பிரேசில் கால்பந்து நட்சத்திரம் நெய்மருக்கு கொரோனா பாசிட்டிவ்

தமிழ் முரசு  தமிழ் முரசு
பிரேசில் கால்பந்து நட்சத்திரம் நெய்மருக்கு கொரோனா பாசிட்டிவ்

பாரீஸ்: பிரேசிலின் பிரபல கால்பந்து நட்சத்திரம் நெய்மருக்கு கொரோனா தொற்று உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. நம்பர் 1 வீரரும், பிரேசிலின் நட்சத்திர வீரருமான நெய்மர், தற்போது பாரீசில் உள்ள பாரீஸ் செயின்ட் ஜெர்மன் (பிஎஸ்ஜி) என்ற கிளப் அணிக்காக விளையாடி வருகிறார்.

இந்த அணி பங்கேற்கும் லீக் சுற்று போட்டிகள் வரும் 10ம் தேதி முதல் நடைபெற உள்ளன. இப்போட்டிகளுக்காக பிஎஸ்ஜி அணியின் வீரர்கள் தற்போது பாரீசில் தீவிர பயிற்சியில் உள்ளனர்.

இதில் அணி வீரர்களுக்கு வழக்கமான மருத்துவ பரிசோதனைகளுடன், கொரோனா பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன. இந்த பரிசோதனை முடிவுகள் நேற்று பெறப்பட்டதாகவும் இதில் நெய்மர் உட்பட அணியின் 3 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் பிஎஸ்ஜி கிளப் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பிஎஸ்ஜி நிர்வாகிகள் கூறுகையில், ‘நெய்மர் உட்பட 3 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆனால் 3 வீரர்களுமே எந்த அறிகுறிகளும் இல்லாமல் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் உள்ளனர். இருப்பினும் அவர்கள் 3 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அணியின் மற்ற வீரர்களுக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள இருக்கிறோம். அதில் பெறப்படும் முடிவுகளை பொறுத்து, வரும் 10ம் தேதி நடைபெறும் போட்டியில் அணி பங்கேற்பது குறித்து முடிவு செய்யப்படும்’’ என்று தெரிவித்துள்ளனர்.

நெய்மர் தவிர மற்ற 2 வீரர்களின் பெயர்களையும் பிஎஸ்ஜி நிர்வாகம் இதுவரை அறிவிக்கவில்லை.

இருப்பினும் அர்ஜென்டினா வீரர் ஏஞ்சல் டி மரியா மற்றும் லியாண்ட்ரோ பரடேஸ் ஆகிய இருவருக்கும் கொரோனா பாசிட்டிவ் என்று பிரான்ஸ் நாட்டின் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

.

மூலக்கதை