நகை தயாரிப்பாளர் நந்தகோபால் என்பவர், இக்கும்பலிடம் இருந்து தங்க கட்டிகளை வாங்கி, நகைகளாக செய்து கொடுத்தது தெரியவந்தது. அதனடிப்படையில், கொச்சின் என்ஐஏ அலுவலகத்தில் இருந்து கோவை வந்த என்ஐஏ அதிகாரிகள், இன்று காலை கோவை டி. கே. மார்க்கெட் பின்புறம், பவிழம் வீதியில் உள்ள நகை தயாரிப்பாளர் நந்தகோபால் (42) என்பவரின் வீட்டில் காலை 6 மணி முதல் சோதனை மேற்கொண்டனர்.



இதில் டி. எஸ். பி சாகுல் அமீது தலைமையில் 4 பேர் குழுவினர் கீழ் தளத்தில் உள்ள நகைப்பட்டறை, மேல் தளத்தில் உள்ள வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அங்கிருந்து முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.

பின்னர், நந்தகோபாலை கோவை ரேஸ்கோர்ஸிலுள்ள என்ஐஏ அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர். நந்தகோபால் நகைப்பட்டறையில் 20க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர்.

இவர் தங்க கட்டிகளை வாங்கி, அதை தனது பட்டறையில் நகைகளாக வடிவமைத்து, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலத்திலுள்ள நகை விற்பனை நிலையங்களுக்கு விற்பனை செய்வது வழக்கம். கடந்த 2 ஆண்டுக்கு முன்பு இவரும், இவரது நண்பர் சவுகத் அலி என்பவரும் மும்பையில் ஹவாலா மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டனர்.



கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண நிலையில் இருந்த நந்தகோபால், சமீபகாலமாக பொருளாதார வளர்ச்சியை கண்டுள்ளார். அவர் சட்டவிரோதமாக தங்க கட்டிகளை வாங்கி, நகைகளாக செய்து வந்துள்ளதும், ஹவாலா மோசடி கும்பலுடன் தொடர்புள்ளதும் அவரது வளர்ச்சிக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

இவருடன் தொடர்புடையவர்கள் யார், இவரது வர்த்தக பரிவர்த்தனைகள் குறித்து மேலும் விசாரிக்க என்ஐஏ அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர்.

குறிப்பாக கேரள தங்கம் கடத்தல் கும்பலுடன் தொடர்பு ஏற்பட்டது எப்படி? நந்தகோபாலிடம் கேரள தங்கம் கடத்தல் கும்பலை சேர்ந்த, யார் தங்க கட்டிகளை கொண்டு வந்து கொடுத்தது உள்பட பல்வேறு கேள்விகளுக்கு விடை தேடி விசாரணை நடந்து வருகிறது.

இதில் பல்வேறு தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.

கேரள தங்க கட்டி கடத்தல் வழக்கு தொடர்பாக கோவையில் நடந்து வரும் சோதனை மற்றும் விசாரணையால் இவ்வழக்கு அடுத்த கட்டத்துக்கு சென்றுள்ளது.

.

மூலக்கதை