ஆக்ஸ்போர்டு பல்கலை தடுப்பூசி சோதனை திடீர் நிறுத்தம்: உலகளவிலான 3ம் கட்ட சோதனையில் பின்னடைவு

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஆக்ஸ்போர்டு பல்கலை தடுப்பூசி சோதனை திடீர் நிறுத்தம்: உலகளவிலான 3ம் கட்ட சோதனையில் பின்னடைவு

லண்டன்: ஆக்ஸ்போர்டு பல்கலை மற்றும் ஆஸ்ட்ரா செனெகா நிறுவனத்தின் தடுப்பூசி ஒருவருக்கு விளக்க முடியாத பக்க விளைவை ஏற்படுத்தி உள்ளதால் தடுப்பூசி சோதனை திடீரென நிறுத்தப்பட்டது. 3ம் கட்ட சோதனையில் உலகம் முழுவதும் நிறுத்தப்பட்டதால் தடுப்பூசி வெளியாவதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.   உலகில் பல முன்னணி நாடுகளும் கொரோனா தடுப்பூசி தயாரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வரும்நிலையில் ஆக்ஸ்போர்டு - ஆஸ்ட்ரா செனெகா நிறுவனத்தின் தயாரிப்பான கொரோனா தடுப்பூசி (AZD1222) வல்லுநர்களின் நம்பிக்கையைப் பெற்றிருந்தது.கிட்டத்தட்ட அந்த தடுப்பூசி இறுதிக் கட்ட சோதனை நிலையை எட்டியது. இந்நிலையில் சோதனையில் பங்கேற்ற ஒருவருக்கு மிகவும் சீரியஸான பக்க விளைவுகள் ஏற்பட்டதால், சோதனை திடீரென நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை சுகாதார இணையதளமான ‘ஸ்டாட் நியூஸ்’ வெளியிட்டுள்ளது. மேலும், ஆஸ்ட்ரா செனெகா நிறுவன செய்தித் தொடர்பாளரின் கருத்தையும் மேற்கோள் காட்டியுள்ளது.

முன்னதாக இந்த தடுப்பூசி, இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் மக்களிடம் சோதனை செய்யும் அளவுக்கு வளர்ந்து வந்தது. என்ன மாதிரியான பக்க விளைவு எப்போது இது ஏற்பட்டது போன்ற விவரங்கள் வெளியாகவில்லை.

ஆனால் பாதிக்கப்பட்ட பங்கேற்பாளர் குணமடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பூசி அரசியல் காரணங்களினால் ஒரு அவசரகதியை எட்டுவது நடந்து வருவதால், ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் பாதுகாப்பு கேள்விக்குறியானதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.ஆஸ்ட்ராசெனெகா, ஃபைசர், கிளாக்சோ ஸ்மித்கிளைன் உள்ளிட்ட தடுப்பூசி தயாரிப்பு மருந்து நிறுவனங்கள், அரசியல் நெருக்கடியிலும் பாதுகாப்பு குறித்த உறுதிமொழியை ஏற்றுள்ளன. உலகச் சுகாதார அமைப்பின் தகவலின் படி சுமார் 180 தடுப்பூசிகள் தயாரிப்பில் உள்ளன.

ஆனால் இவை எதுவும் ‘கிளினிக்கல்’ சோதனைக்கு இன்னமும் உட்படுத்தப்படவில்லை. தற்போது, ஆக்ஸ்போர்டு தடுப்பூசி செலுத்தப்பட்ட ஒருவருக்கு ‘விளக்க முடியாத பக்க விளைவு’ ஏற்பட்டுள்ளதாக ஆஸ்ட்ராசெனெகா கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   இது கொரோனாவுக்கு எதிரான தற்போதைய போராட்டத்தில் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.

‘ஏஎப்பி’ செய்தி நிறுவன அறிக்கையின்படி, தற்போது நடைபெற்று வரும் சோதனை உலகம் முழுவதும் நிறுத்தப்பட்டுள்ளது. முழுமையான விசாரணைக்குப் பிறகுதான் மீண்டும் தொடங்க வாய்ப்புள்ளது.தடுப்பூசி பரிசோதனையின் மூன்றாம் கட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்களுக்கு செலுத்தப்பட்டது. கிட்டதிட்ட சுமார் 30,000 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், ‘மிகப்பெரிய சோதனை நடத்தப்படும் போது ஒருவர் நோய்வாய்ப்படுவதற்கான சாத்தியமும் உள்ளது. ஆனால் அதனை கவனமாக சரிபார்த்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்’ என்றார்.

ஏற்கனவே, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பூசி சோதனை ஒரு முறை நிறுத்தப்பட்டது.

தற்போது இரண்டாவது முறையாக 3ம் கட்டத்தில் நிறுத்தப்பட்டுள்ளதால் உலகளவிலான பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

.

மூலக்கதை