செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றி மோடி அறிவிப்பு: பெண்கள் திருமண வயதை மாற்ற முடிவு

தினகரன்  தினகரன்
செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றி மோடி அறிவிப்பு: பெண்கள் திருமண வயதை மாற்ற முடிவு

* அனைவருக்கும் சுகாதார அடையாள எண்* கொரோனாவுக்கு 3 தடுப்பூசிகள் தயாராகிறதுபுதுடெல்லி: பெண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயதை மாற்றியமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக, டெல்லி செங்கோட்டையில் நேற்று  தேசியக்கொடியை ஏற்றி வைத்து ஆற்றிய சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி அறிவித்தார். அதோடு, நாடு முழுவதும் ஒவ்வொருக்கும் தனித்தனி  சுகாதார அடையாள எண் (ஐடி), சுகாதார கணக்கு தொடங்கப்பட இருப்பதாகவும், கொரோனாவுக்கு மூன்று தடுப்பூசிகள் இந்தியாவில் தயாராகி  வருவதாகவும் அறிவித்தார். நாட்டின் 74வது சுதந்திர தின விழா, கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் நாடு முழுவதும் நேற்று  கொண்டாடப்பட்டது. கொரோனா பாதிப்புக்கு மத்தியிலும் சமூக இடைவெளியை கடைபிடித்து, நாட்டின் அனைத்து பகுதியிலும் மக்கள் வழக்கமான  உற்சாகத்துடன் தேசியக்கொடி ஏற்றி சுதந்திர தினத்தை கொண்டாடினர். டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி மூவர்ண தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். முன்னதாக அவர், ராஜ்கோட்டில் மகாத்மா காந்தி  நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். தேசியக்கொடியை ஏற்றி வைத்த பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு சுதந்திர தின உரையாற்றினார்.சுதந்திர போராட்ட வீரர்களுக்கும், எல்லையில் வீரமரணம் அடைந்த பாதுகாப்பு படை வீரர்களுக்கும் அஞ்சலி செலுத்திய அவர், கொரோனா வைரசை  எதிர்த்து போராடும் டாக்டர்கள், நர்ஸ்கள், மருத்துவ மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு தனது பாராட்டையும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.  130 கோடி மக்களின் முயற்சியால் நாடு கொரோனாவை வெற்றி கொள்ளும் எனக்கூறி உரையை தொடங்கிய பிரதமர் கூறியதாவது:கொரோனாவுக்கான மருந்து மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒன்றாக இருந்து வருகிறது. நம் விஞ்ஞானிகள், ‘முனிவர்கள், ரிஷிகளை’ போல் திறமை  படைத்தவர்கள். அவர்கள் கொரோனா மருந்தை கண்டறிய ஆய்வகங்களில் இரவு பகலாக பாடுபட்டு வருகின்றனர். இந்தியாவில் 3 தடுப்பு மருந்துகள்  வெவ்வேறு கட்டங்களில் தயாராகி வருகின்றன. அவைகளுக்கு விஞ்ஞானிகளின் ஒப்புதல் கிடைத்ததுமே, பெரிய அளவில் உற்பத்தி செய்யும் பணி  தொடங்கப்படும். நாட்டில் அனைவருக்கும் கொரோனா மருந்து கிடைப்பதற்கான திட்டம் வகுக்கப்பட்டு விட்டது. அனைவருக்கும் தடுப்பு மருந்து  வழங்கப்படும். அதுவும் மிக குறுகிய காலத்திலேயே செய்து முடிக்கப்படும்.அதே போல், சுகாதார துறையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தக் கூடிய தேசிய டிஜிட்டல் சுகாதார திட்டம் இன்று முதல் தொடங்கப்படுகிறது.  தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிக்கக் கூடிய இத்திட்டம், இன்றிலிருந்தே நடைமுறைக்கு கொண்டு வரப்படும். இது நம் சுகாதாரத் துறையில் பெரிய  அளவில் மாற்றத்தை ஏற்படுத்தும். இத்திட்டத்தின் மூலம், சிகிச்சை பெறுவதில் உள்ள இடர்பாடுகள் தொழில்நுட்பத்தின் உதவியுடன் தவிர்க்கப்படும்.  இத்திட்டத்தின்கீழ், நாட்டில் ஒவ்வொருவருக்கும் சுகாதார அடையாள எண் (ஐடி) வழங்கப்படும். சுகாதார கணக்கு தொடங்கப்படும். ஒருவர்  மருத்துவமனைக்கு சென்று எந்த சோதனை, நோய்க்கான சிகிச்சை எடுத்துக் கொண்டாலும் அதற்கான மருத்துவ அறிக்கை மற்றும் எடுத்துக் கொண்ட  மருந்துகள் உட்பட அனைத்து தகவல்களும் அந்த நபரின் சுகாதார கணக்கில் சேமிக்கப்படும். ஒருவரின் சுகாதார ஐடி எண்ணை கொண்டு அவரது உடல் நலப் பிரச்னைகளுக்கு எளிதாக தீர்வு காண நடவடிக்கை எடுக்கலாம். சக்தி வாய்ந்த  பெண்கள் நாட்டை பெருமை அடையச் செய்பவர்கள். பெண்களுக்கு சரியான வாய்ப்பு அளிக்கப்படும் போது, அவர்கள் நாட்டிற்கு பெருமை தேடித்  தருவதோடு நாட்டை வலுவாக்குகின்றனர். அந்த வகையில் இன்று நமது நாடு பெண்களுக்கு சுய தொழிலிலும், வேலை வாய்ப்பிலும் சம வாய்ப்பு  வழங்க உறுதிபூண்டுள்ளது. இன்று பெண்கள் நிலக்கரி சுரங்கங்களில் பூமியின் கீழேயும், போர் விமானங்கள் மூலம் ஆகாயத்திலும்  பணியாற்றுகின்றனர். உலகிலேயே கடற்படையிலும், விமானப்படையிலும் பெண்களின் பங்களிப்பை கொண்டுள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று. 40  கோடி ஜன்தன் வங்கி கணக்குகளில் 22 கோடி கணக்கு வைத்திருப்பவர்கள் பெண்கள். கொரோனா பாதிப்பிலும் கூட தங்களின் ஜன்தன் கணக்கில் ரூ.30,000 கோடி டெபாசிட் செய்து நாட்டின் பொருளாதாரத்திற்கு அவர்கள் உதவி உள்ளனர்.பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா, முத்ரா கடன் வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பெண்கள் பெருமளவில் பயன்படுத்திக்  கொள்கின்றனர். அதே போல, ஏழை பெண்களின் நலனில் மத்திய அரசும் அக்கறை கொண்டுள்ளது. அவர்களுக்காக 6 ஆயிரம் ஆஷாதி கேந்திராக்கள்  மூலம் ரூ.1க்கு சானிடரி நாப்கின் வழங்கப்படுகிறது. குறுகிய காலத்தில் இந்த நாப்கின் 5 கோடி பெண்களை சென்றடைந்துள்ளது. தற்போது  பெண்களின் குறைந்தபட்ச திருமண வயது 18 ஆகவும், ஆண்களின் வயது 21 ஆகவும் உள்ளது. நம் மகள்கள் பல்வேறு சாதனைகள் படைத்து வரும்  இந்த சூழலில், அவர்களின் குறைந்தபட்ச திருமண வயதை மறுபரிசீலனை செய்ய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அக்குழுவின் ஆலோசனைப்படி திருமண வயது விஷயத்தில் அரசு சரியான முடிவை அறிவிக்கும்.  இன்று, எல்லைப் பகுதிகளில் நம் நாட்டின் இறையாண்மை மீது யாராவது (சீனா, பாகிஸ்தான்) கொடூர கண் கொண்டு பார்த்தால், அவர்களுக்கும்  புரியும் மொழியில் நம் பாதுகாப்பு படை சரியான பதிலடி கொடுத்து வருகிறது. லடாக்கில் நம் வீரர்களின் அசாத்திய வீரத்தை இந்த உலகம்  பார்த்துள்ளது. நம் இறையாண்மையை பாதுகாக்கும் திறன் படைத்தவர்கள் நாங்கள் என்பதை உலகுக்கு உணர்த்தியுள்ளோம். நம் தாய்நாட்டிற்காக தன்  இன்னுயிரை தியாகம் செய்த வீரமிகு வீரர்களுக்கு நான் தலைவணங்குகிறேன். கொரோனா பாதிப்புக்கு மத்தியில், தற்சார்பு இந்தியா என்ற தீர்மானத்தை இந்தியர்கள் ஏற்றுள்ளனர். தற்சார்பு என்பது வெறும் வார்த்தையல்ல,  ஒவ்வொரு இந்தியனுக்கும் அது தாரக மந்திரம். உலகமே இந்தியாவின் தற்சார்பு கொள்கையை உற்றுநோக்கி வருகிறது. ‘மேக் இன் இந்தியா’ என்ற  மந்திரத்தோடு மட்டுமல்ல ‘மேக் பார் வேர்ல்ட்’ என்ற உலகத்திற்கான தயாரிப்புகளை உருவாக்குவதை நோக்கி நாம் முன்னேற வேண்டும். இதற்காக  பல்வேறு மறுசீரமைப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது. அந்நிய நேரடி முதலீட்டை ஈர்க்க பல மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. நம்  விவசாயிகளுக்கு இருந்த தடைகள் தகர்க்கப்பட்டுள்ளன. அவர்கள் தங்கள் விளைபொருட்களை உள்ளூர் மண்டிகளை தாண்டி உலகளவில் ஏற்றுமதி  செய்யும் அளவுக்கு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. உள்ளூர் தயாரிப்பு பொருட்களுக்கு குரல் கொடுப்பதன் மூலம் இந்தியா அனைத்து துறையிலும் நிச்சயம் தற்சார்பு அடையும். இந்திய தயாரிப்புகள்  உலகிலேயே சிறந்ததாக இருக்க வேண்டுமென்ற கனவு நனவாகும். * தற்சார்பு, வளர்ச்சி, மகிழ்ச்சிகரமான இந்தியாவை உருவாக்குவதில் கல்வி முக்கிய பங்கு வகிக்கிறது. இதற்காக 30 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய  தேசிய கல்விக் கொள்கையை வகுத்துள்ளோம். இது 21ம் நூற்றாண்டுக்கான இந்தியாவை வடிவமைக்கும். * நாட்டின் பொருளாதாரத்தை பெருக்கவும், வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும் ரூ.110 லட்சம் கோடியில் தேசிய உள்கட்டமைப்பு திட்டங்கள்  மேற்கொள்ளப்பட உள்ளன. * அடுத்த ஆயிரம் நாட்களில் 6 லட்சம் கிராமங்கள் இணையதள வசதியை பெறுவதற்கான ஆப்டிக்கல் பைபர் இணைப்பை பெற உள்ளன. நம் நாட்டில்  1300 தீவுகள் உள்ளன. *  நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட 100 நகரங்களில் மாசுக்களை குறைப்பதற்கான சிறப்பு திட்டம் தொடங்கப்படும். * விரைவில் ஆசிய வகைச் சிங்கங்கள், டால்பின்கள் வளர்ச்சி மேம்பாட்டுக்கான திட்டமும் அறிவிக்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.விழாவில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மாநிலங்களவை  எதிர்க்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், மத்திய அமைச்சர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.நாப்கின் பேச்சுக்கு பாராட்டுபிரதமர் மோடி தனது உரையில், ‘‘நாடு முழுவதும் 6 ஆயிரம் ஆஷாதி கேந்திரா மையங்கள் மூலம் குறுகிய காலத்தில் 5 கோடி பெண்களுக்கு ரூ.1  விலையில் சானிடரி நாப்கின் வழங்கப்பட்டுள்ளது,’’ என்றார். இதற்கு டிவிட்டரில் பாலிவுட் நடிகர் அக்சய் குமார் உட்பட பலரும் பாராட்டு  தெரிவித்துள்ளனர். ‘‘எனக்காக சானிடரி நாப்கின் வாங்கி வருமாறு குடும்பத்தினரிடம் கூறினால், அவர்கள் செய்ய மாட்டார்கள், அதற்கான காரணத்தை  அவர்கள் அறிவார்கள். ஆனால், என் பிரதமர் உச்சத்தை எட்டியுள்ளார். சிறந்த சுகாதார தேவைக்காக மலிவான விலையில் நாப்கின் வழங்கப்படுவதைப்  பற்றி அவர் தைரியமாக பேசியிருக்கிறார்...!’ என பெண் ஒருவர் புகழ்ந்துள்ளார். இதுபோல், பலரும் பாராட்டி உள்ளனர்.

மூலக்கதை