தந்தை இறந்த துக்கத்தை தாங்கி வீர நடை போட்ட மகேஸ்வரிக்கு'சல்யூட்!'

தினமலர்  தினமலர்
தந்தை இறந்த துக்கத்தை தாங்கி வீர நடை போட்ட மகேஸ்வரிக்குசல்யூட்!

திருநெல்வேலி :தந்தை இறந்த சோகத்திலும்,சுதந்திர தின அணிவகுப்பை முன்னின்று நடத்திய,திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் மகேஸ்வரியை பலரும் பாராட்டிவருகின்றனர். துக்கத்தை தாங்கியபடி, படை நடத்தி கடமையாற்றிய அவருக்கு, பலரும்மனதார, 'சல்யூட்' அடித்து கவுரவப்படுத்தி வருகின்றனர். சுதந்திர தின விழா நேற்று நாடு முழுதும் கொண்டாடப்பட்டது. திருநெல்வேலி வ.உ.சி., மைதானத்தில், நேற்று கொண்டாடப்பட்ட சுதந்திர தின விழாவில், மாவட்ட கலெக்டர் ஷில்பா கொடியேற்றினார்.போலீஸ் அணிவகுப்பு மரியாதையை, ஜீப்பில் நின்றபடி, எஸ்.பி., மணிவண்ணனுடன் சேர்ந்து ஏற்றுக்கொண்டார்.

அணிவகுப்பு



சுதந்திர தின விழா, போலீஸ் அணிவகுப்பை முன்னின்று நடத்தியவர், திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி, 42. காலை, 8:45 மணிக்கு துவங்கிய சுதந்திர தின விழா காலை, 9:30 மணிக்கு முடிவடைந்த நிலையில், கண்களில் கண்ணீர் மல்க, அழுதபடி மைதானத்தில் இருந்து மகேஸ்வரி வெளியேறினார். சக போலீசார் விசாரித்த போது தான், மகேஸ்வரியின் தந்தை நாராயணசாமி, 83, உடல்நலம் பாதிக்கப்பட்டு, நேற்று முன்தினம் இரவு, 10:00 மணியளவில் இறந்தது தெரிய வந்தது.திண்டுக்கல் மாவட்டம், வடமதுரையில் நேற்று நடந்த இறுதிச் சடங்கில், மகேஸ்வரி குடும்பத்தினரோடு பங்கேற்றார். மகேஸ்வரியின் கணவர் பாலமுருகன், திருநெல்வேலி போலீசில், நுண்ணறிவு பிரிவில் ஏட்டாக உள்ளார்.இது குறித்து, பாலமுருகன் கூறியதாவது: இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி தான், சுதந்திர தின அணிவகுப்பை முன்னின்று நடத்த வேண்டும். அவரது தந்தை மரணம் குறித்து இரவு, 10:30 மணிக்கு தான் எங்களுக்கு தெரிய வந்தது. இரவில், சில போலீஸ் அதிகாரிகளிடம் பேசி, மாற்று ஏற்பாடு செய்ய முயற்சித்தார். ஆனால், காலை, 7:00 மணிக்கு மைதானத்தில் நிற்க வேண்டும் என்பதாலும், பயிற்சி எடுக்காமல், திடீரென ஒருவர் அணிவகுப்பை முன்னின்று நடத்த முடியாது என்பதாலும், பலரும் தவிர்த்தனர். விடிய விடிய பெற்றோர் வீட்டில் உள்ளவர்களுடன், போனில் பேசியபடி அழுது கொண்டு இருந்தார். காலையில் அணிவகுப்பை முடித்து விட்டு, கிளம்ப முடிவெடுத்தோம்.

'இ - பாஸ்' சிக்கல்



திண்டுக்கல்லுக்கு காரில் செல்ல விண்ணப்பித்த, 'இ - பாஸ்' கேன்சலானது. இதனால், போகிற வழியில், போலீசாரிடம் சொல்லியபடியே சென்றோம். போலீஸ் கமிஷனர் தீபக் தாமோர், எஸ்.பி., மணிவண்ணன், திண்டுக்கல் எஸ்.பி., ரவளி பிரியா ஆகியோர் போனில் ஆறுதல் தெரிவித்தனர். இவ்வாறு அவர் கூறினார்.

வழக்கமாக சுதந்திர தின விழா, போலீஸ் அணி வகுப்புகளை தலைமையேற்று நடத்தும் அதிகாரிகளாக, ஆண்கள் தான் இருப்பர்.ஆனால், தமிழக ஆயுதப்படையின் முதல் பெண் இன்ஸ்பெக்டர் என்ற பெயர் பெற்ற மகேஸ்வரி, தந்தை மரணம் பற்றி அறிந்தும், கடமையை நிறைவேற்றிய பின், இறுதிச் சடங்கில் பங்கேற்றதால், அனைவரின் பாராட்டையும் பெற்று வருகிறார்.ஆயுதப்படையின் முதல் பெண் இன்ஸ்பெக்டர்மகேஸ்வரி, 1997ல், போலீஸ் பணியில் சேர்ந்தார். 2008ல், ஆயுதப்படை எஸ்.ஐ.,யானார். 2018ல், ஆயுதப்படை இன்ஸ்பெக்டரானார்.இதன் வாயிலாக, தமிழகத்தில் ஆயுதப்படை இன்ஸ்பெக்டரான முதல் பெண் என்ற பெருமை பெற்றார்.இதற்கு முன், கன்னியாகுமரியில் இத்தகைய போலீஸ் அணிவகுப்பை முன்னின்று நடத்தியுள்ளார்.



மூலக்கதை